Published : 14 Feb 2017 09:56 AM
Last Updated : 14 Feb 2017 09:56 AM

மார்கரெட் நைட் 10

இயந்திரங்களை உலகுக்குத் தந்த சாதனைப் பெண்

19-ம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான அமெரிக்கப் பெண் கண்டுபிடிப்பாளர் மார்கரெட் ஈ. நைட் (Margaret E. Knight) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 14). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

* அமெரிக்காவில் யார்க் என்ற சிறுநகரில் பிறந்தவர் (1838). 12-வது வயதில் படிப்பை நிறுத்திவிட்டு பருத்தி ஆலையில் பணியாற்றத் தொடங்கினார். அவ்வப்போது நெசவுத்தறியில் குறுக்கு இழைகளை எடுத்துச்செல்லும் கருவி நழுவி அங்கு வேலை பார்க்கும் சிறுவர்களைப் பதம் பார்ப்பது வாடிக்கையான நிகழ்வு.

* இந்தச் சிறுமி இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று எண்ணி அந்த ஷட்டிலுக்கு மாற்றாக ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தார். இதை அந்த நிர்வாகம் பயன்படுத்தத் தொடங்கியது. மெல்ல மெல்ல நாடு முழுவதும் இது பயன்பாட்டுக்கு வந்தது.

* இந்தச் சிறுமி, இதனால் எந்த வகையிலும் பலனடையவில்லை. ஆனால், இந்த அனுபவம் அவளுக்கு பின்னாளில் பல்வேறு சாதனங்களைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையையும், கற்பனைத் திறனையும், விடாமுயற்சியையும் வழங்கியது. சில ஆண்டுகளில் நியு ஹாம்ஷயரில் கொலம்பியா பேப்பர் பேக் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் அங்கு குடியேறினார்.

* அந்த நாட்களில் பொருள்களை வாங்க காகிதத்தை மடித்து ‘v’ வடிவில் அடியில் ஒட்டி பயன்படுத்தினார்கள். அடித்தட்டையான (flat bottomed) பைகளைக் கைகளால் செய்வது மிகவும் கஷ்டமாகவும் நேரம் பிடிக்கும் வேலையாகவும் இருந்தது. காகிதப் பை செய்யும் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இவருக்கு இதற்கான ஒரு இயந்திரம் கண்டறியும் யோசனை பிறந்தது.

* ஒரே மாதத்துக்குள் இந்த இயந்திரத்தை வடிவமைத்தார். ஆறே மாதங்களில் மரத்தாலான மாதிரி ஒன்றை உருவாக்கினார். இந்த இயந்திரம் காகிதத்தை வெட்டி, மடித்து, ஒட்டிவிடும். இந்த மாதிரி இயந்திரம் 1000-க்கும் மேற்பட்டப் பைகளைத் தயாரித்தது. இதற்கான உரிமம் கோர, இதைவிட சிறப்பாக செயல்படக்கூடிய இரும்பாலான இயந்திரத்தை தயாரிக்க விரும்பினார்.

* இந்த மாடலை உள்ளூர் கடைக்கு எடுத்துச்சென்று, அங்குள்ள இயந்திரங்கள் உருவாக்கும் வல்லுநரோடு ஒன்றிணைந்து இதை இரும்பில் தயாரித்தார். திருப்தியான வடிவில் வந்த பிறகு உரிமத்துக்காக விண்ணப்பித்தார். ஆனால், இவரது இயந்திர வடிவமைப்பு முறைகளை வேறு ஒருவர் திருடி, வடிவமைத்து ஏற்கெனவே காப்புரிமை பெற்றுவிட்டார்.

* பின்னர் அவர் மேல் வழக்குத் தொடுத்து வெற்றிப்பெற்றார் மார்கரெட். 1879-ம் ஆண்டில் இவருக்கு இதற்கான காப்புரிமை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவரது புகழ் பரவியது. உலகம் முழுவதும் காகிதப் பைகள் பயன்படுத்தப்பட்டன. ஈஸ்டர் பேப்பர் பேக் கம்பெனியைத் தொடங்கினார்.

* ஷூக்களின் அடிப்பாகத்தை வெட்டும் இயந்திரம், தையல் இயந்திரத்தின் உருளை, பேப்பர் ஃபீடிங் மிஷின், எண்ணிடும் கருவி, உருளைப் பரப்புகளைத் துளைக்கும் அல்லது இழைக்கும் தானியங்கி கருவி உள்ளிட்ட ஏராளமான இயந்திர சாதனங்களைத் தொடர்ந்து கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார்.

* இவரது 70-வது வயதில்கூட தினமும் இருபது மணிநேரம் வேலை செய்தார். ஏறக்குறைய 100 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.

* பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத சூழல், வறுமைத் துயர், அங்கீகாரம் மறுக்கப்பட்ட அவலம் உள்ளிட்ட தடைகளைத் தகர்த்து, படைப்பாற்றல் துணையுடன் எளிய ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த பல இயந்திர சாதனங்களை உலகுக்குத் தந்த சாதனைப் பெண்மணி மார்கரெட் நைட் 1914 அக்டோபர் மாதம் 76-ம் வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x