Last Updated : 06 Jun, 2016 03:51 PM

 

Published : 06 Jun 2016 03:51 PM
Last Updated : 06 Jun 2016 03:51 PM

புத்தகக் காட்சி 2016: சுட்டிகளிடம் தவழவேண்டிய ஏழு நூல்கள்!

மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாய் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் எரித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சென்னை புத்தகக் காட்சி நடந்துகொண்டிருக்கிறது. சென்னை பெருமழை வெள்ளத்தால் ஜனவரியில் நடக்க வேண்டிய இந்தப் புத்தகக் காட்சி தள்ளிப்போய் கடந்த ஜூன் 1-ம் தேதி தீவுத்திடலில் தொடங்கியது. ஜூன் 13-ம் தேதி வரை நடக்கிறது.

மழைவெள்ளத்தில் உயிர்கள், உடைமைகளை இழந்து பொதுமக்கள் துயரப்பட்டதைப்போல, புத்தகங்கள் சேதமாகி பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் கூட பெரும் துயரத்துக்குள்ளாகினார்கள். எந்தத் துயரம் வந்தாலும் புத்தகங்களை ஒரு சமூகம் கைவிடக் கூடாதல்லவா! வெயிலின் புழுக்கத்துக்கு மத்தியிலும் புத்தகக் காதலர்கள் புத்தகக் காட்சியை நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ‘தி இந்து’ நாளிதழின் இணையப் பக்கத்தில் புத்தகக் காட்சிக்கென்று சிறப்புப் பரிந்துரைகளை இப்போது தொடங்கியிருக்கிறோம். முதலில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் பற்றி நாம் பார்க்கலாம்.

வெயிலைப் பொருட்படுத்தாமல் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் புத்தகக் காட்சிக்கு அழைத்துவருவது ஆரோக்கியமான விஷயம். ஆனாலும், அந்தப் பெற்றோர்களெல்லாம் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பது ஆங்கிலப் புத்தகங்களே. தமிழில் குழந்தைகளுக்கென்று புத்தகங்களே இல்லை என்று ஒருசிலர் சலித்துக்கொள்கிறார்கள். வேறு சிலரோ தமிழில் படிப்பதென்பது ஏதோ தங்கள் குழந்தைகள் செய்யக்கூடாத விஷயம் என்பதைப் போல நினைக்கிறார்கள்.

தாய்மொழியில் குழந்தைகளைப் படிக்க விடாத, தாய்மொழியில் குழந்தைகளைச் சிந்திக்க விடாத ஒரு சமூகம் அறிவு வளர்ச்சி பெறாது என்பதே உலகெங்கும் உள்ள கல்வியாளர்கள் வலியுறுத்திவரும் விஷயம். நம் சமூகம் அறிவு வளர்ச்சியில் உன்னத நிலை பெற வேண்டுமென்றால் நம் குழந்தைகள் தாய்மொழியிலும் படித்தே ஆக வேண்டும். அந்தக் குழந்தைகள் படிப்பதற்கென்று தரமான புத்தகங்கள் தமிழில் ஏராளமாக இருக்கின்றன. அந்தப் புத்தகங்களைப் பற்றிய பரிந்துரை இங்கே.

1. ஆடும் மயில் – அழ. வள்ளியப்பா பாடல்கள்

வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.

தமிழில் குழந்தை இலக்கியத்தில், குறிப்பாக குழந்தைப் பாடல்களில் அழ. வள்ளியப்பாவுக்குத் தனியிடம் உண்டு. ‘அம்மா இங்கே வா வா’, ‘கைவீசம்மா கைவீசு’, ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு’ உள்ளிட்ட பிரபலமான பாடல்களை எழுதியவர். குழந்தைகளுக்கும் எளிதில் புரியும் விதத்தில் அவரது பாடல்கள் இருப்பது சிறப்பு. அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தர வேண்டிய புத்தகம் இது.

அழ. வள்ளியப்பாவின் பாடல்கள் சில:

லட்டும் தட்டும்

வட்ட மான தட்டு.

தட்டு நிறைய லட்டு.

லட்டு மொத்தம் எட்டு.



எட்டில் பாதி விட்டு,

எடுத்தான் மீதம் கிட்டு.



மீதம் உள்ள லட்டு

முழுதும் தங்கை பட்டு

போட்டாள் வாயில், பிட்டு.



கிட்டு நான்கு லட்டு;

பட்டு நான்கு லட்டு;

மொத்தம் தீர்ந்த தெட்டு

மீதம் காலித் தட்டு!

அணில்

அணிலே, அணிலே ஓடி வா

அழகு அணிலே, ஓடி வா.

*

கொய்யா மரம் ஏறி வா.

குண்டுப் பழம் கொண்டு வா.

*

பாதிப் பழம் உன்னிடம்;

பாதிப் பழம் என்னிடம்;

*

கூடிக் கூடி இருவரும்

கொறித்துக் கொறித்துத் தின்னலாம்!

*

அலட்சியம்

தொப்பென்று வீழ்ந்தான்!

தெருவில் நடந்து சென்றான்

சின்னச்சாமி என்பான்.

*

வாழைப் பழத்தைத் தின்றான்;

வழியில் தோலை எறிந்தான்;

*

மேலும் நடந்து சென்றான்;

விரைந்து திரும்பி வந்தான்;

*

தோலில் காலை வைத்தான்.

தொப்பென்று அங்கே வீழ்ந்தான்!

2. தாத்தா சொன்ன கதைகள், சிறுவர் நாடோடிக் கதைகள்

(இரண்டு நூல்கள்)

தொகுப்பாசிரியர்: கி. ராஜநாராயணன்

அகரம் வெளியீடு.

நமது நாட்டுப்புறக் கதை மரபில் சிறுவர்களுக்கான கதைகள் ஏராளம் உண்டு. அது போன்ற கதைகளைத் தொகுத்து பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வெளியிட்ட தொகுப்புகள்தான் இவை. கிராமப்புறத்துச் சத்திரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் தாத்தா ஒருவரிடம் கதை கேட்ட அனுபவத்தை இந்தக் கதைகள் தரும். பெரியவர்களும் இந்தக் கதைகளைப் படித்து மேலும் எளிமையாக, நடித்துக்காட்டிக் குழந்தைகளுக்குக் கதை சொல்லலாம்.

3. மழைக்காலமும் குயிலோசையும் (8 தொகுதிகள் அடங்கிய சிறுவர் பதிப்பு)

மா. கிருஷ்ணன் காலச்சுவடு பதிப்பகம்

பிரபல இயற்கையியல் எழுத்தாளரான மா. கிருஷ்ணன் பறவைகளைப் பற்றியும் விலங்குகளைப் பற்றியும் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்துச் சிறுவர்களுக்கேற்ற விதத்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நம் குழந்தைகளுக்கு இயற்கை மீதான ஆர்வம் ஏற்படச் செய்யும் புத்தகங்கள் இவை.

4. குட்டி இளவரசன்

அந்துவான் து செந்தெ எக்சுபெரி க்ரியா பதிப்பகம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் 'குட்டி இளவரசன்' ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.

குழந்தைகளே உங்கள் எல்லோருக்கும் தனித்தனி கோள்கள் இருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் உங்கள் வீடு அளவுக்கே உள்ள கோளில் நீங்களும் உங்களுக்குத் துணையாக ஒரு ரோஜாவும் அடுப்பின் அளவே இருக்கும் சில எரிமலைகளும் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட கோள் ஒன்றிலிருந்து, தனது காதலியான ரோஜாவுடன் சண்டையிட்டுப் புறப்படுகிறான் குட்டி இளவரசன். ஒவ்வொரு கோளாக ஆறு கோள்களில் ஆறு விதமான மனிதர்களைச் சந்தித்துவிட்டு ஏழாவதாக பூமிக்கு வருகிறான். அதாவது, 'நூற்றுப் பதினோரு அரசர்கள்… ஏழாயிரம் புவியியலாளர்கள், ஒன்பது லட்சம் வியாபாரிகள், எழுபத்தைந்து லட்சம் குடிகாரர்கள், முப்பத்தோரு கோடியே பத்து லட்சம் தற்பெருமைக்காரர்கள்-அதாவது ஏறக்குறைய இருநூறு கோடி பெரியவர்கள்' இருக்கும் பூமிக்கு வருகிறான். விமானி ஒருவரைச் சந்திக்கிறான்.

பெரியவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை என்பதை அந்த விமானிக்குக் குட்டி இளவரசன் உணர்த்துகிறான். குட்டி இளவரசன் சந்திக்கும் முக்கியமான இன்னொரு கதாபாத்திரம் நரி. "இதயத்துக்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது' என்ற ரகசியத்தைக் குட்டி இளவரசனுக்கு நரி சொல்கிறது. பூமிக்கு வந்து சரியாக ஒரு ஆண்டு ஆன பிறகு மீண்டும் தன் கோளுக்குச் செல்ல விரும்புகிறான் குட்டி இளவரசன். ஒரு அரசனின் விரலைவிட அதிக சக்தியைக் கொண்ட பாம்பு குட்டி இளவரசனுக்கு உதவிசெய்கிறது. குட்டி இளவரசனை இழந்த விமானியோ துயரத்தில் ஆழ்கிறார்.

குழந்தைகளே உங்களுக்கும் குட்டி இளவரசனோடு பேச வேண்டுமா? இரவில் வானத்தில் தெரியும் எண்ணற்ற விண்மீன்களுக்கிடையே ஒரு கோளில் இருந்துகொண்டு உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் குட்டி இளவரசனை நோக்கிக் கையசையுங்கள், அவன் உங்கள் அன்பை ஏற்றுக்கொள்வான்.

5. அறிமுகக் கையேடுகள்: பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள் ஊசித்தட்டான்கள்

(மூன்று புத்தகங்கள்)

க்ரியா பதிப்பகம்

குழந்தைகளிடம் இயற்கைமீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு இருக்கும். பெரியவர்கள்தான் அந்த ஈர்ப்பை அவர்களிடம் குறைத்துவிடுகிறார்கள். அந்த ஈர்ப்பை அதிகப்படுத்தக்கூடிய புத்தகங்கள் இவை. இந்தியாவின் புகழ்பெற்ற காட்டுயிர் புகைப்படக்காரர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் உயிரினங்களைப் பற்றிய எளிய விளக்கமும், அவற்றுக்குச் சரியான பெயர்களும் இந்தப் புத்தகங்களின் சிறப்பம்சங்கள்.

நேஷனல் புக் டிரஸ்டின் வெளியீடுகள்

புத்தகக் காட்சிக்கு வரும் பெற்றோர்களும் சிறுவர்களும் அவசியம் செல்ல வேண்டிய அரங்கு நேஷனல் புக் டிரஸ்டின் அரங்கு. நினைத்தே பார்க்க முடியாத அளவுக்குக் குறைந்த விலையில் தரமான ஓவியங்களையும் அற்புதமான வடிவமைப்பையும் கதைகளையும் கொண்ட புத்தகங்களை நேஷனல் புக் டிரஸ்டின் அரங்கில் வாங்கலாம். அந்தப் பதிப்பகத்தின் முக்கியமான புத்தகங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்

6. தண்ணீர்

கிறிஸ்டோபர் செங், சூசன்னா கோஹோ-குவெக்

தண்ணீரைப் பற்றிய சிறு சிறு தகவல்களைக் கவித்துவமாக வர்ணிக்கும் வாசகங்களுடன் அற்புதமான ஓவியங்களுடன் இந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கிறார்கள். தண்ணீரின் வெவ்வேறு தோற்றங்களை அழகிய ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு அழகுணர்ச்சியைத் தூண்டும் புத்தகம் இது.

7. பலூன்

டி.டி. படேகர்

வார்த்தைகளே இல்லாமல் ஓவியங்களால் ஒரு கதையைச் சொல்லும் அருமையான புத்தகம் இது. ஒரு சிறுவனுக்கு பாதையில் பலூன் ஒன்று கிடைக்கிறது. அதை ஊதி ஊதிப் பெரிதாக்குகிறான். ஒரு கட்டத்தில் அந்த பலூன் அவனைத் தூக்கிக்கொண்டு பறக்க ஆரம்பிக்கிறது. இன்னும் ஊத ஊத கட்டிடங்கள், ஆறுகள், மலைகள், கடல்கள் தாண்டி பறக்கிறான். ஒரு கட்டத்தில் ‘டப்’பென்று பலூன் வெடிக்க அந்தரத்திலிருந்து பல்டி அடித்துக் கீழே விழ ஆரம்பிக்கிறான் அந்தச் சிறுவன். முடிவில் ஒரு திருப்பம் வருகிறது. அதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

தூலிகா...

இவை தவிர தூலிகா பதிப்பகத்தின் புத்தகங்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. காந்தியின் வாழ்க்கயை அற்புதமான பழங்குடி பாணி ஓவியங்களைச் சொல்லும் ‘நான் சொல்லும் காந்தி கதை’, அம்பேத்கரின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சொல்லும் ‘ஏன் என்று கேட்ட சிறுவன்’ போன்ற புத்தகங்களும் நம் குழந்தைகளுக்கு தேசத் தலைவர்களைப் பற்றிய அறிவை ஊட்டுபவை. தாரா பதிப்பகமும் குழந்தைகளுக்கான முக்கியமான புத்தகங்களை வெளியிட்டுவருகிறார்கள். இந்த இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களும் சற்று விலை அதிகம் என்றாலும் வடிவமைப்பும் ஓவியங்களும் அவற்றில் மிகவும் பிரமாதமாக இருக்கும். அவசியம் வாங்க வேண்டியவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x