Published : 11 Jun 2016 12:14 PM
Last Updated : 11 Jun 2016 12:14 PM
M.G.R.தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்பதோடு, மிகுந்த தமிழ்ப் பற்றும் கொண்டவர். தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும்தான் என்பதை பெருமிதத்தோடு சொல்வார். தமிழுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் நிலைத்து நிற்க வழி செய்தார்!
1974-ம் ஆண்டு பிப்ரவரியில் பாண்டிச்சேரியில் சட்டப் பேரவைக்கும் நாடாளு மன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றார். மாஹே என்ற இடத்தில் பிரசாரக் கூட்டம். அந்தப் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம். மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கினார். அவரது பேச்சை இடைமறித்து, மலையாளத்தில் பேசு மாறு கூட்டத்தில் இருந்த பெரும்பாலோர் கேட்டுக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு வந்ததே கோபம்!
‘‘எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி தமிழ் மட்டும்தான். சிறுவயதில் நாடக மேடை மூலம் தமிழ் கற்றுக் கொண்டேன். வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் தமிழில்தான் பேசுவேன். நான் வளர்ந்து, புகழ்பெற்று, இன்று உங்கள் முன் நிற்பதற்கு என்னை அரவணைத்து ஆளாக்கிய தமிழகம் தான் காரணம். எனவே, தமிழில்தான் பேசுவேன். விருப்பம் உள்ளவர்கள் என் பேச்சைக் கேட்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் இங்கிருந்து சென்று விடலாம்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளினார். பின்னர், வாய் திறக்காத கூட்டத்தினர் அவரது தமிழ் உணர்வைக் கண்டு வியந்தனர்.
இந்தத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்... பாண்டிச்சேரி சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 30 தொகுதி களில் அதிமுக 12 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஸ்தாபன காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக 2 தொகுதிகளில் வென்றது. பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் பாலா பழனூர் வெற்றி பெற்றார்.
புதுவை முதல்வராக அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்தாலும், தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி அகில இந்திய அளவில் பேசப்பட்டது. அந்த சமயத் தில் கோவை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செ.அரங்கநாயகம் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுகவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.
தமிழுக்கு தொண்டாற்றி ‘முத்தமிழ் காவலர்’ என்று போற்றப்பட்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். நீதிக்கட்சியிலும் பணியாற்றியுள்ளார். நீதிக்கட்சியின் சார்பில் பனகல் அரசர் சர்.ராமராய நிங்கார் 1921-ம் ஆண்டு முதல் 1926-ம் ஆண்டுவரை சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்தார். அப்போதெல்லாம், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்றால் அந்த மாணவன் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.
பனகல் அரசரை கி.ஆ.பெ. விசுவ நாதம் சந்தித்து, ‘‘ஆங்கிலமும் தமிழும் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தரவேண்டும்’’ என்று வலியுறுத்தி வெற்றி பெற்றார். அதன் பின்னர்தான், பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் மருத்துவக் கல்லூரி வாயிலை மிதிக்க முடிந்தது. பனகல் அரசர் நினைவாகத்தான் சென்னை சைதாப்பேட்டையில் ‘பனகல் மாளிகை’யும் தியாகராய நகரில் ‘பனகல் பூங்கா’வும் அமைந்துள்ளன.
கி.ஆ.பெ. விசுவநாதத்துக்கு தமிழுக்கு என்று ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று விருப் பம். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது அவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். உடனடியாக அதற்கு எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். கி.ஆ.பெ.விசுவநாதத் தையே அதற்கான திட்டங்களை தயாரிக் கும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்ட தோடு, ஒரு குழுவையும் அமைத்து அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தார். அப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப் டம்பர் 15-ம் தேதி உருவாக்கப் பட்டதுதான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.
தமிழறிஞர் டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு உண்டு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் அண்ணன் சதாவதானி தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். ஒரே நேரத்தில் நூறு செயல்களை கவனித்து, நினைவில் நிறுத்தி பின்னர், அவற்றை சரியாக வெளிப்படுத்துபவர்களை ‘சதாவதானி’ என்று போற்றுவர். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவர் கிருஷ்ணசாமி பாவலர். அவர் எழுதிய ‘கதர் பக்தி’, ‘நாகபுரி கொடிப்போர்’ உள்ளிட்ட தேசிய மற்றும் சமூக சீர்த்திருத்த நாடகங்களில் சிறுவயதில் நாடக மேடைகளில் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.
அவரது சகோதரரான தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக் குப் பிறகு அவரது திருவுருவச் சிலையை, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். மதுரை பல்கலைக்கழகத்துக்கு 1978-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியதும் எம்.ஜி.ஆர்.தான்!
தனது இறுதிமூச்சு வரை தமிழுக் காகவே முழங்கியவர் தேவநேயப் பாவாணர். அவருக்கு எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு உண்டு. 1981-ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தமிழுக்கு எம்.ஜி.ஆர். சிறப்பு சேர்த்தார். மாநாட்டில் பாவாணரின் பேச்சை எம்.ஜி.ஆர். ஆர்வமுடன் கேட்டார். தேவநேயப் பாவாணர் தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்.
உலகில் உள்ள எத்தனை மொழி களுக்கு தமிழ் மூலமொழியாக விளங்குகிறது என்பதையும் எத்தனை மொழிச் சொற்களுக்கு தமிழே வேர்ச் சொல்லாக விளங்குகிறது என் பதையும் ஆதாரபூர்வமான கருத்துக் களுடன் பாவாணர் சுவைபடப் பேசிக் கொண்டே போனார். சாப்பாட்டு நேரமும் கடந்துவிட்டது. சாப்பாட்டையும் மறந்து அவரது பேச்சை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார். கூட்டமும் ஆர்ப்பரித்தது. ஒருமணி நேரத்துக்கும் மேல் பாவாணரின் சொல்மாரி தொடர்ந்தது.
அன்றைய தினமே எதிர்பாராத அந்த சோகமும் நடந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதுரை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சில நாட் களில் நோயின் தாக்கத்தால் தமிழின் மேன்மைக்காக ஒலித்த அவரது பேச்சு மட்டுமல்ல; மூச்சும் அடங்கியது. இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. தேவநேயப் பாவாணரின் பெயர் நிலைத்து நிற்கும் வகையில் மாவட்ட நூலகங்களுக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.
‘‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’’ என்று முழங்கியவர் புரட்சிக் கவிஞர்!
அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் புரட்சித் தலைவர்!
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழ் அறிஞருமான ம.பொ.சி. எழுதிய, ‘விடுதலைப் போரில் தமிழகம்’ நூலை நாட்டுடமை யாக்கி, அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை செய்த தற்காக ம.பொ.சி.க்கு எம்.ஜி.ஆர். நிதி வழங்கினார்! |
முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT