Published : 26 Sep 2016 10:09 AM
Last Updated : 26 Sep 2016 10:09 AM
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை
*உலகப் புகழ்பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் (Serena Williams) பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் சாகினோ நகரில் (1981) பிறந்தவர். தந்தை விவசாயி. டென்னிஸ் ஆட்டத்தால் உலகப்புகழ் பெறுவதோடு, நிறைய சம்பாதிக்கவும் முடியும் என்பதால், வீனஸ், செரினா ஆகிய 2 மகள்களையும் டென்னிஸ் வீராங்கனைகளாக்க முடிவுசெய்தார்.
*புத்தகங்கள், வீடியோக்கள் உதவியுடன் குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு டென்னிஸ் கற்றுக்கொடுத்தார். டென்னிஸ் கோர்ட்டிலும் வீட்டிலும் அப்பாவுடன் சேர்ந்து பயிற்சி பெற்றாள் 3 வயது செரினா.
*போட்டிகளில் 8 வயது முதலே வெற்றிபெறத் தொடங்கினார். கருப்பினத்தை சேர்ந்தவர் என்பதால், பல இடங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளானார். இவற்றையெல்லாம் கடந்து, 1991-க் குள் தான் விளையாடிய 46 போட்டிகளில் 43-ல் வெற்றி பெற்று, 10 வயதுக்கு உட்பட்டோரில் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்து பெற்றார்.
*1995-ல் தொழில்முறை வீராங்கனை ஆனார். 2 ஆண்டுகளில் பல வெற்றிகளைக் குவித்தார். உலகத் தரவரிசையில் முன்னணியில் இருந்த வீராங்கனைகளை வென்று உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தார். உலக டென்னிஸ் தரவரிசையின் 304-வது இடத்தில் இருந்து 99-வது இடத்துக்கு உயர்ந்தார். விரைவில் டாப்-10 பட்டியலிலும் இடம்பிடித்தார்.
*2002-ல் பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் வென்றார். 2003-ல் ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக வென்றார். ஒரே நேரத்தில் 4 முக்கிய டைட்டில்களை வென்ற வகையில், இருமுறை ‘தி செரினா ஸ்லாம்’ பட்டம் பெற்றார்.
*தொடர் தோல்வி, காயங்களால் நீண்ட இடைவெளி, தரவரிசையில் இறங்குமுகம் என தடைகள் குறுக்கிட்டாலும், சீக்கிரமே மீண்டுவந்து, விட்ட இடத்தை பிடித்துவிடுவார்.
*ஆண்கள், பெண்களுக்கான 4 ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 6 முறை டைட்டில் வென்ற ஒரே வீராங்கனை, 20 ஆண்டுகளில் 10 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் டைட்டில் வென்ற ஒரே வீராங்கனை, ஹார்ட்கோர்ட் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் போட்டிகளில் 12 டைட்டில் வென்றவர், ஆஸ்திரேலிய ஓபனில் அதிக டைட்டில் வென்ற ஒரே வீராங்கனை என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்.
*308 வெற்றிகளை ஈட்டியதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளைக் குவித்தவர், சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் சேர்ந்து அதிக எண்ணிக்கையில் கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் டைட்டில் வென்றவர், உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாக 309 வாரங்களுக்கு மேல் தொடர்ந்தவர், ஒரு ஒற்றையர் மற்றும் 3 இரட்டையர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர் என நீள்கிறது இவரது சாதனைப் பட்டியல்.
*நேர்த்தியாக, வலுவாக, வேகமாக சர்வீஸ் போடுவதில் வல்லவர். எதிரியின் சர்வீஸை திடமாக எதிர்கொண்டு, அதிரடியாக திசைமாற்றி விடுவதில் நிபுணர். உலக டென்னிஸ் வீராங்கனைகளில் அதிகம் சம்பாதிப்பவர் என்ற சாதனையையும் இந்த ஆண்டு எட்டினார்.
*‘அனரேஸ்’ என்ற பேஷன் நிறுவனம் நடத்துகிறார். தன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, கல்வி உதவித்தொகை, நலத்திட்டங்களை வழங்குகிறார். ஆப்பிரிக்காவில் பல பள்ளிகளைத் தொடங்கியுள்ளார். டென்னிஸ், சமூகசேவை இரண்டிலும் தடம் பதித்துவரும் செரினா வில்லியம்ஸ் இன்று 35 வயதை நிறைவு செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT