Published : 11 May 2017 02:55 PM
Last Updated : 11 May 2017 02:55 PM

கிடார் பிரசன்னா - அனில் ஸ்ரீனிவாசனின் ஒரு மணிநேர இசை ராஜாங்கம்

இளையராஜாவின் பாடல்கள் தமிழ் சமூகத்தோட ஒன்றிணைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. புதிதாக எவ்வளவோ பாடல்கள் வந்தாலும் இளையராஜாவின் பாடல்களின் சுவை இன்னும் நமக்கு சலிக்கவில்லை. அதிலும் இன்று சமூக ஊடகங்களில் இளையராஜாவின் பாடல்களில் இருந்த பல இசை நுணுக்கங்களை, புதுமைகளைப் பேசும் பல பதிவுகள் காண, பார்க்க, கேட்கக்கிடைக்கின்றன. இப்படியொரு இசை மேதைக்கு தேவையான அங்கீகாரம் கிடைக்கவில்லையே போன்ற ஆதங்கப் பதிவுகளும் அதிகம். ஆனால் சில இசைக் கலைஞர்கள் ஆதங்கத்தை பதிவிடவுதோடு மற்றும் நிறுத்தி விடாமல், தங்களால் முயன்றதை செய்து ராஜாவின் இசையை முடிந்தவரை பலரிடம் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார்கள்.

முன்னாள், இன்னாள் என பல திரை இசைக் கலைஞர்கள் சமூக ஊடகங்களில் இளையராஜாவின் ஒவ்வொரு பாடலாக எடுத்துக் கொண்டு அதிலிருக்கும் சிறப்பம்சங்களைத் தொடர்ந்து பேசி வருகின்றனர். தேர்ச்சி பெற்ற கலைஞர்கள், வளர்ந்து வரும் கலைஞர்கள் என எல்லோரும் இளையராஜாவின் பாடலைப் பாடியோ, வாசித்தோ தங்கள் திறமையை காட்டும் அதே நேரத்தில் பாடலையும் பலரிடம் கொண்டு செல்கின்றனர்.

கிடார் பிரசன்னா சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர். குறிப்பாக கிடாரில் கர்னாடக சங்கீதத்தை வாசிப்பதில் வல்லவர். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தனது திறமைக்காக பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றவர். ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா என பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து வீடியோ பதிவேற்றும் இசைக்கலைஞர்களில் ஒருவர். அதிலும், இளையராஜா பாடல்களை அதன் அழகு கெடாமல், புதுமையான வடிவத்தில் இவர் வாசிப்பதை கேட்பது அலாதியான அனுபவம்.

தற்போது, பிரபல பியானோ இசைக்கலைஞர் அனில் ஸ்ரீனிவாசனுடன் இவர் இணைந்து தனது பக்கத்தில் பதிவேற்றியிருக்கும் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராஜாவின் பிரபல பாடல்கள், பின்னணி இசை, இடையிசை, முகப்பு இசை என கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இடைவிடாது ராஜாவின் இசையை மட்டுமே கிடாரிலும், உடன் பியானோவிலும் வாசித்துள்ளனர். மச்சானைப் பாத்தீங்களா, வளையோசை கலகலவென, என் இனிய பொன் நிலாவே என சில பாடல்களின் அசல் பாணியை சிறிது மாற்றி இசைத்து சுவாரசியப்படுத்தியிருந்தாலும் அதிலிருக்கும் இளையராஜாவின் முத்திரை மாறவில்லை. நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருந்தாலும் அதை மிக எளிமையாக ஒரு மணி நேர வீடியோவாக தந்து பல இளையராஜா ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் பிரசன்னா.

எவ்வளவு பாடல்கள், என்னென்ன பாடல்கள் என்பதை கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்/கேளுங்கள்!

கிடார் பிரசன்னா - அனில் ஸ்ரீனிவாசனின் வீடியோ பதிவு