Last Updated : 13 Jan, 2017 09:17 AM

 

Published : 13 Jan 2017 09:17 AM
Last Updated : 13 Jan 2017 09:17 AM

என்னருமை தோழி..!- 11: தமிழகம் அதிர்ந்த அந்த நாள்!

ஆகஸ்ட் 16, 2008... அன்று சனிக்கிழமை... குடும்பத்துடன் ரங்கம் செல்லத் தயாராகி இருந்தேன். மாலை ஐந்து மணிக்கு வரச் சொல்லி, தோட்டத்திலிருந்து உங்கள் அழைப்பு திடீரென வந்தது. நான் ஏன் மறுக்கப் போகிறேன்? சொன்ன நேரத்தில் தங்கள் முன் நின்றேன். அன்று நீங்கள் உற்சாகமாகக் காட்சி தந்தீர்கள்.

‘‘திடீரென்று உங்களை அழைத்து விட்டேன். பிரச்சினை ஒன்றும் இல்லையே..?’’ என்று கேட்டீர்கள்.

‘‘இதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான் மேடம்!’’ என்பதை ஆங்கிலத்தில் சொன் னேன். அன்று திருவரங்கத்திற்கு பதிலாக தங்களுடன் கடந்த காலத்திற்கு நான் பயணித்தேன்.

உங்களுடைய கடந்த காலத்திற்கு பயணம்... சுற்றிலும் கறுப்புப் பூனைப் படைகள் இல்லாத ஒரு தனிமையான பயணம். உங்கள் கட்சிக்காரர்களின் ஆர்ப்பரிப்பு இல்லாத, நினைவுகளை மலரவைக்கும் அமைதியான பயணம். நீங்கள் பிரச்சாரத்தில் உரையாற்றும்போது, உங்கள் உரையின் பக்கங்களை வண்டியினுள் உள்ள உதவியாளர் ஒவ்வொன்றாக வாங்கிக் கொள்வதை போல், நான் உங்கள் பசுமையான நினைவுகளை உள்வாங்கிக் கொண்டேன் அன்று!

நான் அமர்ந்தவுடன், முதலில் நீங்கள் கேட்ட கேள்வி இது...

‘‘நீங்கள் பத்திரிகையாளர் அல்லவா... வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா..? குறிப்பாக, ‘தி சாலிட்டரி ரீப்பர்’ படித்தது உண்டா?’’

ஒரு பெரிய தலைவர் திடீரென்று வரச்சொல்லி, இப்படி கவிதை படித்திருக்கி றீர்களா எனக் கேட்டால் எப்படி இருக்கும்? பள்ளி நாட்களில் அந்த கவிதையை ஒப்புவிக்கத் தவறி, எனது ஆசானிடம் பிரம்படி பட்ட அனுபவம் உண்டு. ஆனால், உங்களிடம் இருந்து இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. நானும் சமாளிப்பாக, ‘‘மேடம்... எனக்கு தொடர் கொலைகள் நடத்திய ‘ஜாக் தி ரிப்பர்’ பற்றி முழுதாகத் தெரியும். ‘சாலிட்டரி ரீப்பர்’ மனப்பாடம் ஆகவில்லை. ஆனால், அந்தக் கவிதையின் கருத்தைக் கூற முடியும்” என்றேன். அமைதியாக, நான் சொல்வதற்குக் காத்திருந்தீர்கள்.

‘‘வேர்ட்ஸ்வொர்த், சமவெளி ஒன்றை கடக்கும்போது, அறுவடை செய்தபடியே ஒரு பெண் சோகமான பாடல் ஒன்றைப் பாடுவதைக் கேட்கிறார். பறவைகள்கூட அந்தப் பாடலைக் கேட்டபடி அமைதி காக்க, அதிலிருந்த சோகத்தன்மை கவிஞரை பெரிதும் பாதித்து விடுகிறது. அந்தப் பகுதியை கடந்தும் அவரது இதயத்தில் அந்த சோக கீதம் எதிரொலிக்கிறது... இதுதான் அந்தக் கவிதையில் வருகிறது...’’ என்ற என்னை ஏறிட்டுப் பார்த்த நீங்கள்... அடுத்த கணம் என்னை பிரமிக்கச் செய்து விட்டீர்கள்.

Behold her, single in the field

You solitary Highland lass

Reaping and singing by herself

Stop here or gently pass..

என்று அழகான குரலில் அந்தக் கவிதையைச் சொல்லத் தொடங்கிய நீங்கள், கவிதையின் நான்கு பகுதிகளையும் முழு வதுமாகக் கூறி...

The music in my heart I bore

Long after it was heard no more..

என்று முத்தாய்ப்பு வைத்தபோது... ஆடிப் போய்விட்டேன்!

என்னருமை தோழி...!

‘‘நானும் பள்ளி நாட்களில் படித்ததுதான். ஆனால், இன்னும் எனக்கு மறக்கவில்லை...’’ என்று நீங்கள் சொன்னபோது... ‘எப்படி இவரால், வேர்ட்ஸ்வொர்த்தையும் ஒப்புவிக்க முடிகிறது. நரசிம்மாஷ்டகத்தையும் உச்சரிக்க முடிகிறது?’ என்று அதிசயத்தபடி அமர்ந் திருந்தேன்!

‘‘சாலிட்டரி ரீப்பர் கவிதை வரிகள் திடீரென நினைவுக்கு வந்துவிடும் எனக்கு. ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொள்வேன். கிட்டத்தட்ட எனது அம்மாவின் குரல்தான் அது. அவரது கடைசி காலத்தில் என்னிடம் பேசியவை, எல்லாவற்றையும் கடந்து வந்த பிறகும் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது’’ என்று நீங்கள் கூறினீர்கள்.

அன்று இன்னும் பல சம்பவங்களைப் பற்றிப் பேசினீர்கள்.

முக்கியமாக, ‘புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் சுடப்பட்டார்’ என்ற நிலைகுலைய வைத்த செய்தி வெளியாகி, தமிழ்நாடே அதிர்ந்து நின்ற 1967 ஜனவரி 12-ம் தேதி பற்றி பேசினீர்கள்.

அன்று வியாழக்கிழமை, இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் மேட்ச் மறுநாள் சென்னையில் துவங்க இருந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமைதான் எம்.ஜி.ஆருடன் நீங்கள் நடித்த ‘தாய்க்குத் தலைமகன்’ படம் வெளியாகவிருந்தது. என்ன ஒரு ஆச்சரியம்! இன்று வாசகர்கள் படிக்கப் போகும் தேதியும் ‘தாய்க்குத் தலைமகன்’ படம் வெளியான அதே ஜனவரி 13-ம் தேதி வெள்ளிக்கிழமைதான். நேற்று எம்.ஜி.ஆர். சுடப்பட்ட தினம். 50 ஆண்டுகள் கடந்து விட்டன! சரி.... விஷயத்துக்கு வருகிறேன்.

கிரிக்கெட் மேட்ச் போவதற்கு இரண்டு டிக்கெட் உங்கள் வசம் இருக்க... அண்ணன் ஜெயகுமார் மேட்சுக்கு வர மறுக்க... அன்னையை உடன் வரும்படி கேட்டீர்கள். ‘‘பட ரிலீஸ் தொடர்பாக கவனிக்க வேண்டிய சில பணிகள் உள்ளது. ‘தேவர் பிலிம்ஸ்’ போக வேண்டும். நீ வேண்டுமானால் ராஜம்மாவை (நடிகை எம்.என்.ராஜம்) துணைக்கு அழைத்துப் போ’’ என்று உங்கள் அம்மா சொல்லி இருந்தார்.

நடிகை எம்.என்.ராஜம் அவர்களுக்கு கிரிக்கெட் ஆர்வம் உண்டு என்பதை விட, சந்தியா இல்லாத நேரங்களில் தங்களுக்கு துணையாக அவர் இருப்பார் என்பதை நீங்களே அடிக்கடி சொன்னதுண்டு.

‘ராஜத்திற்கு போன் செய்து கேட்கலாம்’ என்று நீங்களும், தாய் சந்தியாவும் பேசிக் கொண்டிருந்தபோது, தொலைபேசி மணியடித்தது. எடுத்து பேசினீர்கள். ‘தாய்க்குத் தலைமகன்’ படத்தைத் தயாரித்த ‘தேவர் பிலிம்ஸ்’ நிறுவனத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. ‘‘ராமாவரம் தோட்டத்து வீட்டில் சின்னவர் (எம்.ஜி.ஆர்.) சுடப்பட்டார்’’ என்கிற செய்தி காய்ச்சிய இரும்புக் குழம்பாய் உங்கள் செவிகளில் பாய, வீறிட்டு அலறினீர்கள்.

பதைபதைத்துப் போன தாய் சந்தியா விவரத்தை கேட்க, நீங்கள் சின்னவர் சுடப்பட்ட செய்தியை சொன்னீர்கள். ‘‘இருக்காதும்மா, தேர்தல் நேரம். பரங்கிமலை தொகுதியில் அவர் போட்டியிடுவதால். வேறு ஏதாவது தேர்தல் தகராறு இப்படி தவறாகப் பரவி இருக்கும். சுடும் அளவுக்கு அவருக்கு யார் எதிரி இருக்கிறார்கள்? இது வெறும் வதந்தியாக இருக்கும்...’’ என்று சந்தியா உங்களை ஆசுவாசப்படுத்தினார்.

ராமாவரம் தோட்டத்திற்கு உடனே போன் செய்தீர்கள். அழுதுகொண்டே யாரோ உதவியாளர் தங்களிடம் கூறினார். ‘‘சின்னவரை எம்.ஆர்.ராதா சுட்டுட்டாரு. அவரும் தன்னை சுட்டுக்கிட்டாரு. ரெண்டு பேரையும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டு போயிருக்காங்க...’’ என்று தகவல் தரப்பட... தாயை அழைத்துக்கொண்டு அப்போது நீங்கள் வசித்து வந்த தி.நகர் சிவஞானம் தெருவில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனை நோக்கி சென்றீர்கள்.

ஆனால், ஆயிரம் விளக்கு பகுதியிலேயே உங்கள் கார் தடுத்து நிறுத்தப்பட்டது...!

- தொடர்வேன்... | தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x