Published : 08 Oct 2014 11:30 AM
Last Updated : 08 Oct 2014 11:30 AM
நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படைப் புரதமான ‘இமினோகுளோபின்’ குறித்து ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற ரோட்னி ராபர்ட் போர்ட்டரின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
• இங்கிலாந்தில் எழுத்தராக வேலை பார்த்த ஜோசப் போர்ட்டரின் மகன் ரோட்னி ராபர்ட். லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் துறையில் பட்டம் பெற்றார்.
• வேதியியல் ஆய்வுகளுக்காக 2 முறை நோபல் பரிசு பெற்ற பிரடெரிக் சாங்கரிடம் முனைவர் ஆய்வுக்காக பணிபுரிந்தார். முனைவர் பட்டத்துக்காக அவரிடம் சேர்ந்த முதல் பயிற்சி மாணவரும் இவரே.
• இரண்டாம் உலகப் போரின்போது 6 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். இதன் காரணமாக, அவரது கல்வி தடைபட்டது. அல்ஜீரியா, சிசிலி, இத்தாலி ஆகிய இடங்களில் நடந்த போரில் பணியாற்றிவிட்டு மீண்டும் வந்து ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார்.
• ரத்த வகைகளைக் கண்டுபிடித்த கார்ல் லான்ட்ஸ்டெய்னரின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டார். அதுவே இவரை ரத்தம் தொடர்பான ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டத் தூண்டியது.
• உடலில் அந்நியப் பொருட்கள் புகுந்தால், அதை எதிர்க்கும் விதமாக, உடலில் தானாகவே எதிர் உயிரிகள் (Anti bodies) சுரக்கின்றன. இதற்கு காரணமான ‘இமினோகுளோபின்’ (immunoglobin) குறித்து ஆராய்ந்தார்.
• இமினோகுளோபினுக்குள் ஏராளமான உயிர்ப் பொருட்கள் இருந்தன. அவையே நோய் எதிர்ப்புத் திறனை உறுதி செய்தன. முயலின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இமினோகுளோபினை ‘பப்பைன்’ என்ற என்ஸைமைக் கொண்டு 3 பாகங்களாகப் பிரித்து சாதித்தார்.
• இமினோகுளோபின் ‘Y’ வடிவில் இருப்பதையும் கண்டுபிடித்தார். அதில் பெரிய துண்டுப்பகுதி எல்லா மூலக்கூறுகளிலும் ஒன்றாக இருக்கிறது. சிறிய இரு துண்டுகள் எந்த அந்நியப் பொருளை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் எதிர்க்கிறதோ அதற்கேற்ப அமைகிறது என்பதையும் கண்டறிந்து சொன்னார்.
• ஜெரால்டு எடல்மேன் என்பவருடன் இணைந்து இமினோகுளோபினில் இருந்த 1300 அமினோ அமிலங்களையும் வரிசையாகக் கண்டறிந்தார். இதுவே பல்வேறு நோய் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கும், உலகில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் அடிகோலியது.
• நோய்த் தொற்றில் இருந்து உடலைக் காக்கும் துணை புரதங்கள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். ‘க்ளைகோ’ உயிரியல் துறையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நிறுவினார்.
• நோய் எதிர் உயிரியின் வடிவத்தைக் கண்டறிந்ததற்காக, மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை 1972-ல் ஜெரால்ட் எடல்மேனுடன் சேர்ந்து பெற்றார். அதன் பிறகும், ஓயாமல் மருத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 67 வயதில் கார் விபத்தில் இறந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT