Published : 20 Jul 2016 10:40 AM
Last Updated : 20 Jul 2016 10:40 AM
ஸ்ரீபுரந்தான் சிலைத் திருட்டு வழக்கில் சஞ்சீவி அசோ கனுக்கு உள்ள தொடர்பு களைத் துருவிய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், அவரை வளைப்பதற்காக பல முறை கண்ணி வைத்தனர். அதில் எல்லாம் சிக்காமல் தப்பிய சஞ்சீவி, ஒருகட்டத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. செல்வராஜ் அடிக்கடி வந்து தன்னையும் தனது குடும்பத்தாரையும் துன்புறுத்துவதாக புகார் கிளப்பினார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு செல்வராஜ் மீது எஃப்.ஐ.ஆரும் போட வைத்தார்.
தனது முயற்சியில் தளராத செல்வராஜ், சஞ்சீவியைத் துரத்திக் கொண்டே இருந்தார். கடைசியாக, 25.03.2009-ல் கொச்சியில் பதுங்கி இருந்த சஞ்சீவியையும் அவரது கூட்டாளி பாக்கியகுமாரையும் கொத் தாகப் பிடித்தார். அப்போதுதான், ஸ்ரீபுரந் தான் கோயில் சிலைகளைக் கடத்திய பிறகு, அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்த 18 ஐம்பொன் சிலைகளை சஞ்சீவியினுடைய கும்பல் ஒரே மூச்சில் கடத்தியது தெரியவருகிறது.
சுத்தமல்லி சுந்தரேஸ்வரர் கோயி லுக்குச் சொந்தமான அந்தச் சிலைகளின் பாதுகாப்பு கருதி, அருகில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் அவை கொண்டுவந்து வைக்கப்பட்டன. அதையும் எப்படியோ மோப்பம் பிடித்து திருடியது சஞ்சீவி கோஷ்டி. பிப்ரவரி 2008-ல், சஞ்சீவியின் கூட்டாளியான ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிச்சாமி தலைமையில் இந்த ஆபரேஷன் நடந்திருக்கிறது.
வெளிநாட்டுக்கு விற்பனை
புதுச்சேரியில் கலைப் பொருள் விற்பனைக் கடை நடத்திய மாரிச்சாமி, தனது சகாக்களான பிச்சைமணி, ஸ்ரீராம், பார்த்திபன் இவர்களின் துணையுடன் இந்தக் கடத்தலை வெற்றிகரமாக முடித் திருக்கிறார். கடத்தப்பட்ட சிலைகளில் 10 சிலைகளை சஞ்சீவியிடம் கொடுத்த மாரிச்சாமி, அதற்காக அவரிடம் இருந்து 25 லட்ச ரூபாய் வாங்கியதாகச் சொல் கிறது போலீஸ். எஞ்சிய 8 சிலைகள் உட்பட இன்னும் 9 சிலைகளை புதுச்சேரி கேலரி மூலமாக வெளிநாட்டினருக்கு விற்றுள்ளார் மாரிச்சாமி.
அதே சமயம், தன்னிடம் வந்து சேர்ந்த 10 சிலைகளையும் வழக்கம்போல போலி ஆவணங்களைத் தயாரித்து 6.3.2008-ல் சென்னை துறைமுகம் வழியாக ஹாங்காங்கில் உள்ள கபூரின் இம்போர்ட் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தார் சஞ்சீவி. இதற்காக தனது ஹெச்.எஸ்.பி.சி. வங்கிக் கணக்கில் இருந்து 1,01,10,418 ரூபாயை சஞ்சீவி யின் வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார் கபூர்.
சிலைகள் கடத்தப்பட்டு இரண்டு மாதம் கழித்து, தமிழ் புத்தாண்டுக்கு சாமி கும்பிடுவதற்காக கோயிலைத் திறந்தபோதுதான் ஊராருக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. இது தொடர் பாக உடையார்பாளையம் போலீஸார் 14.4.2008-ல் வழக்கு பதிவு செய்தனர். இந்த 18 சிலைகளோடு மேலும் ஒரு சிலையை சேர்த்து மொத்தம் 19 சிலை கள் ஹாங்காங் மற்றும் லண்டன் வழியாக நியூயார்க் கடத்தப்பட்டதாக சொல்கிறது போலீஸ். ஸ்ரீபுரந்தான், சுத்தமல்லி கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் உள்ளிட்ட 27 சிலைகளில் பெரும்பகுதி அமெரிக்கா, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மியூசியகங்களுக்கு சுபாஷ் கபூரால் விற்கப்பட்டுள்ளன. எஞ்சியவை நியூயார்க்கில் அவரது ‘ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் கேலரி’யில் வைக்கப்பட்டன.
கூண்டோடு கைது
சுத்தமல்லி வழக்கில் சிவகுமார், பிச்சைமணி, அருணாசலம், ஸ்ரீராம், கந்தசாமி, மாரிச்சாமி, ஆல்பர்ட் இமானு வேல் என பெரிய பட்டாளமே சிறைக்குள் தள்ளப்பட்டது. ஆல்பர்ட் இமானுவேலின் லாரியும் சஞ்சீவியின் குவாலிஸ் காரும் பறிமுதல் செய்யப்பட் டன. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த வழக்கை மேலும் துருவியபோது தான், இந்தக் கும்பலை சுபாஷ்சந்திர கபூர் என்ற ‘கடத்தல் மன்னன்’ கடல் கடந்து அமெரிக்காவில் இருந்தபடியே இயக்குவது தெரியவருகிறது.
இதையடுத்து 2011-ல், கபூருக்கு எதி ராக ஜாமீனில் வரமுடியாத பிடி வாரண்டை பிறப்பிக்கிறது ஜெயங் கொண்டம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம். இந்த உத்தரவு இந்தியாவின் ‘இண்டர்போல்’ போலீஸ் மூலம் அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட கபூரின் வியாபாரத் தொடர்புகள் உள்ள நாடுகளின் ‘இண்டர் போல்’ போலீஸுக்கும் தெரிவிக் கப்படுகிறது.
‘இண்டர்போல்’ என்றால் என்ன?
இந்த இடத்தில் ‘இண்டர்போல்’ பற்றிய ஒரு தகவலை சொல்லியாக வேண்டும். ‘இண்டர்போல்’ போலீஸ் என்பது சர்வதேச போலீஸ். அவர்கள் எந்த நாட்டுக்கும் போய், யாரை வேண்டு மானாலும் கைது செய்யலாம் என்று சிலர் புரிந்துவைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர், அனைத்து நாட்டு காவல் துறை யிலும் தலைசிறந்த அதிகாரிகளைத் தேர்வு செய்து அவர்களைக் கொண்டு ஒரு சர்வதேச காவல் அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் என்றும் நினைக்கிறார்கள். இவை எதுவுமே சரியான தகவல் இல்லை.
புலனாய்வுத் துறையில் சி.பி.சி.ஐ.டி; சி.பி.ஐ. எனப் பல பிரிவுகள் இருப்பது போல சர்வதேச தொடர்புள்ள குற்றங் களை விசாரிப்பதற்காக அனைத்து நாடுகளிலும் ஒரு புலன்விசாரணைப் பிரிவு உண்டு. அதுதான் ‘இண்டர்போல்’ போலீஸ். ‘இண்டர்போல்’ அதிகாரிகள், தங்களால் தேடப்படும் குற்றவாளி எந்த நாட்டில் இருக்கிறாரோ, அந்த நாட்டின் ‘இண்டர்போல்’ மூலம் அந்தக் குற்றவாளிகளைக் கைதுசெய்து தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள்.
- சிலைகள் பேசும்… | படங்கள் உதவி: IFP/EFEO புதுச்சேரி
முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 10: நடராஜரும் நர்த்தன கிருஷ்ணரும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT