Published : 24 Aug 2016 10:09 AM
Last Updated : 24 Aug 2016 10:09 AM

சிலை சிலையாம் காரணமாம் - 35: தெய்வம் நின்று கொல்லுமா?

சுங்கத் துறையால் நிறுத்தி வைக்கப்படும் பார்சல்களில் உள்ள கலைப் பொருட்களின் தன்மையைப் பரிசோதிப்பதற்காக இந்திய தொல்லியல் துறையில் உள்ள சர்வேயர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் துறைமுகம், விமான நிலையங்களுக்கு வருவார்கள். அவர்கள் பரிசோதித்து தடையின்மை சான்றளித்தால் மட்டுமே அவை வெளிநாட்டுக்குப் பயணமாகும்.

தொல்லியல் துறையிடம் ஏற்றுமதிக் கான பொருட்களைக் காட்சிப் படுத்தும்போது அவைகள் சோதிக்கப் பட்டு, சான்றளிக்கப்பட்டதற்கான எந்த முத்திரையும் அவற்றின் மீது பதிக்கப் படுவது இல்லை. இதுதான் கடத்தல் புள்ளிகளுக்கு சாதகமாகிவிடுகிறது. ‘‘தொல்லியல் துறையிடம் காட்சிப் படுத்தப்பட்ட பொருட்கள் மீது முத்திரை பதிப்பதோடு அவற்றை அப்போதே ‘பேக்கிங்’ செய்து அதன் மீதும் முத்திரை பதிக்க வேண்டும். இப்படிச் செய்தால் கடத்தலைத் தவிர்த்துவிடலாம்.’’ என்கிறார்கள் கலைப் பொருள் ஏற்றுமதியில் இருப்பவர்கள்.

இதுகுறித்து பேசிய தொல்லியல் துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர், ‘‘நல்ல யோசனைதான். ஆனால், அதிகாரிகளிலும் சிலர் கள்ளம் பாய்கிறார்களே. முன்பாவது போலி சிலைக்கு சான்று பெற்று அத்தோடு ஒரிஜினல் சிலைகளையும் கலந்து வைத்துக் கடத்தினார்கள். ஆனால் இப்போது, அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு தைரிய மாக ஒரிஜினல் சிலைகளை மட்டுமே வைத்து கடத்துகிறார்கள். இதன் பின்னணியில் பல முக்கியக் கைகள் இருப்பதால் எத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் சிலைக் கடத்தலைத் தடுக்கமுடியாது’’ என்றார்.

தமிழக சிலைக் கடத்தல் மன்னர்கள்

சுபாஷ் சந்திர கபூர், தீனதயாள், சஞ்சீவி அசோகன், லெட்சுமிநரசிம்மன் போன்றவர்கள் பிரபலமான சிலைக் கடத்தல் புள்ளிகளாக பேசப்பட்டாலும் சிறியதும் பெரியதுமாக இன்னும் பலர் இந்தத் தொழிலில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த நாற் பது ஆண்டுகால தமிழக சிலைக் கடத்தல் தளத்தின் பிதாமகனாக சி.வி.ராமனைச் சொல்கிறார்கள். இவர் ஒரு சிவில் இன்ஜினீயர்.

காஞ்சிபுரத்தில் போலி பதிவெண் கொண்ட லாரியைப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் ராமன். அப்போது சிறைக்குள் திருட் டுக் கும்பலைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி, சுப்பிரமணியன் உள்ளிட்டவர் களோடு அவருக்கு சகவாசம் ஏற்படு கிறது. அவர்களைக் கொண்டே சிறைக் குள்ளேயே ஒரு அணியை உருவாக்கிய ராமன், விடுதலை ஆனதும் அவர்களை வைத்தே கோயில் சிலைகளுக்குக் குறி வைக்கிறார். சிலையைப் பார்த்த மாத் திரத்தில் அது எந்தக் காலத்து சிலை என்ப தை தெளிவாகச் சொல்லி விடும் ராமன், கோயில்களுக்குச் சென்று சிலைகளை அடையாளம் காட்டுவார். அவரால் இயக்கப்படும் நபர்கள் அந்த சிலைகளை வெற்றிகரமாக கடத்தி முடிப்பார்கள் என்று சொல்கிறது போலீஸ்.

இதே போல் மும்பை வல்ல பிரகாஷ், அடையாறு கார்னெட், சென்னைவாசிகளான பகதூர்சிங் லாமா, ராமச்சந்திர ராஜ், பால்ராஜ் நாடார், மணி செட்டியார், சீதாராமய்யர் (இவர் தற்போது கைதாகியுள்ள லெட்சுமிநரசிம்மனின் மாமா), காரைக் குடி குமரப்ப செட்டியார், தினகரன், சுப்பிரமணியன், மதுரை மணி, நாச்சியார்கோவில் கிருஷ்ணமூர்த்தி, நெல்லை சேதுராமலிங்கம், தூத்துக் குடி உதயகுமார் உள்ளிட்டவர்களும் தமிழக சிலைக் கடத்தல் தளத்தில் இயங்கி இருக்கிறார்கள்.

மோசமான முடிவுகள்

இவர்களில் பெரும்பகுதி யினர் இப்போது உயிருடன் இல்லை. அதே நேரம், இவர்களில் பலரது இறுதி நாட்கள் மிகவும் சோக மாகவே கழிந்திருக்கின்றன. இவர்களைப் பற்றி நன்கு அறிந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி ஒருவர் இப்படிச் சொன்னார்: ‘‘சட்டத்தின் ஓட்டைகளையும் பண பலத்தையும் வைத்து இந்தத் திமிங்கலங்கள் தப்பினாலும், தெய்வம் நின்று கொல்லும் என்ற சொலவடை நினைவுக்கு வருகிறது. பால்ராஜ் நாடார் ஹைதராபாத் லாட்ஜில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். விடுதியில் போலி முகவரி கொடுத்து தங்கி இருந்ததால், அடை யாளம் கண்டுபிடிக்க முடி யாமல் மூன்று நாட்கள் வைத்திருந்து, அழுகிய நிலையில்தான் அவரது உடல் சென்னை வந்து சேர்ந்தது. பாகனேரியில் கோயில் சிலைகளைத் திருடிய ‘தமிழர் விடுதலைப் படை’ நாகராஜன், பின்னர் திண்டுக்கல்லில் சைலேந்திர பாபு எஸ்.பி-யால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிவபுரம் நடராஜர் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட மும்பை தாஸ், 1987-ல் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படி போலீ ஸார் சம்மன் கொடுக்கப் போனபோது மாரடைப்பில் இறந்து கிடந்தார். நெல்லை சேதுராமலிங்கம் சிறைக்குள்ளேயே தூக்குமாட்டிக்கொண்டு உயிர்விட்டார். தூத்துக்குடி உதயகுமார் தற்கொலை செய்துகொண்டார். பகதூர் சிங் லாமா கார் விபத்தில் பலியானார்.

திருப்பனந்தாள் ராமசாமி தொழு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். நன்னிலம் அருகே துளார் நடராஜர் சிலையைத் திருடிய ராம கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டார். நாச்சியார்கோவில் கிருஷ்ணமூர்த்தியும் அவரது மகளும் கண் பார்வை இழந்தனர். மதுரை மணி கும்பகோணம் கோர்ட்டில் விடுதலை பெற்று வெளியில் வந்த போது பக்கவாதத்தால் சுருண்டு விழுந்தார்.

நெல்லையைச் சேர்ந்த ஆசீர்வாதம் தங்கய்யாவை மூன்று வழக்குகளில் இருந்து விடுதலை செய்தது நீதிமன்றம். முதல் வழக்கில் இருந்து அவர் விடுதலையான நாளில் குற்றாலத்தில் அவரது மகன் விபத்தில் பலியானார். இரண்டாவது வழக்கில் விடுதலையான அதே நாளில் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். மூன் றாவது வழக்கில் விடுதலையாகி நீதிமன்றத்தைவிட்டு வெளி யில் வந்த தங்கய்யா, அந்த இடத்தி லேயே பக்கவாதம் பாதிக்கப்பட்டு முடங்கிப் போனார்’’ என்று சொன்ன அந்த அதிகாரி, ‘‘சிலைக் கடத்தல் வழக்குகளைக் கையாளும் போலீஸாரில் கடவுளுக்குப் பயப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் மனசாட்சிக்கே பயப் படாத பலரும் இருக்கிறார்கள். கடத்தல் புள்ளிகளோடு கைகோத்து கோடீஸ்வரர் ஆன போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள். அப்படி பணம் சம்பாதித்தவர்களில் விபரீதமான முடிவு களைச் சந்தித்தவர்களும் உண்டு.

காசிநாதன் என்ற ஆய்வாளர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். சி.வி.ராமன் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்த ஆய்வாளர் ஜோசப் 1980-ல் பக்கவாதத்தில் முடங்கினார். ஆய் வாளர் காதர் மொய்தீன் சிலைத் திருட்டு வழக்கு ஒன்றில் போலி சிலை களைத் தயார்செய்தார். அதை வைத்தே குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தவர். தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார். பிறகு, ரயில்வே போலீஸுக்கு மாற்றப்பட்ட அவர், 1996-ல் ரயில் தண்டவாளத்தில் மர்மமாக இறந்து கிடந்தார்’’ என்று சொன்னார்.

35 ஆண்டுகளாக கோயில் சிலை களைக் கடத்திவிட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள வடநாட்டு கோடீஸ்வரர் சுபாஷ் சந்திர கபூரும் தீவிர நோயின் தாக்கத்தில் இருக்கிறார்.

சர்வதேச அளவில் ஆண் டுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கும் சிலைக் கடத்தல் மர்மங்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே என்னால் இந்தத் தொட ரில் விவரிக்க முடிந்திருக்கிறது. இன்னும் பல வெளியில் தெரியாத மர்மங்களும் விடை தெரியாத கேள்விகளும் ஏராளம் உண்டு. அவற்றுக்கான பதில்கள் பின்னொரு தருணத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x