Published : 23 Jun 2016 10:42 AM
Last Updated : 23 Jun 2016 10:42 AM

எம்ஜிஆர் 100 | 92 - ‘குடும்பத் தலைவன்’!

M.G.R. தமிழகத்தின் முதல்வர் என்றாலும்கூட, சில விஷயங்களில் அரசுத்துறை அல்லது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் தனிப்பட்ட முறையில் தானே தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். அதிலும் கூட அவரது மனிதாபிமானமே மேலோங்கியிருக்கும்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கவும் ஆன்மிகப் பிரசங்கம் செய்யவும் ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருந்தார். அவரது மறை வுக்குப் பிறகு அந்தப் பணி அவரது மகளுக்கு வழங்கப்பட்டது. அறநிலை யத்துறை மூலம் அவருக்கு மாதச் சம்பளமும் உண்டு. அந்தப் பெண்மணி அவரது தாயாரைப் போல இல்லாமல், சரியாக பணிக்கு வருவதில்லை என்றும் பயிற்சியில் சேருவோருக்கு முறையாக சொல்லிக் கொடுப்பதில்லை என்றும் புகார்கள், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு வந்தன.

மதுரைக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றிருந்த நேரத்தில் ஒருநாள், நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு 9 மணிக்கு மேல் உதவியாளர்களிடம் ‘‘மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போக வேண்டும். அங்கு ஒரு வேலை இருக்கிறது. இப்போது கூட்டம் குறைவாக இருக்கும். பக்தர் களுக்கு இடைஞ்சல் இருக்காது’’ என்று சொன்னார். போலீஸ் அதிகாரிகளையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டார். கோயில் அதிகாரிகளுக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் தெரிவித்ததுடன், தனது வருகை யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார்!

கோயிலுக்குச் சென்ற எம்.ஜி.ஆரை நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர். தனக்கு எந்தவித விசேஷ மரியாதையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தரிசனம் முடித்து பிரசாதம் கொண்டு வந்த அர்ச்சகருக்கு பணம் கொடுத்துவிட்டு, கோயிலை சுற்றிப் பார்த்தார். நிர்வாகம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். கோயில் யானையைத் தட்டிக் கொடுத்து அதன் பராமரிப்பு, அளிக்கப்படும் உணவு வகைகள் குறித்து எம்.ஜி.ஆர். கேட்டறிந்தார்.

கோயில் அலுவலகத்துக்குச் சென்று அர்ச்சகரிடம் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கும் பெண்மணியை தன்னை வந்து பார்க்கச் சொல்லும்படி எம்.ஜி.ஆர். கூறினார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அருகிலேயே அந்தப் பெண்மணிக்கு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அவ ருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகார்கள் குறித்து விசாரிக்கத்தான் முதல்வர் எம்.ஜி.ஆர். அழைக்கிறார் என்று அந்தப் பெண்மணிக்குத் தெரிந்துவிட்டது.

பயத்தில் கோயில் அலுவலகத்துக்கு அழுதுகொண்டே வந்தார் அந்தப் பெண்மணி. அவரை எம்.ஜி.ஆர். உட்காரச் சொன்னார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து விக்கி விக்கி அழுதபடியே நின்றார். மீண்டும் எம்.ஜி.ஆர். வலியுறுத்தி சொன்னதும் உட்கார்ந்துவிட்டார். அவரிடம் எம்.ஜி.ஆர். கனிவுடன், ‘‘அழாதேம்மா, தப்பு உங்கள் பேரில் தானே. உங்கள் தாயார் இந்தப் பணியை எவ்வளவு சிறப்பாக செய்தார்? நீங்களும் அதேபோல பணியாற்றுவீர்கள் என்று நம்பித்தானே உங்களுக்கு அந்தப் பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்? தெய்வீகமான விஷயங்களை நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கும் பணியில் இருக்கும் நீங்கள், அதை பொறுப்போடும் அர்ப்பணிப்போடும் செய்ய வேண்டாமா?’’ என்றார்.

அந்தப் பெண் அழுதவாறே, ‘‘இனி மேல் ஒழுங்காகப் பணியாற்றுகிறேன் ஐயா. பணியில் கவனமாக இருப்பேன். என்னை நீங்கள் நம்பலாம்’’ என்றார். ‘‘உங்களை நம்புகிறேன். கவனமாக பணி யாற்றுங்கள். நான் அழைத்ததும் வந் ததற்கு நன்றி. நீங்கள் போகலாம்’’ என் றார். அதன் பின்னர், அந்தப் பெண்மணி ஈடுபாட்டோடு பணி செய்தார்.

எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை வேலையை விட்டே நீக்கி யிருக்கலாம். அல்லது அறநிலையத் துறை அதிகாரிகள் மூலம் நட வடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கலாம். மதுரை வந்தபோது, தானே நேரில் கோயிலுக்குச் சென்று அந்தப் பெண்மணியை அழைத்து அறிவுரை வழங்கினார் என்றால், அதற்கு அந்தப் பெண்மணியின் குடும்பச் சூழலை அறிந்து வைத்திருந்த எம்.ஜி.ஆரின் மனிதாபிமானம்தான் காரணம்!

மதுரை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரை சென்றிருந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் திருமங் கலம் தாண்டி சென்று கொண்டிருந்த போது, திடீரென காரை நிறுத்துமாறு டிரைவர் கதிரேசனிடம் கூறினார். உதவியாளர்களிடம் சற்று தூரத்தில் ஒரு இடத்தை எம்.ஜி.ஆர். காண்பித்து, ‘‘அங்கே பாருங்கள். ஒருவரை மரத்தில் கட்டிப்போட்டு அடிக்கிறார்கள். என்ன வென்று கேட்டு மெதுவாக அழைத்து வாருங்கள். விசாரிப்போம்’’ என்றார். உதவியாளர்கள் சென்று அவர்களை அழைத்து வந்தனர்.

வந்தவர்கள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியு மாய் பவ்யமாக எம்.ஜி.ஆரைக் கும்பிட்ட னர். இளைஞரை அடித்த நடுத்தர வயதுக் காரரைப் பார்த்து, ‘‘ஏன் இவரை அடிக் கிறீங்க?’’ என்று கேட்டார். அவர் சற்று பயத்தோடு இளைஞரைக் காட்டி, ‘‘இவன் எங்கள் வீட்டின் அருகில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளான். திருமணம் ஆகாத என் பெண்ணை போட்டோ பிடித் துள்ளான். அதனால்தான் அடித்தேன்’’ என்றார்.

எம்.ஜி.ஆர். அந்த இளைஞரைப் பார்க்க, இளைஞர் நடுங்கியபடியே, ‘‘உண்மையைச் சொல்கிறேன் ஐயா. நானும், இவர் மகளும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். அந்தப் பெண்ணின் விருப்பப்படிதான் நான் அவளை போட்டோ எடுத்தேன்’’ என்றார். எம்.ஜி.ஆர். அந்த நடுத்தர வயது மனித ரைப் பார்த்து, ‘‘தம்பிக்கு தொழில் இருக்கு. போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். உங்கள் மகளும் விரும்புகிறார். தம்பிக்கே உங்கள் மகளை திருமணம் செய்து வையுங்கள். அவர்களை பிரிக்காதீர்கள். அதுவும் நீங்கள் இந்த தம்பியைக் கட்டிவைத்து அடித்தது தப்பு. இந்தத் தம்பி போலீஸில் புகார் கொடுத்தால் உங்கள் நிலை என்ன?’’ என்று கோபமாகக் கேட் டார். நடுத்தர வயதுக்காரர் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவரைத் தூக்கி நிறுத்தி தட்டிக் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது முகவரியை வாங்கி வைத்துக் கொண்டார்.

சில நாட்களில் எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு திருமணப் பத்திரிகை வந்து சேர்ந்தது. மணமகளுக்கு வாழ்த்து கடிதமும் பரிசுப் பொருட்களையும் அவர் அனுப்பி வைத்தார்.

எம்.ஜி.ஆர். நடித்த ஒரு படத்தின் அழ கான தலைப்பு... ‘குடும்பத் தலைவன்’!

- தொடரும்...

படங்கள் உதவி: செல்வகுமார்



எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, விதவை மறுமணத் திட்டத்தின் கீழ் மறுமணம் செய்து கொண்ட ஆயிரக்கணக்கான தம்பதிகளுக்கு தலா ரூ.5,300 வரை ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டார்! ’

முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x