Published : 04 Feb 2017 10:20 AM
Last Updated : 04 Feb 2017 10:20 AM
ஜெர்மனி அறிவியலாளர்
நவீன காற்று இயக்கவியலின் தந்தை என்று போற்றப்படும் ஜெர்மானிய அறிவியலாளர் லுட்விக் பிராண்டில் (Ludwig Prandtl) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஜெர்மனியின் ஃபிரெய்சிங் நகரில் (1875) பிறந்தார். தந்தை விவசாயக் கல்லூரிப் பேராசிரியர். விவசாயத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டவர். லுட்விக் அறிவுக்கூர்மைமிக்க மாணவராகத் திகழ்ந்தார். வகுப்பில் முதல் மாணவனாகப் பிரகாசித்தார்.
* அம்மாவின் மனநலம், உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரது தங்கையிடம் வளர்ந்தார் லுட்விக். அப்பாவும் மகனுடன் நிறைய நேரம் செலவிட்டார். அவரே மகனுக்கு இயற்பியல் கற்பித்தார். ஓவியமும், இசையும் இவருக்கு மிகவும் பிடித்தவை. அருமையாக பியானோ வாசிப்பார்.
முனிச் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்றார். லத்தீன், கிரேக்க மொழிகள், அறிவியலில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். அங்கு உதவி ஆசிரியராகப் பணியாற்றியபோது, பொருட்களின் உறுதி - நெகிழ்ச்சித் தன்மைகள் குறித்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
* இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஹானோவர் தொழில் நுட்பக் கல்வி அமைப்பின் இயக்கவியல் பேராசிரியராக நியமிக் கப்பட்டார். ஜெர்மனியில் முதன்முதலாக விண்வெளி ஆய்வுகளுக் கான ஆசிரியராக நியமிக்கப்பட்டார். புதிதாகத் தொடங்கப்பட்ட இன்ஸ்டிடியூட் ஃபார் ஏரோடைனமிக் டெஸ்டிங் அமைப்பில் தலைமைப் பதவியில் இருந்து பல ஆண்டுகள் வழிநடத்தினார்.
* கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கு காற்று இயக்கவியல், நீர் இயக்கவியல் துறைகளுக்கான அமைப்பை நிறுவினார். இது உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக உயர்ந்தது. தான் ஏற்கெனவே மேற்கொண்டுவந்த திரவ இயக்க வியல் ஒலி கோட்பாடு அடிப்படையை வழங்குவதிலும் முனைப்புடன் செயல்பட்டார்.
* கணிதத்திலும் சிறந்து விளங்கினார். பின்னாளில் திரவ இயக்கவியலுக்கான மாக்ஸ் பிளாங்க் கல்வி நிறுவனமாக மாறிய கெய்சர் வில்ஹெம் நிறுவன இயக்குநராகப் பதவி வகித்தார். எல்லைப்படலம் குறித்த இவரது கண்டுபிடிப்புகள் விமான இறக்கைகள் மற்றும் பிறவகை இயந்திரங்களின் இழுவிசைத் தன்மையை ஒழுங்குபடுத்த உதவின. இவை காற்று இயக்கவியலின் அடிப்படைக் கோட்பாடுகளாக மாறின.
* தான் கண்டறிந்த கணிதவியல் பகுப்பாய்வு முறைகளைக் காற்று இயக்கவியல் சார்ந்த ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினார். இவர் உருவாக்கிய கணித மாதிரிகள்தான் வானூர்திப் பொறியியலின் அடிப்படைத் தத்துவங்களாக அறியப்படுகின்றன. அழுத்தத்துக்கு உள்ளாகக்கூடிய நீரோட்டங்களின் ஓட்டம் குறித்த பகுப்பாய்விலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர். ஜெர்மனியின் முதல் சூப்பர்சானிக் காற்று சுரங்க கட்டுமானம் இவரது மேற்பார்வையில் நடைபெற்றது.
* காற்றியலுக்கான அடிப்படைக் கணிதவியல் பகுப்பாய்வுகளையும் கண்டறிந்து மேம்படுத்தினார். பெர்லினில் உள்ள அறிவியல் வான்வெளிக் கழகத்தின் நிறுவன உறுப்பினர், தலைமை இயக்குநராகவும் செயல்பட்டார். கோட்டிங்கனில் உள்ள அறிவியல் கழகத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார்.
* திரவங்களின் விரவல்தன்மை தொடர்பாக இவர் கண்டறிந்த விகிதாச் சாரம் ‘பிராண்டில் எண்’ என இவரது பெயரால் வழங்கப்படுகிறது. பொருட்களின் இழுவைத் திறன், எளிதில் உருமாறும் திறன், பாய்வியல், தாக்குப்பிடிக்கும் தன்மை, கடல் கொந்தளிப்பு, சுழல் உருவாக்கம், காற்று இயக்கவியல், அளவியல் உள்ளிட்ட பல துறைகளில் இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.
* உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களும் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. நவீன காற்று இயக்கவியலின் தந்தை எனப் போற்றப்படும் லுட்விக் பிராண்டில் 78-வது வயதில் (1953) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT