Published : 01 Oct 2014 10:27 AM
Last Updated : 01 Oct 2014 10:27 AM
இந்திய விடுதலைக்காகப் போரிட்ட அன்னிபெசன்ட் அம்மையாரின் பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• அன்னிபெசன்ட் லண்டனில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரது தாயின் தோழி எலன் மரியாட் தான் அவரை வளர்த்தார். 20-வது வயதில் பிராங்க் பெசன்ட் என்ற பாதிரியாரை மணந்தார்.
• மத நம்பிக்கைகள் அவரை விட்டு விலகின.கணவரையும் பிரிந்தார். பாபியன் சிந்தனைகள் மூலம் புரட்சியை படிப் படியாக சாதிக்கும் இயக்கத்தில் ஆர்வம் மிகுந்தது. பின்னர் மகளிர் வாக்குரிமை, தொழிலாளர் மேம்பாட்டுக்காகப் பணியாற்றினார்.
• ப்ரைன்ட் மற்றும் மே பகுதி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்த பெண்களுக்கு அதிக ஊதியம், ஒழுங்கான இருப்பிட வசதி ஆகியவற்றை போராடிப் பெற்றுத் தந்தார். இந்தியத் தத்துவங்கள் மீது ஈர்ப்பு உண்டாகி, தியாசபி இயக்கத்தில் சேர்ந்தார்.
• இந்தியா வந்தவர் 40 ஆண்டுகள் இங்கேயே தங்கி சமூகச் சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் ஆகியவற்றில் பங்குபெற்றார். வாரணாசியில் மத்திய இந்துப் பள்ளி, கல்லூரி தொடங்கினார்.
• இந்தியாவுக்கு சுயாட்சி கோரும் ‘ஹோம் ரூல்’ இயக்கத்தை மகாராஷ்டிரம், கர்நாடகம், பிஹார் உள்ளிட்ட பகுதிகளில் திலகர் தலைமையிலான குழு முன்னெடுக்க, மற்ற பகுதிகளில் அன்னிபெசன்ட் தலைமையிலான போராட்டக்குழு தீவிரப்படுத்தியது.
• அன்னிபெசன்ட் சார்பில் அருண்டேல், சி.பி.ராமசுவாமி அய்யர், பி.பி.வாடியா முதலிய தளபதிகள் ஹோம் ரூல் இயக்கத்தை சென்னை அடையாறு பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு நடத்தினர்.
• அன்னிபெசன்ட் 1917-ல் கைது செய்யப்பட்ட பிறகு போராட்டம் தீவிரமடைந்தது. இந்தியாவுக்கான ஆங்கில அரசின் செயலாளர் மாண்டேகு இப்படி எழுதினார், ‘‘சிவன் தன் மனைவியை 52 துண்டுகளாக வீசினார். அந்த துண்டுகள் அனைத்தும் மீண்டும் உருப்பெற்று ஒன்றுசேர்ந்து எழுந்ததுபோல அன்னிபெசன்ட் உருவெடுத்து நிற்கிறார்!’’
• காங்கிரஸ் - முஸ்லீம் லீக் ஒற்றுமையை சாதிப்பதிலும் முக்கியப் பங்காற்றினார் அன்னிபெசன்ட். ஆந்திராவில் 1918-ல் மதனப்பள்ளி கல்லூரியைத் தொடங்கினார். மகளிர் கல்லூரியையும் தொடங்கிய அவர் கல்வியை வளர்ப்பதிலும் பங்காற்றினார்.
• காங்கிரஸ் இயக்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்பும் அவருக்கே உரியது. சிறையில் இருந்து மீண்டதும் புகழின் உச்சத்தில் அவர் இருந்தபோது, திலகரின் பரிந்துரைப்படி அப்பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
• காந்தியின் போராட்ட முறைகளோடு முரண்பட்டார். ஆங்கில அரசை சட்டரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பது அவரது கருத்து. ஆன்மிகத்திலும் மூழ்கினார். தத்துவ மேதை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை மீட்பர், புத்தரின் அவதாரம் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT