Published : 02 Jul 2016 11:39 AM
Last Updated : 02 Jul 2016 11:39 AM
M.G.R.மீது மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்கூட அளப்பரிய அன்பும் மரியாதையும் மதிப்பும் உடையவர்களாக விளங்குகிறார்கள் என்றால், அதற்கு தமிழ் சமுதாயத்துக்கு அவர் ஆற்றிய தொண்டு முக்கிய காரணம். அப்படி எம்.ஜி.ஆர். மீது மதிப்பு வைத்துள்ளவர்களில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவரும் ஒருவர். அரசியல் மட்டுமின்றி இலக்கியமும் அவருக்கு அத்துபடி. இளையராஜாவின் ‘திருவாசகம்’ இசை வெளியீட்டு விழாவில் அவரது பேச்சைக் கேட்டு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று விசில் அடித்தார். அந்த மூத்த தலைவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ!
படிக்கும் காலத்தில் நெல்லை மாவட் டத்தில் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டி அருகே டூரிங் டாக்கீஸில் எம்.ஜி.ஆர். நடித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தை வைகோ பார்த்தார். படத்தில் எம்.ஜி.ஆரும் சின்னப்பா தேவரும் போடும் சிலம்பச் சண்டை வைகோவைக் கவர்ந்தது. வைகோவும் சிலம்பம் கற்றவர். எம்.ஜி.ஆரின் சிலம்ப வீச்சுக்காகவே அந்தப் படத்தை பலமுறை பார்த்திருக்கிறார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சின் லாவகத்தைக் கண்டு வைகோ சொக்கிப் போனார்! ‘‘சண்டைக் காட்சிகளில் எல்லோரையும் விட எம்.ஜி.ஆர். சோபித்ததற்கு, தானாகவே அவர் மனதுக்குள் சிந்தித்து புதிய பாணிகளை வகுத்துக் கொண்டதுதான் காரணம்!’’ என்கிறார் வைகோ!
கல்லூரியில் முதுகலை படிப்புக்காக 1964-ம் ஆண்டு சென்னைக்கு வைகோ வந்தார். அந்த சமயத்தில் மலேசிய சுற்றுப் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய அறிஞர் அண்ணாவை ஏழு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு அளித்தனர். ஊர் வலத்தை உடன் படிக்கும் மாணவர் களுடன் வைகோ பார்த்தார்.
அண்ணா இருந்த வண்டிக்கு முன் னால் சென்ற லாரியில் நின்றுகொண்டு, ரோஜாப்பூக்களை இறைத்தபடி பொன் னிறமாய் ஜொலித்த எம்.ஜி.ஆரை அப் போதுதான் வைகோ முதன்முதலில் பார்த் தார். அந்தக் காட்சி அவரது கண்களில் இருந்து இன்னும் அகலவில்லை.
1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு சென்னை விருகம்பாக் கத்தில் நடந்த திமுக மாநாட்டில் பரங்கி மலைத் தொகுதியின் வேட்பாளராக எம்.ஜி.ஆர். பெயரை அண்ணா அறிவித்த போது விண்ணைப் பிளந்த கரவொலியில் வைகோவின் கரவொலியும் அடங்கும். சில நாட்களில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார் என்ற செய்தி கேட்டு துடித்துப் போனார் வைகோ. ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு மாணவர்களுடன் விரைந்தார். ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த கூட்டத்தில் உள்ளே நுழையமுடிய வில்லை என்றாலும் எம்.ஜி.ஆரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற செய்தியால் ஆறுதல் அடைந்தார்.
அந்தத் தேர்தலில் விருதுநகர் தொகுதி யில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மாணவர் தலைவர் சீனிவாசன், எம்.ஜி.ஆரை மருத்துவமனையில் சந் தித்து ஆசிபெற்றார். அவருக்கு ஆதர வாக விருதுநகரில் வைகோ தீவிர பிரசாரம் செய்தார். ‘‘எம்.ஜி.ஆர். எப்படி இருக்கிறார்?’’ என்று ஏக்கத்தோடு கேட் கும் கிராம மக்களிடம், ‘‘நன்றாக இருக் கிறார். வெற்றி விழாவுக்கு வருவார்’’ என்று வைகோ கூறுவார். அவர் சொன்னதுபோலவே பிறகு, வெற்றி விழாவுக்கு எம்.ஜி.ஆர். வந்தார்!
1969-ம் ஆண்டு நெல்லை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளராக வைகோ இருந்தபோது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நெல் லைக்கு எம்.ஜி.ஆர். வந்தார். வைகோ ஏற்பாடு செய்திருந்த திமுக கொடியேற்று விழாவிலும் கலந்து கொண்டார்!
பின்னர், ஏற்பட்ட அரசியல் சூழல் களால் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது வைகோ மிகவும் வருந்தினார். என்றாலும், கட்சிப் பற்று காரணமாக திமுகவிலேயே இருந்துவிட் டார். 1978-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டார். அவையில் பேசும் போது எம்.ஜி.ஆரை அரசியல்ரீதியில் விமர்சித்திருக்கிறார்.
‘‘நாடாளுமன்ற நூலகத்தில் ஒரு நாள் நான் படித்துக் கொண்டிருந்தேன். டெல்லி வந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நூலகத்தைக் காட்ட அதிமுக எம்.பி.க்கள் அழைத்து வந்தனர். அவ ரிடம் அதிமுக எம்.பி. மோகனரங்கம் என்னை சுட்டிக் காட்டினார். உடனே, மலர்ந்த முகத்துடன் என்னை நோக்கி வந்து கைகுலுக்கினார் எம்.ஜி.ஆர்! அவரை அரசியல்ரீதியாக விமர்சித்திருக் கிறேன். அது தெரிந்தும் அவர் என்னுடன் அன்பாக கைகுலுக்கியபோதுதான், எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக்குள் மாமனிதம் இருப்பதை உணர்ந்தேன்’’ என்று பூரிப்புடன் சொல்கிறார் வைகோ!
டெல்லிக்கு 1985-ல் வந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, ‘‘ஈழப் பிரச் சினை கொழுந்துவிட்டு எரிவதற்கு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.தான் காரணம்’’ என்று கூறினார். ‘‘மறுநாள் மாநிலங்களவையில் நான் பேசும்போது, ‘வெளி நாட்டுத் தலைவர்கள் இந்தியா வந் தால் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் பேசும் வழக்கம் இல்லை. நாம் தரும் விருந்தை சாப்பிட்டுவிட்டு மரியாதையாகப் போக வேண்டும். தமிழக முதல்வர் பற்றி ஜெயவர்த்தனே கூறியது அக்கிரமம். அவர் அருகில் இருந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பேசாமல் இருந்தது சகிக்க முடியாதது’ என்று பேசினேன். இது பத்திரிகைகளிலும் வந்தது’’ என்று வைகோ நினைவுகூர்கிறார்.
‘‘எம்.ஜி.ஆர். மீது எனக்கு திடீர் காதல் வந்திருப்பதாகக் கிண்டல் செய்த காங்கிரஸாருக்கு, ‘எங்களுக்குள் அரசியல் மோதல்கள் உண்டு. அதை தமிழக அரசியல் களத்தில் வைத்துக் கொள்வோம். ஆனால், எம்.ஜி.ஆர். எங்கள் முதல் அமைச்சர். அவரை இன்னொரு நாட்டுக்காரர், அதுவும் தமிழர்களுக்கு எதிரானவர் கண்டனம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்று பதிலளித்தேன்’’ என்று உணர்ச்சி மேலிட கூறுகிறார் வைகோ!
ஒரு காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், எம்.ஜி.ஆர். பற்றி தன்னிடம் கூறியதைக் கேட்ட பிறகு, எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாகவும் விமர்சிப்பதை அடி யோடு நிறுத்திவிட்டதாக வைகோ கூறுகிறார்!
எம்.ஜி.ஆர். பற்றி வைகோவிடம் பிரபாகரன் அப்படி என்ன கூறினார்?
வரும் செவ்வாய்க்கிழமை நிறைவுப் பகுதியில் பார்ப்போம்.
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
எம்.ஜி.ஆர். ஆட்சியில் பிற்படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது! பரம்பரையாக இருந்துவந்த மணியக்காரர், கர்ணம் பதவிகளுக்குப் பதிலாக, கிராம நிர் வாக அலுவலர் பதவியை உருவாக்கி சாதாரண மக்களும் அப்பதவிக்கு வர வழி செய்தார் எம்.ஜி.ஆர்.! |
முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT