Published : 19 Jul 2016 11:38 AM
Last Updated : 19 Jul 2016 11:38 AM
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல மலையாளக் கவிஞர் நாலாபத் பாலாமணி அம்மா (Nalapat Balamani Amma) பிறந்த தினம் இன்று (ஜூலை 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கேரளத்தின் திருச்சூர் மாவட்டம் நாலாபத் என்ற ஊரில் (1909) பிறந்தார். பெண்கள் பள்ளியில் சேர்க்கப்படாத காலம் என்பதால், வீட்டிலேயே மலையா ளம், சமஸ்கிருதம் கற்றார். மலை யாளத்தின் சிறந்த எழுத்தாளரும், தத்துவமேதையுமான இவரது மாமா நாலாபத் என்.நாராயண் மேனனின் படைப்புகள் மூல மாகவே இலக்கியம் கற்றார்.
* எழுதும் ஊக்கத்தையும் அவரிடம் இருந்தே பெற்றார். அச்சில் வந்த நூல்கள் மட்டுமன்றி, ஏடுகளில் இருந்தவற்றையும் படித்தார். சிறந்த மலையாளக் கவிஞர் வி.நாராயண் மேனனின் கவிதைகளும் பிற பிரபலங்களின் படைப்புகளுமே தன்னை படைப்பாளியாக மாற்றியது என்பார்.
* இலக்கிய சூழலில் வளர்ந்த அனுபவம் இவரது சிந்தனைக்கு வளம் சேர்த்தது. சிறு வயதிலேயே கவிதைகள் எழுதினார். 'கூப்புக்காய்' என்ற இவரது முதல் கவிதை 1930-ல் வெளிவந்தது.
* கொச்சி மன்னரான பரீட்சித்து தம்புரானிடம் இருந்து 'சாகித்ய நிபுண புரஸ்கார்' விருது பெற்றது, இவரை ஒரு கவிஞராக இலக்கிய உலகில் பிரபலமடைய வைத்தது. நிறைய கதைகளும் எழுதினார். 19 வயதில் திருமணம் நடந்த பிறகு கல்கத்தா சென்றார். சில காரணங்களால் மீண்டும் கேரளா திரும்பினார்.
* தொடர்ந்து கவிதைகள் எழுதினார். 1959 முதல் 1986 வரை இவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு 'நைவேத்தியம்' என்ற தொகுப்பாக வெளிவந்தது. 'அம்மா', 'குடும்பினி', 'ஸ்திரீ ஹ்ருதயம்', 'லோகாந்தரங்களில்', 'அவர் பாடுன்னு', 'சொப்பனம்', 'சந்தியா', 'அம்மா', 'மழுவின்டே கதா' உள்ளிட்ட படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
* சமஸ்கிருதம் போலவே, மலையாளத்திலும் மென்மையான மொழிப் பிரயோகம் சாத்தியம் என்பதை தனது படைப்புகள் மூலம் நிரூபித்தவர். இவரது கவிதைகளில் உள்ள வார்த்தைகள், கவிதை பாணி, நுட்பமான உத்திகள் தனித்துவமானவை. 500-க் கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். சிறுவர்களுக்கான கதைகளையும் எழுதினார்.
* 'முத்தாஸ்ஸி' என்ற படைப்புக்காக கேந்திரீய சாகித்ய அகாடமி, கேரள சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றார். இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட. கணவருடன் இணைந்து தனது பல படைப்புகளை பல மொழிகளில் மொழிபெயர்த்தார். பிரபல கேரள எழுத்தாளர் கமலாதாஸ் இவரது மகள்.
* தாய் குழந்தையிடம் காட்டும் நேசம் குறித்த 'அம்மா' கவிதை இவருக்கு 'அம்மா' பட்டத்தையும், பேரக் குழந்தைகளிடம் நமது நேசம் குறித்த 'முத்தாஸ்ஸி' கவிதை இவருக்கு 'மலையாள இலக்கியத்தின் பாட்டி' என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தன.
* பத்மபூஷண், சரஸ்வதி சம்மான், ஆசான் விருது, வள்ளத்தோள் விருது, சாகித்ய அகாடமி விருது, லலிதாம்பிகா அந்தர் ஞானம் விருது, எழுத்தச்சன் விருது உட்பட இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஏறக்குறைய அனைத்து விருதுகள், பரிசுகளையும் பெற்றவர்.
* தாய்மையின் கவிஞர் எனப் போற்றப்பட்டவரும் மலையாள இலக்கிய வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவருமான நாலாபத் பாலாமணி அம்மா, 95-வது வயதில் (2004) மறைந்தார். தங்கள் பங்களிப்பு மூலம் கேரள இலக்கியத்தை வளப்படுத்துவோருக்கு ஆண்டுதோறும் இவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT