Published : 25 Jun 2016 09:40 AM
Last Updated : 25 Jun 2016 09:40 AM
இந்தியாவில் பிறந்த ஆங்கில நாவல் ஆசிரியரும், பத்திரிகையாளருமான ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) பிறந்த தினம் இன்று (ஜூன் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இந்தியாவில் ஆங்கில ஆட்சி நடந்த போது, பிஹாரில் (1903) பிறந் தார். தந்தை இந்திய சிவில் சர் வீஸில் பணி புரிந்தவர். இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளேயர். 1 வயது குழந்தையாக இருந்தபோது, அம்மா இவரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றார்.
* இங்கிலாந்தில் அம்மாவுடனும் சகோதரிகளுடனும் வாழ்ந்து வந் தார். தந்தையைப் பார்ப்பதற்காக எப்போதாவது இந்தியாவுக்கு வந்து செல்வார்கள். முதல் உலகப்போருக்குப் பிறகு, ஷிப்லேக் என்ற இடத்தில் குடியேறினர்.
* சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்பது அவரது சிறுவயது கனவு. மீன்பிடிப்பது, பறவைகளை ரசிப்பது பிடித்த பொழுதுபோக்கு. கத்தோலிக்க கான்வென்ட்டில் 5 வயதில் சேர்க்கப்பட்டார். அப்போதே அதிகார அடக்குமுறைக்கு எதிராக சிந்தித்தார். பதின் பருவத்தில் இவரது முதல் கவிதை வெளியானது. பின்னர், கல்வி உதவித்தொகை பெற்று தனியார் பள்ளியில் சேர்ந்தார்.
* பர்மாவில் பிரிட்டிஷ் இம்பீரியல் போலீஸில் சேர்ந்து 1927 வரை பணி புரிந்தார். இதையடுத்து ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண் டார். அரசு, அதிகார வர்க்கத்தில் இருந்து முழுவதுமாக விலகி, ஒரு எழுத்தாளராகவே இருந்துவிடுவது என அப்போதுதான் தீர்மானித்தார்.
* எழுத்துப் பணிக்கு தடங்கல் ஏற்படாதவாறு, பல்வேறு வேலைகள் செய்தார். 1935-ல் ‘ஜார்ஜ் ஆர்வெல்’ என்ற புனைப்பெயரில் நாவல்கள் எழுதினார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். பத்திரிகைகளிலும் பணியாற்றினார். பிபிசி.க்காக கட்டுரைகள், செய்திக் கட்டுரைகள், நிகழ்ச்சிக்கான உரையாடல்களை எழுதினார்.
* 1937-ல் ஸ்பானிய உள்நாட்டுப் போரில் கலந்துகொண்டார். போர் அனுபவங்களை ‘அனிமல் ஃபார்ம்’ என்ற நாவலாக வடித்தார். இது ‘விலங்குப் பண்ணை’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. 1948-ல் எழுதி முடித்த நாவலுக்கு அதன் கடைசி இரு இலக்கங்களை திருப்பிப் போட்டு ‘நைன்டீன் எய்ட்டி-ஃபோர்’ என்று தலைப்பிட்டார்.
* உன்னதமான நோக்கங்களோடு தொடங்கும் எல்லா புரட்சியும் காலப்போக்கில் அதிகார போதையால் அழிந்து போகும் அவலத்தை இந்த 2 படைப்புகளும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டின. இவை உலகப் புகழ்பெற்றன. இதுதவிர, பல நாவல்களை எழுதினார். ஏராளமான கவிதைகளையும் படைத்தார். இவை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
* கருத்துத் தெளிவு, சர்வாதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாடுகள், ஜனநாயக சமதர்மத்துக்கு ஆதரவு, சமூக அநீதிகளுக்கு எதிரான சீற்றம், மொழி ஆளுமை ஆகியவை இவரது படைப்புகளில் எதிரொலித்தன. புனைகதைகள், தத்துவம் சார்ந்த கட்டுரைகள், கவிதைகள், இலக்கிய விமர்சனங்கள் என இலக்கியத்தின் பல்வேறு களங்களில் முத்திரை பதித்தார்.
* இலக்கியம், அரசியல், மொழி, பண்பாடு குறித்தும் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் உருவாக்கிய புதுமொழிகள் (neo*ogisms) இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஆர்வேலியன் (Orwe**ian) என்ற பதமும் ஆங்கில வெகுஜனப் பயன்பாட்டில் உள்ளது.
* இவரது ‘1984’ நாவலைத் தழுவி ‘பிக் பிரதர்’, ‘ரூம் 101’ ஆகிய தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கப்பட்டன. ஆங்கில இலக்கியப் படைப்பாளிகளில் முக்கியமானவராகப் போற்றப்படும் ஜார்ஜ் ஆர்வெல், காசநோயால் பாதிக்கப்பட்டு 47-வது வயதில் (1950) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT