Published : 20 Jun 2015 11:13 AM
Last Updated : 20 Jun 2015 11:13 AM
வாழ்ந்தபோது ஜெயகாந்த னிடம் இருந்த அந்தத் தனித் துவம், அவர் நோயில் வீழ்ந்த காலத்தும் அவ்வாறே அவரிடம் புலப்பட்டது. நடக்க முடியவில்லை என்பாரே தவிர, வேறு எந்த உபாதைகளைப் பற்றியும் அவர் முறையிட்டது இல்லை.
முதலில் அவர் கோடம் பாக்கம் பெஸ்ட் ஆஸ்பத் திரிக்கும் மயிலாப்பூர் இஸபெல்லா ஆஸ்பத் திரிக்கும் கொண்டு செல்லப்பட்டார். பெஸ்ட் ஆஸ்பத் திரியில் இருந்து அவர் வீடு திரும்பிய நாள் மிக நன்றாக நினைவிருக்கிறது.
ஆஸ்பத்திரியில் இருந்து வந்த அசதிகூட அடங்காமல் அவர் அமர்ந்திருந்தார். அருகே நான் நின்றிருந்தேன். எல்லாரிடமும் ஒரு மவுனம் நிலவியது. என்னை நிமிர்ந்து பார்த்து, ‘‘குப்புசாமி ஏதாவது பாடேன்!” என்றார். நான் லஜ்ஜை மிக்கவனாய், ‘‘எனக்கு எங்கே ஜே.கே பாட வரும்?” என்றேன்.
‘‘ஏன் நீ முன்னெல்லாம் அடிக்கடி பாடுவியே…” என்றார் அவர்.
சரி, நாம் பாடி அதைக் கேட்க விரும்புகிறார் என்று துணிந்து, ‘ ‘பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்; நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை”
என்கிற பிரபந்தப் பாசுரத்தை வெறும் வசன உச்சரிப்பாகச் சொன்னேன்.
நான் சொன்னதைக் கேட்ட ஜெயகாந்தன், மெல்ல குரலெ டுத்து மெதுவாக, ‘‘பொலிக பொலிக பொலிக…” என்று ஆரம்பித்து, முழுப் பாசுரத் தையும் ஒருமுறை அழகாகப் பாடினார். இசையறிந்த நண்பர் கவிஞர் ரவிசுப்பிரமணியனும், இளம்பரிதியும் அன்று அங்கே இருந்தனர். அறையில் நிரம்பியிருந்த ஆழ்ந்த மவுனத்தில் அவரது குரலின் இசை, கருப்பு வெல்வெட்டு துணியில் வைத்த வைரம்போல பிரகாசித்தது.
இஸபெல்லா ஆஸ்பத்திரியில் நடந்த வற்றை நேரடியாக அல்லாமல், பிற நண்பர்கள் சொல்ல அறிந்திருந்தேன்.
‘‘வீட்டுக்குப் போக வேண்டும்” என்று அடம்பிடித்தாராம் ஜெயகாந்தன். கனிமொழி ஓரிருமுறை வந்து பார்த்து, நிலைமையை உணர்ந்திருக்கிறார். மறு நாள், ஜெயகாந்தனுக்கு, கலைஞரிடம் இருந்து ஒரு போன் வந்துள்ளது.
‘‘நான் கார் அனுப்புகிறேன். அதில் நீங்கள் மறுக்காமல் ஏறிக்கொள்ள வேண்டும். வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு போவார்கள். அங்கே சேர்ந்து சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டும், இது அரச கட்டளை அல்ல; அன்பு கட்டளை!’’ என்றாராம் கலைஞர். அவர் முதலமைச்சராக இருந்த தருணம் அது!
நோய்வாய்பட்ட ஆரம்ப காலங்களில், அப்பல்லோ மருத்துவமனையில், ஜே.கே கனவுலகில் மிதப்பவர் போலவே தோன்றினார். மருத்துவமனை தலைமை நிர்வாகியும் சில முக்கிய பிரமுகர்களும் அவரை வந்து பார்த்துப் பேசி, சிகிச்சைக்கு ஒத்துழைக்கும்படியும், செலவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தமிழக அரசின் சொத்து!’’ என்று சொன்னபோது, ஜே.கே அந்த பழைய பாணியிலேயே தன்னை மறந்து, ‘‘நான் மக்களின் சொத்து!’’ என்று பதிலளித்திருக்கிறார்.
அவர் அருகே நானும் வேறு ஒரு நண்பரும் இருந்தபோது, மருத்துவ மனையிலேயே தயாரிக்கப்பட்ட அவருக்கான உணவு அப்போது வந்தது. அதை எனக்கும் அந்த நண்பருக்கும் பங்கிட்டுத் தர முனைந்தார். நாங்கள் எவ்வளவு மறுத்தும் கேட்கவில்லை.
ஒருநாள், பார்வையாளர் நேரம் முடிந்து, எங்களை எல்லாம் புறப்படுமாறு ஒரு செவிலியர் வந்து கேட்டுக் கொண்டார். அப்போது ஜெயகாந்தன் என்னைக் காட்டி ‘‘இவர் மட்டும் இங்கேயே இருக்கட்டும்!’’ என்று கேட்டுக்கொண் டார். உடனே அந்த செவிலியர், ‘‘நாங்கதான் இருக்கோமே உங்களைப் பார்த்துக்கறதுக்கு...?’’ என்று மறுதலித் தார்.
‘‘இல்லே, நான் ஏதாவது சொல்லு வேன். இவர் குறிப்பு எடுப்பாரு. அதுக்கு இவர் வேணும்…’’ என்று ஜெயகாந்தன் தொடர்ந்து கேட்டுப் பார்த்தார்.
‘‘இப்போ நீங்க மருந்து சாப் பிட்டுத் தூங்கப் போறீங்க. நாளைக்குப் பகல்ல வேணும்னா நீங்க சொல் லுங்க… இவர் எழுதட்டும்’’ என்று செவிலிப் பெண் அவரைச் சமாதானப் படுத்திவிட்டர்.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு, ஜெயகாந்தன், அதிகமான பயணங்களை மேற்கொள்ள வில்லையே தவிர, வீட்டளவில் நல மாகத்தான் நடமாடிக்கொண்டிருந்தார். அவரது பழைய வீடு இடித்துக் கட்டப்படுகிற இடைக்காலத்தில், அருகிலேயே ஒரு வாடகை வீட்டில் கொஞ்ச நாள் குடியிருந்தார். அப்போ தெல்லாம், மாலைவேளையில் அருகில் இருந்த ஒரு பூங்காவுக்குச் சென்று சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவார்.
‘ஃப்ரெண்ட் லைன்’ இதழுக்குக் கூட அந்தப் பூங்காவில் அமர்ந்துதான் பேட்டியளித்தார். ‘வார்த்தை’ சிற்றித ழின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இதே போன்று வேறு சில அரங்குகளிலும், சிறுசிறு கூட்டங்களிலும் கூட கலந்துகொண்டார். பிறகு, தனது புதிய வீட்டுக்குக் குடி வந்தார்.
அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது விருதுகள் அவர் மேல் ஒன்றன்பின் ஒன்றாக விழ ஆரம்பித்தன. பத்மபூஷண், தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம், ரஷ்யாவின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஃப்ரெண்ட்ஷிப்’ எல்லாம் அவருக்கு வழங்கப்பட்டன.
இதற்கிடையில், தான் பேசுவதை மெல்ல மெல்லக் குறைத்துக்கொண்டே வந்தவர், ஒரு கட்டத்தில் மவுன விரதம் இருப்பவர் போலவே மாறிவிட்டார். அதுவும் சாதாரண மவுனம் அன்று; காஷ்டிக மவுனம்! பேசாது இருப்பது மட்டுமில்லை; முகத்திலே எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கட்டையைப் போன்று இருப்பது.
ஒரு வண்டு மூங்கிலைக் குடையும் பிரயாசையை அவரைப் பேச வைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய தாகிவிட்டது. என்னைப் பொறுத்த வரையில், இந்தக் கட்டத்தில், நானும் அவரும் அதிகம் பேசிக்கொள்ள முடியா விட்டாலும், நான் கேட்பதற்கெல்லாம் சிறுசிறு பதில்களைச் சொல்லத் தவறவில்லை.
பத்திரிகையாளர் சமஸ் ஜெய காந்தனை பேட்டி எடுக்க வந்திருந்தார். நானும் உடன் இருந்தேன். சமஸ் தனது கேள்விகளை ஒவ்வொன்றாக ஜே.கேவிடம் கேட்டபடி இருந்தார்.
அதில் ஒரு கேள்வி: ‘‘மருத்துவ மனையில் இருந்தபோது உங்களுக்கு மரண பயம் உண்டாயிற்றா?’’
‘‘இல்லே! பயமெல்லாம் ஒண்ணும் இல்லை. உடம்பு சரியில்லையென்று இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள். குணமானதும் வீட்டுக்குப் போயிடு வோம்ங்கிற நினைப்பில்தான் இருந் தேன்!’’ என்றார் ஜே.கே.
இந்தக் கட்டுரைத் தொடரை எழுத ஆரம்பிக்கும்போது, ‘‘தி இந்து தமிழ் நாளிதழில் உங்களைப் பற்றி ஒரு தொடர் கட்டுரை இருபது வார காலத்துக்கு எழுதச் சொல்கிறார்கள் ஜே.கே. எழுதட்டுமா?’’ என்று கேட்டேன்.
அதெல்லாம் இருபது வாரத்துக்கு வருமா என்ன..?’’ என்று கேட்டார்.
‘‘ஏன் ஜே.கே. வரும் ஜே.கே. அவ்வளவு விஷயங்கள் இருக்குது ஜே.கே” என்றேன் நான்.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர், ‘‘சரி… எழுது!’’ என்றார்.
- தொடர்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisekuppusamy1943@gmail.com
முந்தைய அத்தியாயம்: >ஜெயகாந்தனோடு பல்லாண்டு 35- எம்.ஆர்.ராதாவுடன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT