Published : 17 Feb 2017 10:16 AM
Last Updated : 17 Feb 2017 10:16 AM

ஆட்டோ ஸ்டர்ன் 10

நோபல் பெற்ற ஜெர்மனி இயற்பியலாளர்

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளரும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆட்டோ ஸ்டர்ன் (Otto Stern) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியில் ஸோஹரா என்ற பகுதியில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் (1888). மகனுக்கு இருந்த கணித மற்றும் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க அவனுக்குத் தேவையான அத்தனை நூல்களையும் அப்பா வாங்கித் தந்தார்.

* இவருக்கு 4 வயதாக இருந்தபோது பெற்றோர் பிரெஸ்லவில் குடியேறினர். அங்கேதான் பள்ளிப் படிப்பு பயின்றார். மேற்படிப்புக்கான பாடங்களைத் தேர்வு செய்ய அறிவியலின் பல துறை நூல்களைப் பயின்றார், மூலக்கூறு கோட்பாடு, வெப்ப இயக்கவியல் ஆகியவற்றில் ஆர்வம் உண்டாயிற்று.

* பிரெஸ்லவ் பல்கலைக்கழகத்தில் 1906-ல் இயற்பியலும் வேதியியலும் பயின்றார். 1912-ல் அடர் திரவங்களில் கார்பன்டை ஆக்சைடின் சவ்வூடு பரவல் குறித்து கோட்பாடு மற்றும் பரிசோதனை முறைகளில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் பிராகா, சூரிச், பல்கலைக்கழகங்களில் இயற்பியல் சார் வேதியியலில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

* 1919 முதல் சோதனை இயற்பியல் களத்தில் ஆர்வம் கொண்டார். பின்னர் பிராங்க்பிரட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி மாக்ஸ் போனுடன் இணைந்து திடப் பொருள்களின் மேற்பரப்பு ஆற்றலைக் குறித்து ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டார்.

* 1923-ல் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியல்சார் வேதியியலில் பேராசிரியராகப் பணியாற்றினார். வெப்ப இயக்கவியல் மற்றும் குவாண்டம் கோட்பாடு குறித்து ஆராய்ந்தார்.

* கேர்லாக்குடன் இணைந்து காந்தப் புலங்களின் செயல்பாடுகள் மூலம் காந்தத் திருப்புத் திறனில் (magnetic moment) அணுக்களின் விலகல் குறித்து ஆராய்ந்தார். இது ஸ்டெர்ன்-கேர்லாக் சோதனை என்று குறிப்பிடப்பட்டது. புரோட்டான்கள் உள்ளிட்ட துணை அணுத் துகள்களின் காந்தத் திருப்புத்திறனை அளந்தார். ஏஸ்டர்மேனுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களையும் ஆராய்ந்து, அணுக்கள் மூலக்கூறுகளின் அலை இயல்பைக் கண்டறிந்தார்.

* 1933-ம் ஆண்டு நாசிக்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு, இவர் ஜெர்மனியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பை ஏற்று அங்கு சென்றார். பிட்ஸ்பர்கில் கார்னகி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பேராசிரியராகவும், மூலக்கூறு ஆராய்ச்சிகளுக்கான ஆய்வுக்கூடத்தில் ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டார்.

* இங்கு தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்த இவர், மூலக்கூறு கோட்பாட்டில் பயன்படுத்தப்படும் அடிப்படை கருத்துருக்களுக்கான நிரூபணங்களை வழங்க வேண்டும் என்பதை உணர்ந்தார். இதற்காக மூலக்கூறு - கற்றை முறை ஒன்றை மேம்படுத்தினார்.

* இவர் கண்டறிந்த மூலக்கூறு கற்றை முறை மூலக்கூறுகள், அணுக்கள் மற்றும் அணு உட்கரு குறித்த ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் துணை நின்றன. குறிப்பாக, வாயுக்களில் திசைவேக பங்கீடு குறித்த சோதனைகளுக்கு உதவின. இதற்காக இவருக்கு 1943-ம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ எல்.எல்.டி. பட்டம் வழங்கியது. அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி, அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்ட் சயின்ஸ், ஃபிலாசபிகல் சொசைட்டி உள்ளிட்ட பல அமைப்புகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இயற்பியல் களத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஆட்டோ ஸ்டர்ன் 1969-ம் ஆண்டு 81-வது வயதில் மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x