Published : 28 Oct 2015 10:34 AM
Last Updated : 28 Oct 2015 10:34 AM
விவேகானந்தரின் சீடர், சமூக சேவகி
சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா (Sister Nivedita) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# அயர்லாந்தின் டங்கானன் நகரில் (1867) பிறந்தார். இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். தந்தை மத போதகர். 17-வது வயதில் கல்லூரிப் படிப்பை முடித்த மார்கரெட், இங்கிலாந்தில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். பல ஆண்டுகள் ஆசிரியராக இருந்தவர், பிரபல கல்வியாளராக போற்றப்பட்டார்.
# ஒருமுறை தோழியின் வீட்டில் சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டார். அதில் கவரப்பட்டவர், அவரது பேச்சுகளை அடிக்கடி கேட்கத் தொடங்கினார். துறவு, மக்கள் சேவை ஆகியவற்றில் ஏற்கெனவே ஈடுபாடு கொண்டிருந்தவர், அவர்தான் தன் குரு என்று தீர்மானித்தார்.
# இங்கிலாந்துக்கு வந்திருந்த விவேகானந்தரை சந்தித்தார். ‘‘எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற நீ உதவ முடியும் என நம்புகிறேன்’’ என்றார் சுவாமிஜி. இதை அரிய வாய்ப்பாகக் கருதியவர், உடனே புறப்பட்டு இந்தியா வந்தார்.
# எந்த புதிய கருத்தையும் சுலபமாக ஏற்றுக்கொள்ளமாட்டார். சுவாமியும் நம்பிக்கைகளை திணிக்கமாட்டார். விளக்கம் மட்டும் அளித்துவிட்டு அவர் போக்கிலேயே விட்டுவிடுவார். இந்திய வரலாறு, மன்னர்கள், துறவிகள், தியாகிகள், எளிய, தூய, புனித வாழ்வு, தொண்டுகள் என பல விஷயங்கள் குறித்தும் சுவாமிஜியிடம் அறிந்தார்.
# கல்கத்தாவில் ஒரு வீட்டில் பெண்களுக்கான பள்ளி 1898-ல் திறக்கப்பட்டது. இங்கு எழுதப் படிக்கவும், ஓவியம் வரையவும், தையல், மண்பொம்மை செய்யவும் சிறுமிகளுக்கு கற்றுக்கொடுத்தார். தாய்மார்களுக்கு கல்வி, நுண்கலைகளைக் கற்பித்தார். புத்தகம் எழுதி சம்பாதித்து, செலவுகளைச் சமாளித்தார்.
# பிளேக் நோய் நிவாரணக் குழுவுக்கு நிவேதிதாவை தலைவியாக்கினார் சுவாமிஜி. நோயாளிகளைப் பராமரிக்கவும், நகரைத் தூய்மைப்படுத்தவும் இளைஞர் குழு அமைத்து தொண்டாற்றினார் நிவேதிதா. 1898-ல் பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். அன்னை சாரதா இவரைத் தன் மகளாகவே கருதி அன்பு செலுத்தினார்.
# பள்ளிக்கு நிதி திரட்ட 1899-ல் இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்து, அமெரிக்காவில் இந்து மதம் தொடர்பாக நிலவிய தவறான கருத்துகளைப் போக்கினார். பள்ளிக்கு நிதி திரட்ட நியூயார்க்கில் ‘ராமகிருஷ்ணா தொண்டர் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார்.
# விவேகானந்தரின் மறைவுக்கு பிறகு, இந்தியாவில் இன்னும் அதிக உத்வேகத்துடன் சேவையாற்றினார். அரவிந்தருடன் இணைந்து விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். ராமகிருஷ்ணா மிஷனை அரசு முடக்கிவிடக் கூடாது என்பதற்காக அதில் இருந்து விலகினார்.
# உணர்ச்சி பொங்கப் பேசியும் எழுதியும் வந்தார். வந்தே மாதரம் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்படாத காலகட்டத்திலேயே அதை தன் பள்ளியில் காலை வணக்கப் பாடலாகப் பாடச் செய்தார். ஜெகதீஷ் சந்திரபோஸின் அறிவியல் நூல்களை வெளியிட உதவினார். பெண்களைப் பற்றிய தன் சிந்தனைகளை மாற்றி, பெண் உரிமைக்காகப் போராடத் தூண்டுகோலாக இருந்த இவரைத் தன் குருவாக குறிப்பிட்டுள்ளார் பாரதியார்.
# வெளிநாட்டில் பிறந்து, இந்திய விடுதலைக்காகவும், இந்தியப் பெண்களின் கல்விக்காகவும், இந்தியாவின் மேன்மைக்காகவும் பாடுபட்ட சகோதரி நிவேதிதா 44-வது வயதில் (1911) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT