Published : 03 Oct 2014 12:32 PM
Last Updated : 03 Oct 2014 12:32 PM
உலகில் தற்போது 7,000 மொழிகள் பேசப்படும் மொழிகளாகக் கணக்கிடப்பட்டுள்ளன. 2100-ம் ஆண்டுக்குள் அவற்றுள் 90% மறைந்துவிடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக, அந்தச் சமூகத்தில் சமூகச் சீர்குலைவு, மனத்தளர்ச்சி, தற்கொலை, போதைப் பொருள் பழக்கம் போன்றவை அதிகரிக்கும்.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல், தற் கொலை, மனத்தளர்ச்சி போன்றவை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவருவதைப் பத்திரிகைச் செய்திகள் உணர்த்துகின்றன. பணத்துக்காகக் குடும்பத்துக்குள் கொலை, வன்முறை, பிரிவு போன்றவையும் அபரிமிதமாக அதிகரித்துள்ளதும் செய்திகளாக வெளிவந்துள்ளன.
ஒரு மொழி மரணமடைவதற்கு முன் நடைபெறுவது ‘மொழி பலவீனமாதல்’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு மொழி பேசுபவர்கள், அதில் மற்றொரு மொழியைக் கலந்து பேசுவதும், எழுது வதும் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த மொழியின் பலவீனமாதல் போக்கு அதிகரிக்கும். அந்த பலவீனமாதல் போக்கின் உச்சமே அந்த மொழியின் மரணத்தில் முடியும். ஒரு மொழியின் மரணம் என்பது ‘ஒருவர் தனது ஆன்மாவின் ஒரு பகுதியை இழப்பதைப் போன்றதாகும்.’
தமிழ்நாட்டில் தரத்தில் முன்னணியில் உள்ள பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலத்தில்தான் தமக்குள் பேசிக்கொள்கின்றனர். அதில் தகவல் பரிமாற்றச் சிக்கல் வரும் சமயங்களில் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். கிராமங்களில் பேசும் மக்களின் மொழியில் ஆங்கிலச் சொற்கள் இடம் பெறுவது அதிகரித்துவருகிறது.
தமிழில் கொச்சையாகப் பேச மட்டும் தெரிந்த, படிக்கத் தெரியாத மாணவர்களின் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது. காரணம், அவர்கள் விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கிலவழியிலேயே படித்தவர்கள். விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியிலேயே குழந்தைகளைப் படிக்க வைக்கும் போக்கு கிராமங்களில் தற்போது அதிகரித்துள்ளது. ‘வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் தமிழ் பலனற்றது’ என்ற கருத்து குக்கிராமம் வரை பரவி விட்டது. எனவே, படிக்க மாணவர்களின்றித் தமிழ்வழி அரசுப் பள்ளிகள் மூடப்படுவது அதிகரித்து
வருகிறது. தமிழ் மொழியின் மரணத்தின் முதல் படியாக, தமிழ்வழிக் கல்வி மரணமடைந்து வருகிறது. ‘மொழி பலவீனமாதல்’ என்ற போக்கு தமிழைப் பொறுத்தமட்டில் அதிவேகமாக உள்ளது. இந்திய மொழிகளில் இந்தப் போக்கில் தமிழ் முதலிடத்தில் இருந்தால் வியப்பில்லை. அது உண்மையென்றால், 2100-க்கு முன்னரே இந்திய மொழிகளில் மரண மடைவதில் தமிழ் முதல் இடத்தைப் பிடித்தாலும் வியப்பில்லை.
தமிழின் மரணம் எப்போது என்பதில் வேண்டு மானால் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தமிழின் மரணத்துக்குப் பின், தமிழ்நாட்டில் தமிழர் கள் எப்படி இருப்பார்கள்? என்ற கேள்விக்கு விடை யாக, தமிழ்நாட்டில் இன்று வாழ்ந்துவரும் ஆங்கிலோ இந்தியர்கள் இருக்கின்றனர்.
குழந்தைகள் வளரும்போது, புலன் உணர்வுகள் தொடர்பான மூளை வளர்ச்சிக்கு விளையாட்டுப் பள்ளி முதல் ஆரம்பக் கல்வி வரை தாய்மொழியில் இருப்பதே நல்லது என்று உலகில் ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. எனவே தமிழின் மரணத்தோடு, தமிழர்களில் சாதனை புரியும் விஞ்ஞானிகள் உள்ளிட்ட சாதனையாளர்கள் உருவாகும் போக்கும் மரணமடைந்தால் வியப்பில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT