Published : 09 Feb 2017 10:08 AM
Last Updated : 09 Feb 2017 10:08 AM
சின்ன வயசுல நான் ரொம்பவே அமைதியான டைப். அதே மாதிரி தான் டான்ஸ்லேயும். சின்ன வயசுல யார் முன்னாடியும் ஆடியதே இல்லை. ‘‘பத்து பேருக்கு மேல ஆடிட்டாங்க. இப்பவாவது போய் ஆடலாமே!’’ன்னு சொன்னா கூட போய் ஆட மாட்டேன். அப்பா டான்ஸ் மாஸ்டருங்கிறதால நான் கிராமத்துக்குப் போறப்ப, என்னை ஆடிக் காட்டச் சொல்வாங்க. நான் ஆடவே மாட்டேன். அப்படிப்பட்ட நான் சினிமாவுக்கு வந்து எல்லாருக்கும் முன்னாடி ஆட ஆரம்பிச்சேன். இது எனக்கு ஆச்சர்யம்தான்!
நான் நடிகனானது இன்னும் ஆச் சர்யமா இருக்கு. நடிக்கணும்னு எந்த முயற்சியும் எடுத்தது இல்லை. நான் ஆடிய சோலோ பாடல்கள் ஹிட் அடிக்க ஆரம்பிச்சுது. அப்படியே என்னை ஹீரோ ஆக்கிட்டாங்க. இப்பவும் எனக்கு இது ஆச்சர்யத்தைத்தான் கொடுத் துட்டிருக்கு.
அதே மாதிரி, டான்ஸ்ல வந்து அப்பா வுக்கு உதவியாளரா வேலையைத் தொடங்கி ஓடிட்டிருந்தப்ப, நாம தமிழ் நாட்டுலேயே நல்ல டான்ஸ் மாஸ்டர்னு பேர் வாங்கணும்னு நினைக்கலை. இந்திய அளவுல ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா, இந்த ஆசையை அப்போ நான் யார்கிட்டேயும் சொல்லிக் கலை. ஏன்னா, ‘‘இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலையாடா பிரபு!’’ன்னு யாராவது சொல்லிடுவாங்களோன்னு ஒரு சின்ன பயம். ஆனா, ‘எண்ணம் போல் வாழ்வு’ன்னு சொல்வோமே அந்த மாதிரி நாம என்ன நினைக்கிறோமோ… அதுல ஆணித்தரமா நின்னா, நிச்சயம் அதே மாதிரி ஆகலாம்கிறதுக்கு நானே ஒரு உதாரணம். அப்துல்கலாம் சார் சொன்ன ‘கனவு காணுங்கள்’ என்ற வார்த்தை என் விஷயத்துல நடந்துச்சு. இல்லைன்னா சாதாரண ஒரு மிடில் கிளாஸ் பையனோட லைஃப் இப்படி மாறியிருக்குமா?
‘வாத்தியார் பிள்ளை மக்கு’ன்னு சொல்ற பழமொழி எனக்குப் பிடிக்கிறது இல்லை. எத்தனையோ டாக்டரோட பசங்க டாக்டராகியிருக்காங்களே. ஏன், உதாரணமா.. தெலுங்குல பெரிய நடிகர்களோட வாரிசுங்க சினிமாவுக்குள்ள வந்து சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயர்ந்திருக்காங்களே. அந்த பழமொழி சொல்ற மாதிரி சில பேர் வேணும்னா இருக்கலாம். நாம ஏன் நெகடிவ்வை எடுத்துக்கணும்? பாசிடிவ்வா ஜெயிச்ச பட்டியலை எடுத்துக்கலாமே. என் விஷயத்துல கூட பாசிடிவ்வாத்தானே நடந்துச்சு!
டைரக்டர் ஆகணும்னு ஆசை. அதே மாதிரி டைரக்டர் ஆனேன். இன்னும் டைரக்டரா இருக்கிறேனேன்னு ஆச் சர்யமா இருக்கு. இப்போ எப்படி தயாரிப் பாளரா ஆனேன்னும் ஆச்சர்யமா இருக்கு. ஒரு நிகழ்ச்சிக்கு போறப்ப, ‘‘அடுத்து தயாரிப்பாளர் பிரபுதேவா பேசு வார்’’னு கூப்பிட்டா, ‘நம்மைத்தானா? ஓ!’ன்னு அப்புறம்தான் எழுந்திருப்பேன்.
நான் சினிமாவுக்குள்ள வந்தப்போ பதினாலு, பதினைந்து வயசு சின்னப் பையன். எனக்கு வயசே ஆகாதுன்னுதான் நான் நினைச்சிட்டிருந்தேன். ஆனா, இப்போ ஷூட்டிங் ஸ்பாட்லயோ, வேற எங்கேயோ பசங்க, ‘‘அண்ணே… அங்கிள்’’னு கூப்பிடுறப்ப, அதுவும் எனக்கு ஆச்சர்யமாத்தான் இருக்கு!
என்னோட கல்யாணத்தையே எடுத் துக்கோங்க… அதுவும் பெரிய ஆச்சர்யம்தான்! புயல் மாதிரி அந்த நேரத்தில் நடந்து முடிஞ்ச விஷயம். அடுத்து திரும்பவும் காதல்ல விழுந்தேன். அது இன்னும் இன்னும் ஆச்சர்யம்! நம் கூட இருக்குற 100 சதவீதம் பேர்ல 10 சதவீதம் பேருக்குத்தான் இதெல்லாம் நடக்கும்னு ஒரு விஷயம் இருந்தா, அந்தக் கம்மியான சதவீதம் கொண்ட நபர்கள்ல நானும் ஒருத்தனா இருக்கேன். ‘இந்த மாடசாமிக்கு இப்படித்தான் நடக்கும்’னு சொல்ற மாதிரி!
கடந்த சில வருஷங்களா டெக்னீ ஷியனா ஓடிட்டிருக்கேன். சின்ன இடைவேளைக்கு அப்புறம் இப்போதான் திரும்ப நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். ஆனா, முன்னாடி நடிக்கிறப்ப இல்லாத அளவுக்கு, இப்போ டெக்னீஷியனா இருக்கிறப்ப எதிர்பார்ப்பு அதிகம் இருக்கு. அங்கீகாரம் நல்லா இருக்கு.
ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி ஒரு வேலையா கோவாவுக்குப் போனேன். நான் மும்பையிலேர்ந்து வந்தேன். என்னோட ஃபிரெண்ட் சென்னையிலேர்ந்து வந்தார். அவர் வர ஃபிளைட்டுக்கு முன்னாடி நான் அங்கே வந்துட்டேன். கிட்டத்தட்ட அங்கே 20 நிமிஷம் காத்திருந்தேன். அந்த இடத்துல 400, 500 பேர் இருந்தாங்க. அதில் தமிழ், குஜராத்தி, பஞ்சாபி, ஆந்திரா, இந்திக்காரங்கன்னு பல பேர் இருந்தாங்க. எல்லாரும் வந்து என்கூட ஃபோட்டோ எடுத்துக்கிட்டாங்க. அப்போ நான் பெருசா எந்தப் படத்துலயும் நடிக் கலை. டெக்னீஷியனாத்தான் இருந்தேன். பின்னே எப்படி இதெல்லாம்னு நினைக் கிறப்ப ஆச்சர்யமாத்தான் இருக்கு.
பொதுவா, நான் டான்ஸ் ஆடப் போறதுக்கு முன்னாடி என்னால இது முடியுமான்னு போவேன். ஆனா, மியூசிக் கேட்டதும் ஏதோ ஒரு சக்தி வந்து என்னை ஆட வைக்கும். அதுவும் எனக்கு ஆச்சர்யம்தான். சாதாரணமா எல்லாரும் ஹார்ட்ஃபுல்லா ஆடணும்னு சொல்வாங்க. நான் அடிவயித்துலேர்ந்து ஆடுவேன். அதை நான் இங்கே எப்படிச் சொல்றது… ஆஆஆம்ம்ம்… ‘தில்லானா மோகானம்பாள்’படத்துல சிவாஜி சார், ‘நாபிக் கமலத்துலேர்ந்து’னு ஒரு வார்த்தை சொல்வாரே, அந்த மாதிரி. இப்படி ஆடுற இந்த டான்ஸ் இப்பவும் சின்னப் பசங்களுக்குப் பிடிக்குதுங்கிறது இன்னும் ஆச்சர்யம்தான். ஆனா, என் பசங்களுக்கு ஆடுறதே பிடிக்காது.
சமீபத்துல ஹிந்தியில டாப்ல இருக் கிற ஒரு ஹீரோகிட்ட பேசும்போது, ‘‘உங் களோட டான்ஸ் ஸ்டைலை யார்கிட்ட யாவது கத்துக்கொடுத்துடுங்க?’’ன்னு சொன்னார். நான் ரெடியாத்தான் இருக்கேன். ஆனா, அதை எப்படி கத்துக்கொடுக்கணும்னுதான் எனக்குத் தெரியலைன்னு சொன்னேன்
சில பேர், ‘‘உங்களுக்கு ஹிப் ஆப் தெரி யுமா?’’ன்னு கேட்பாங்க. ‘‘தெரி யாது’’ன்னு சொல்வேன். தொடர்ந்து ‘‘ஜாஸ், ராக் அண்ட் ரோல், பீபாய்ங், சல்சா… தெரியுமா?’’ன்னு கேட்பாங்க. எதுவும் தெரியாது. எனக்கு என் டான்ஸ் தெரியும்னு சொல்வேன். ‘‘கரெக்ட்தான் சார். உங்க ஸ்டைலே வேற’’னு சொல் வாங்க. அதெல்லாம் கடவுளோட பரிசு!
இப்போ உங்கள்ட்ட ஷேர் பண்ணிட்டி ருக்கிற இந்த விஷயங்களை எல்லாம் எழுதுறது கூட ஆச்சர்யம்தான். அப்புறமா பல வருஷங்கள் கழிச்சு எழுதணும்னா, இவ்வளவு நுணுக்கமான விஷயங்களை மறந்துடுவோமோ, என்னவோ. அதான் இப்போ ஜாலியா சொல்ற மனநிலையில இருக்கிறப்பவே எழுதிட்டிருக்கேன்.
அதே மாதிரி என்னோட பசங்களும் எனக்கு ஆச்சர்யம்தான்! சின்ன வயசு லயே கல்யாணம் முடிஞ்சு அதுக்குள்ள பசங்க எல்லாம் வந்ததும் ஆச்சர்யம் தான். செல்போன், டி.வி கூட எனக்கு ஆச்சர்யம்தான். எங்க தலைமுறையில டி.வி இல்லாமலும் இருந்திருக்கோம். டி.வி பார்க்கவும் செய்திருக்கோம். போன் இல்லாமலும் இருந்திருக்கோம். போன்ல பேசவும் செய்திருக்கோம்.
கிராமத்து வாழ்க்கையில கூட எனக்கு ஒரு ஆச்சர்யம் இருக்கு. எல்லாரும் கிராமத்து வாழ்க்கையை நிச்சயம் அனுபவிக்கணும். வருஷத்துல 2 வாரம் கண்டிப்பா கிராமத்துல தங்கணும்னு ரூல் போட்டா கூட ஓ.கேதான். நான் சின்ன வயசுல அந்த வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்திருக்கேன்.
டைரக்ஷன் செய்றப்ப என்னைச் சுத்தி இருக்கிற எல்லாரும் என் பேச்சை கேட்குறப்ப ஆச்சர்யமாத்தான் இருக்கு. அந்த ஆச்சர்யத்துக்கு நடுவுல நான் ஸ்பாட்ல ஹேண்டில் பண்ற விஷயம் என்னைச் சுத்தி இருக்கிறவங்களை ஆச்சர்யப்படுத்தும். அது என்ன?
- இன்னும் சொல்வேன்... | படம் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT