Published : 17 Jun 2017 10:08 AM
Last Updated : 17 Jun 2017 10:08 AM
அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கப் போனபோது, அவரது தொழில்நுட்ப கணினிக்குழு கம்ப்யூட்டரில் “இது மண்வெட்டி, இது கடப்பாரை’’ என்று படங்களை அவரிடம் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார்கள்.
உல்டாவின் தலையைப் பார்த்ததும், ‘அப்புறம் கேட்டு தெரிஞ்சிக்கிறேன்’ என்று அவர்களிடம் சைகை காட்டி, இருகரம் கூப்பி உல்டாவை வரவேற்றார்.
‘‘வணக்கம் செயல் தலைவரே. விரைவில் ஆட்சி கலையும்னு அடிக்கடி சொல்றீங்களே. மீடியாவுக்கே தெரியாத தகவல் உங்களுக்கு எப்படி லீக் ஆகுது? டெல்லியில நம்பகமான ஆளெல்லாம் இன்னமுமா இருக்காங்க?’’ என்று படாரென தலைப்புச் செய்திக்கு தாவினார் உல்டா.
‘‘தகவலாவது.. சும்மா அடிச்சு விடறதுதான். இந்த ஆட்சியில குழப்பம் உண்டாக்குறது ரொம்ப ஈஸி. எல்லாம் பழைய பார்முலாதான். அசெம்பிளியை கூட்டச் சொன்னோம். எதுக்கு? பன்னீருக்கு நாலு வணக்கம் போட்டேன். சசிகலா கடுப்பானதுல, பன்னீர் முன்னாள் முதல்வராயிட்டார். இப்ப எடப்பாடி அரசின் நூறுநாள் சாதனையை பாராட்டி ஒரு தீர்மானம் கொண்டு வருவோம். ஜெயலலிதாவால் முடியாததை எல்லாம் தங்கத் தாரகன் எடப்பாடி செஞ்சிட்டார்னு பாராட்டிப் பேசுவோம். அப்புறம் என்ன ஆகும்? ஒரே குழப்பம்தான். ஆட்சி காலிதான்’’ என்று துள்ளிக் குதித்தார் ஸ்டாலின். ஓ... அரசியல் சாணக்கியம்றது இதுதானா என்று நினைத்தபடி கிளம்பினார் உல்டா.
மீண்டும் கட்சி பணியில் ஈடுபடுவேன்! - டிடிவி தினகரன்
டிடிவி வீட்டுக்கு போனபோது, டிவியில் அவர் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தார். ‘சார், ஸ்கோர் எவ்வளவு?’ என்று உல்டா கேட்க, கொஞ்சம்கூட யோசிக்காமல், ‘‘இந்த நிமிஷ நிலவரப்படி, எனக்கு 54 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கு. முதல்வராக 117 வேணும். அது வந்துடும். ஒண்ணும் பிரச்சினை இல்லே’’ என்று வழக்கம்போல உற்சாகமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒருவித நம்பிக்கையோடு சொன்னார்.
‘‘இருக்கட்டும். நீங்க ரொம்ப குழப்புறீங்க. மொதல்ல ஒதுங்கறேன்னீங்க. இப்போ கட்சிப் பணியில் ஈடுபடுவேன்றீங்க. ஒண்ணும் புரியலையே’’ என்று உல்டா தலையை சொறிய, ‘‘நான் கரெக்டாத்தான் பேசுறேன். கொஞ்சநாள் ஒதுங்கணும்னு நினைச்சது உண்மைதான். ஆனா, தீவிர அரசியல்ல இருந்தே என்னை துரத்தணும்னு பி.எம். நினைக்கிறாரே, என்ன பண்றது? கட்சிக்காக பல தியாகங்களைச் செய்து எங்கள் குடும்பம் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது…’’
‘‘நீங்க எதச் சொல்ல வர்றீங்க?’’ கன்ஃபியூஸாகிக் கேட்டார் உல்டா.
‘‘இரட்டை இலை சின்னத்தை தக்கவச்சுக்கிறதுக்காக லஞ்சம் கொடுத்தேன்னு சொல்லி திஹார் சிறையில் போட்டாங்க. நீங்களே சொல்லுங்க, கட்சிக்காக, கட்சி சின்னத்துக்காக நான் பண்ணின தியாகம்தானே இது. கட்சிக்காக ஜெயிலுக்குப் போறதும் கட்சிப் பணிதானே? இதே மாதிரி சின்னம்மாவும் ஜெயில் பணியிலதான் இருக்காங்க. எங்களைப் போயி விலக்கி வைக்கணும்னு சொல்றாரு ஜெயக்குமார்.. என்னத்த சொல்றது’’ என்று அலுத்துக்கொண்டார் டிடிவி.
‘‘சரி சின்னம்மாவைப் பார்த்தீங்களே, என்ன பேசினீங்க?’’
‘‘வா, நல்லாருக்கியான்னாங்க. நல்லாருக்கேன்னு சொன்னேன்.’’
‘‘ஆமா, அப்புறம், ‘திஹார்ல கொசு பெருசா இருந்திச்சா? வடமாநிலமாச்சே, இட்லி, தோசை, பொங்கல், வடை உண்டா? இல்ல சப்பாத்தி, சப்ஜிதானா’னு கேட்டிருப்பாங்க. அதெல்லாம் விடுங்க சார். மேட்டர் என்ன பேசுனீங்க?’’
‘‘ஆர்.கே.நகர்ல தேர்தல் வராட்டியும் கவலைப்பட வேணாம். ஆர்.கே.நகர் இல்லாட்டி என்ன, ராயபுரம் தொகுதி இருக்கே. அந்த எம்எல்ஏ ராஜினாமா செய்வார். நீ அங்கே போயி நின்னுக்கனு சொன்னாங்க’’ என்றார்.
‘‘அதாவது.. உங்களை எதிர்த்துப் பேசுற ஜெயக்குமாரோட தொகுதிக்கு குறிவைக்கிறீங்க, அப்படித்தானே..’’ என்று உல்டா இழுக்க.. ‘‘ஆமாம். அதிமுக எப்பவுமே கட்டுப்பாடான கட்சி. மேலிடம் கட்டளையிட்டால் தொண்டன் நிச்சயம் கட்டுப்படுவான். தன் பதவியை ராஜினாமா செஞ்சு உண்மையான தொண்டர்னு நிரூபிக்க ஜெயக்குமாருக்கு இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்குமா, சொல்லுங்க’’ என்று பச்சைக் குழந்தையாகச் சிரித்தார் டிடிவி. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நைஸாக வெளியேறினார் மிஸ்டர் உல்டா.
இரட்டை இலை சின்னம் எங்களுக்கே - ஓ.பன்னீர்செல்வம் உறுதி
‘‘தியானத்தில் இருக்கார். ஃபைவ் மினிட் வெய்ட் ப்ளீஸ்’’
ஓபிஎஸ்-ஐ பார்க்கப்போன மிஸ்டர் உல்டாவை வராண்டாவில் உட்காரவைத்தார் அவரது கம்ப்யூட்டர் குழு உறுப்பினர்.
தியானம் முடிந்து வந்த பன்னீரிடம், ‘‘உங்களுக்கே இது ஓவரா தெரியலையா? இரட்டை இலை சின்னம் எங்களுக்கேனு எந்த தைரியத்துல பேட்டி கொடுக்கறீங்க!’’ என்றார் உல்டா.
‘‘மூணு முறை முதல்வர் நான். எடப்பாடி இப்போதான். அதுகூட இப்பவோ எப்பவோனு இருக்கு. சின்னம்மா கவுன்சிலர்கூட இல்லே. தினகரன் கட்சியிலேயே இல்லே. இப்போ சொல்லு உல்டா.. தேர்தல் கமிஷன் யாரை நம்பி இரட்டை இலையைத் தரும்!’’ என்று குதூகலத்தோடு கேட்டார் பன்னீர்.
‘‘அதை வுடுங்க. உங்க கோஷ்டி எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்து பனிரெண்டைத் தாண்டலை. அந்த கோஷ்டி திஹார்ல இருக்கோ, பரபரப்பான அக்ரஹாரத்துல இருக்கோ, ஷிகர் தவண் ஸ்கோர் மாதிரி ஆதரவு எம்எல்ஏ ஐம்பதைத் தொட்டுடும் போலிருக்கே.. முன்பெல்லாம் உங்க வீட்டு வாசல்லே வேர்க்கடலை, பஞ்சுமிட்டாய் விக்கிறவங்க பத்துப் பதினைந்து பேர் இருப்பாங்க. ஐ.டி. ரெய்டு வரும் அளவுக்கு அவங்க வியாபாரம் களைகட்டிச்சு. இப்போ ரெண்டே பேருதான் நிக்கிறாங்க. உங்களை மாதிரியே அவங்க வியாபாரமும் டல்லடிக்குதாம். இப்போ தினகரன் வீட்டு வாசல்லதான் நல்லா கல்லா கட்டுதாம். இந்த ரெண்டு பேரும் அங்கே போய்டப்போறதா பேசிக்கிறாங்க’’ என்ற உல்டாவை நோக்கி பொறுமையாக சிரித்தபடி, ‘‘தர்மயுத்தம்னா கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்’’ என்றார்.
‘‘ஜனாதிபதி தேர்தல்ல உங்க ஓட்டை எல்லாம் வாங்கிட்டு, ஆட்சியை ஆட்டயப் போட்டுருவாங்கன்னு டெல்லி நார்த் பிளாக்ல பேசிக்கிறாங்களே, உங்க காதுக்கு எட்டலையா?’’ என்று விடாப்பிடியாகக் கேட்ட உல்டாவிடம், ‘‘ஒரு விஷயம் தெரியுமா? ஜனாதிபதி வேட்பாளர் பெயர் பரிசீலனையில என் பெயரும் இருக்கு. ஹை ரெக்கமண்டேஷன். ‘ரப்பர் ஸ்டாம்ப்புன்னா பன்னீர், பன்னீர்னா ரப்பர் ஸ்டாம்ப்புன்னு வெங்கய்யாதான் என்னைப் பத்தி எடுத்துச் சொல்லியிருக்காராம்’’ கனவில் மிதந்தபடி பன்னீர் சொல்ல, அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் எஸ்ஸானார் உல்டா.
ஆர்.கே. நகரில் இப்போது தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை: தேர்தல் கமிஷன்
ஆர்.கே. நகர் நீண்ட நாள் வாக்காளர் முனியம்மாவைச் சந்தித்த உல்டா, ‘‘என்ன இப்படி ஆயிடுச்சே’’ என்று துக்கம் விசாரிக்க, ‘‘அதெல்லாம் ஒண்ணும் இல்லே நைனா. இதே எலீஷன் கமிஷன் சீக்கிரமே தேர்தல் தேதியைச் சொல்லும் பாரு.. நான் கும்பிடற செல்லியம்மன் என்னை கைவிட மாட்டா. தேர்தல் தேதி சொல்லிட்டா தொப்பி மாலை சாத்துறதா அம்மனுக்கு வேண்டியிருக்கேன்.. அக்காங்’’ என்றாள் முனியம்மா.
‘‘தேர்தல் வந்தா என்ன, வராட்டிதான் உனக்கு என்ன? ஏன் இப்படி மெர்சிலா பிராத்திக்கிறே?’’ என்று உல்டா ஆவலுடன் கேட்க.. ‘‘வந்தா என்ன, வராட்டி என்னவா? நம்ம பொய்ப்ப கெட்த்துருவ போல்ருக்கே. என் பேர்னுக்கு ஆண்ட்ராய்டு போனு, பேத்திக்கு ஐபேடு போனு வாங்கணும். வூட்லே எல்சிடிதாம்பாகீது. எல்இடி இல்லே. அத்த வாங்கணும். இதெல்லாம் வோணும்னா காசு வோணாவா? அதுக்குதான் வேண்டிக்கிறேன் எலீஷன் வர்ணும்னு. போனதபா எலீஷன் வந்தப்போ எனக்கு வாட்ஸப் போனு, பொண்ணுக்கு டாலர் செயினு வாங்கி, வூட்டுக்கு டைல்ஸ் மட்டும்தாம்பா போட முடிஞ்சுது. என் வூட்லே பதினேழு ஓட்டு. உறுப்பினர் பட்டியலுக்கே உள்தாள் ஒட்ற அளவுக்கு பெரீய்ய ஃபேம்லி. சர்வகட்சியும் ஓட்டுக்கு வூட்டாண்ட வந்தே ஆகணும்’’ என்று சொல்லிக்கொண்டே வந்த முனியம்மா திடீரென ஜகா வாங்கினாள். ‘‘ஆமா, மீடியாக்கார தம்பி நீ ஏன் இம்பூட்டு டீடெயிலு கேக்குற. எதுவும் கேமரா கீமரா மற்ச்சு வச்சு, இந்திக்கார சேனலுக்காக ஷூட்டிங் பண்ணிக்கிறியா?’’ என்று சீரியஸாக.. உல்டா எஸ்கேப்!
(கொட்டை எழுத்து தலைப்பு செய்திகள் மட்டும் நிஜம். உள் செய்தி எல்லாம் மிஸ்டர் உல்டாவின் பீம் சர்வீஸ்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT