Published : 01 Jan 2016 03:46 PM
Last Updated : 01 Jan 2016 03:46 PM

ஏ... ரெண்டாயிரத்து பதினஞ்சே, செஞ்ச்சிட்டு மிஞ்சிட்டியே!

தனக்கு லாட்டரிச் சீட்டில் லட்சம் விழுந்துவிட்டதை எண்ணி தன்னிலை மறந்து, "இந்தத் தெரு என்ன விலை... அய்யோ, நான் எதையாவது வாங்கியே ஆகணுமே!" என்று ஒரு படத்தில் பரபரப்பார் நடிகர் கவுண்டமணி. நகைச்சுவையின் உச்சமான அந்தக் காட்சியை அப்படியேத் திருப்பிப் போட்டால், "நான் இந்த மக்களுக்கு ஏதாவது உதவி செஞ்சே ஆகணுமே" என்று அதே அளவில் சீரியஸாக நம் மக்கள் பரபரத்த ஆண்டு 2015.

நிற்க. இந்தப் புத்தாண்டில் >RBSI ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகிக்கும் கார்த்திக் எனக்கு இன்பாக்ஸ் செய்த ஒரு விஷயத்தை உங்களிடம் அப்படியே பகிர விரும்புகிறேன்.

"சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, முதல் நாள் ரஜினி ரசிகர்கள் எல்லாம் ஒன்றிணைந்து பிஸ்கட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். ராயப்பேட்டையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அதற்கு மேல் போக முடியாது, திரும்பிப் போங்கள் என மாற்றி விட்டார்கள். நாங்கள் வேறு ஒரு தெருக்குள் சென்று விசாரித்து விட்டு சொல்லலாம் என்று குடியிருப்பின் ஓரத்தில் நாங்கள் சென்ற ஆட்டோவை நிறுத்தினோம்.

அப்போது, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இரண்டு பேர் வந்து, "என்ன அண்ணா இது?" என்றவுடன் "ஃப்ளட் ரிலீஃப் கொண்டு போகிறோம்" என்றேன். உடனே, அவர்களது அப்பா, அம்மாவிடம் போய் சொல்லி அவர்களை அழைத்து வந்தார்கள். "என்ன இருக்கிறது?" என்றவுடன் "பிஸ்கட், தண்ணீர் பாட்டில் மட்டும்" என்றேன். "சாப்பாடு இல்லையா... ஒரு 10 நிமிடம் இங்கு இருங்கள். இதோ வர்றேன்" என்று சென்றுவிட்டார்கள். அரை மணி நேரம் வரை காத்திருந்தோம்.

கொஞ்சம் நேரத்தில் நிறைய பாக்ஸ் கொண்டு வந்தார்கள். அந்தக் குடியிருப்பில் இருந்த அனைத்து குடும்பத்துடன் பேசி, அவர்கள் மதிய உணவிற்கு வைத்திருந்த அனைத்து உணவையும் ஒன்றாக கிளறி கொஞ்சம் கொஞ்சமாக பாக்ஸாக கட்டி கொடுத்தார்கள். அதைப் பார்த்தவுடன் எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் கிளம்பும் போது எங்களுடைய நம்பர் வாங்கி கொண்டு, இரவு போன் பண்ணினார்கள். நாளைக்கு எந்த ஏரியாவுக்கு போகிறீர்கள்?, என்ன வேண்டும்? என்றார்கள்.

நாங்கள் நாப்கின்கள், டைபர்கள் என பட்டியல் கொடுத்தோம். நாளை வந்துவிடுங்கள், நாங்கள் தருகிறோம். என்றார்கள். ஒரு மினி ஆட்டோ முழுவதும் பொருட்கள் கொடுத்தார்கள். அந்த குடியிருப்பில் இருந்த மொத்த குடும்பமும், கீழே பாய் விரிந்து பெண்கள் சமைக்க, ஆண்கள் பாக்ஸில் வைக்க குழந்தைகள் அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

"எங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனா எப்படி உதவணும்னு தெரியல. தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருந்ததுப்பா. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போய் மக்களுக்கு கொடுங்க" என்றார்கள். சுமார் 3 நாட்கள் எங்களுக்கு தேவையான பொருட்களில் அவர்களால் முடிந்ததைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

அதுவரை அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் என்றாலே ஒதுங்கிப் போகும் தன்மை கொண்டவர்கள் என்ற என் எண்ணத்தை அப்படியே வெட்டி ஏறிந்தேன். இந்தப் புத்தாண்டு தினத்தில் அந்தக் குடியிருப்புவாசிகள்தான் என் மனதை ஆட்கொண்டு இருக்கிறார்கள். அந்தக் குடியிப்பின் முகவரி: தேவ் குடியிப்பு, 15, அனுமந்தர் ரோடு, பாலாஜி நகர், ராயப்பேட்டை, சென்னை - 14."

இதுதான் அந்த இன்பாக்ஸ் தகவல். இப்போது மீண்டும் தலைப்பைப் படித்துக்கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x