Published : 16 May 2017 10:17 AM
Last Updated : 16 May 2017 10:17 AM
அமெரிக்க இசைக் கலைஞர், ஆராய்ச்சியாளர்
பிரிட்டனில் பிறந்த அமெரிக்க கண்டுபிடிப்பாளரும், இசைக் கலைஞருமான டேவிட் எட்வர்டு ஹ்யூஸ் (David Edward Hughes) பிறந்த தினம் இன்று (மே 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* லண்டனில் (1831) பிறந்தார். தந்தை உட்பட இவரது குடும்பத்தில் பலரும் இசைக் கலைஞர்கள். குழந்தைப் பருவத் திலேயே இசை பயின்றவர், 6 வயதிலேயே இசைக் கருவிகளை நன்கு வாசித்தார்.
* இவரைப் பல்வேறு இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று இசைக் கருவிகளை வாசிக்க வைத்தார் தந்தை. இவருக்கு 7 வயதானபோது, குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. வர்ஜீனியாவில் ஒரு பண்ணை வீட்டை வாங்கி அங்கேயே நிரந்தரமாகத் தங்கினர். இவரது குடும்பத்தினர் பல இசைக் கச்சேரிகள் நடத்தினர். இவரும் அதில் பங்கேற்று, தன் இசைத் திறமையை வெளிப்படுத்தினார்.
* பள்ளிப் படிப்பை முடித்து, பட்டம் பெற்றார். அறிவியலில், குறிப்பாக இயற்பியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இயந்திரங்கள் இவரை வெகுவாகக் கவர்ந்தன. பல்வேறு விதமான கருவிகள், மின் சாதனங்கள் இயங்கும் முறை குறித்து ஆராய்ந்தார். கென்டகி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்கை தத்துவம், இசைத்துறை பேராசிரியராகப் பணியாற்றினார்.
* அத்துடன், மின் பொறியியல் பரிசோதனையாளராகவும் செயல்பட்டார். இசையை நகலெடுக்கும் இயந்திரத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். எதேச்சையாக, அச்சிடும் இயந்திரத்தை வடிவமைத்தார். 1855-ல் அச்சிடும் டெலிகிராப் முறையைக் கண்டுபிடித்து, காப்புரிமை பெற்றார்.
* 1857-ல் மீண்டும் லண்டன் சென்று, கண்டுபிடிப்பு வேலைகளைத் தொடர்ந்தார். தனது கண்டுபிடிப்புகளை வர்த்தகரீதியாக விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். வயர்கள் மூலமாக ஒலியைக் கடத்துவதற்கான சோதனைகளை மேற்கொண்டார். இதற்கிடையில், அச்சிடும் டெலிகிராப் அமைப்பை உருவாக்கினார்.
* பல சிறுசிறு டெலிகிராப் நிறுவனங்கள் இணைந்து வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராப் நிறுவனமாக உருவெடுத்தன. அந்த நிறுவனம் இவரது டெலிகிராப் அமைப்பை பயன்படுத்தி வியாபாரம் செய்யத் தொடங்கியது. ஐரோப்பாவில் ஹ்யூஸ் டெலிகிராப் சிஸ்டம் உலகத் தரம்வாய்ந்த சிஸ்டமாக மாறியது.
* தொடர்ந்து பரிசோதனைகளில் ஈடுபட்டவர், 1878-ல் ஒலி விளைவு குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். ஒலிவாங்கிகள் மிக மிக மெல்லிய ஓசைகளையும் கிரகிக்கும் திறன் பெற்றிருந்தன. இதை இவர், ‘மைக்ரோபோன் விளைவு’ என்று குறிப்பிட்டார். இவரது ஆய்வுக் கட்டுரை, லண்டன் ராயல் சொசைட்டியில் வாசிக்கப்பட்டு பாராட்டுப் பெற்றது.
* மேம்பட்ட கார்பன் மைக்ரோபோனை கண்டறிந்தார். மற்ற ஆராய்ச்சியாளர்களும் இதைப் பயன்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்பதால், அதற்கு இவர் காப்புரிமை பெறவில்லை. இதன்மூலம் ரேடியோ அலைகளை உற்பத்தி செய்த முதல் நபராகப் பெருமை பெற்றார். காந்தவியல் கோட்பாட்டின் அடிப்படையில் தூண்டல் சமநிலையைக் கண்டறிந்தார்.
* டெலிகிராப், ட்யூப்ளெக்ஸ் டெலிகிராப், பிரின்டிங் டெலிகிராப் ஆகியவற்றைக் கண்டறிந்து, காப்புரிமை பெற்றார். லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராயல் பதக்கம், ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவின் அரசுப் பதக்கங்கள், ஆனே விருது, தி கிராண்ட் ஆபீசர்ஸ் ஸ்டார் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள், கவுரவங்களைப் பெற்றார்.
* அடிப்படையில் இசைக் கலைஞராக இருந்தாலும் தனது அறிவியல் ஆர்வத்தாலும் திறமையாலும் ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய டேவிட் எட்வர்டு ஹ்யூஸ் 69-வது வயதில் (1900) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT