Published : 15 Mar 2017 10:35 AM
Last Updated : 15 Mar 2017 10:35 AM
ரஷ்ய நுண்ணுயிர் அறிஞர்
உயிர்க்கொல்லி நோய்களுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த ரஷ்ய நுண்ணுயிர் அறிஞர் வால்டெமர் ஹாஃப்கின் (Waldemar Haffkine) பிறந்த தினம் இன்று (மார்ச் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ரஷ்யாவின் ஒடெஸா நகரில் யூதக் குடும்பத்தில் (1860) பிறந்தார். இவரது 7 வயதில் தாய் இறந்தார். வியாபார வேலையாக தந்தையும் அவ்வப்போது வெளியே சென்றுவிடுவதால், இவரது குழந்தைப் பருவம் பெரும்பாலும் தனிமையிலேயே கழிந்தது. புத்தகம் படிப்பதுதான் இவருக்கு ஒரே துணை.
* பள்ளிப் படிப்புக்குப் பிறகு, ஒடெஸா பல்கலைக்கழகத்தில் இயற்பியல், கணிதம், விலங்கியல் கற்றார். அங்கு நுண்ணுயிரியல் நிபுணர் ஈலி மெச்னிகாஃப்பின் பணிகளால் ஈர்க்கப்பட்டார். அவருடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார்.
* இதற்கிடையே யூத தற்காப்புக் கழகத்தில் இணைந்து செயல்பட்டதால் கைது செய்யப்பட்டவர், மெச்னிகாஃப் உதவியால் விடுதலையானார்.
* இயற்கை அறிவியலில் பட்டம் பெற்றார். விலங்கியல் அருங்காட்சி யகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். படிப்புச் செலவுக்காக மாண
* வர்களுக்கு டியூஷன் வகுப்பு எடுத்தார். அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். தனது ஆராய்ச்சிகள் குறித்து பல கட்டுரைகளை எழுதினார். அவை பிரபல அறிவியல் இதழ்களில் வெளிவந்தன. ஆனாலும், ரஷ்யாவில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
* இதனால், 1888-ல் பாரிஸில் குடியேறினார். அங்கு ஜெனீவா மருத்துவக் கல்லூரியில் துணை விரிவுரையாளராக சேர்ந்தார். பாஸ்டர் சோதனைக் கூடத்தில் நடந்துவந்த நோய்த் தடுப்பு ஆராய்ச்சிக் களத்தில் இணைந்தார். காலரா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டார். அதை விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதித்ததில், வெற்றி கிடைத்தது.
* முதன்முதலாக 1892-ல் அதை தனக்குத் தானே செலுத்தி சோதித்துப் பார்த்தார். பல விஞ்ஞானிகள் இதைப் பாராட்டினாலும், பிரான்ஸ்,
* ஜெர்மனி, ரஷ்யாவில் இந்த மருந்துக்கு வரவேற்பு இல்லை. அப்போது, இந்தியாவில் காலரா நோய் வேகமாகப் பரவியது.
* பிரான்ஸில் இருந்த, இந்தியாவின் முன்னாள் வைஸ்ராய் டஃபின், இவரது தடுப்பூசி மருந்து குறித்து கேள்விப்பட்டு, இவரை
* இந்தியாவுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, கல்கத்தாவில் இந்த மருந்தை அறிமுகம் செய்தார். ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள், பின்னடைவுகளைச் சந்தித்தாலும் பின்னர் இந்தத் தடுப்பூசி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
* பாரிஸ் திரும்பி, ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1896-ல் பம்பாயில் பிளேக் நோய் தாக்கியபோது, பிரிட்டிஷ் அரசின் அழைப்பை ஏற்று பம்பாய் வந்தார். கிராண்ட் மெடிக்கல் கல்லூரி ஆய்வுக்கூடத்தைப் பயன்படுத்தி பிளேக் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் முறைகளைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
* முதலில் தாமாக முன்வருபவர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் கண்ணெதிரே, தன் உடலில் இந்த மருந்தை செலுத்திக்கொண்டார். பின்னர் இதுவும் ஏற்கப்பட்டது. பெரும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன.
* அரசுப் பதவியில் இருந்து 1914-ல் ஓய்வுபெறும்வரை இந்தியாவில் பணியாற்றியவர், பின்னர் பாரிஸ் திரும்பினார். மருத்துவ இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்தார். பம்பாய் பிளேக் சோதனைக்கூடத்துக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
* இங்கிலாந்தைச் சேர்ந்த தலைசிறந்த விஞ்ஞானி ஜோசப் லிஸ்டர் இவரை ‘மனிதகுலக் காப்பாளர்’ எனப் போற்றினார். இறுதிவரை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளிலும் நோயைக் குணப்படுத்தும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுவந்த வால்டெமர் ஹாஃப்கின் 70-வது வயதில் (1930) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT