Published : 31 Jan 2017 10:02 AM
Last Updated : 31 Jan 2017 10:02 AM
தமிழ் எழுத்தாளர், விமர்சகர்
தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளரான க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) பிறந்த தினம் இன்று (ஜனவரி 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* திருவாரூர் மாவட்டம் வலங்கை மானில் (1912) பிறந்தவர். தந்தை அஞ்சல் துறை அதிகாரி. சிறுவயதிலேயே தாயை இழந்த வர், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். இளம் வயதிலேயே ஏராளமான ஆங்கிலப் படைப்பு களைப் படித்தார்.
* எழுத்தாளராக வேண்டும் என்று இளம் வயதிலேயே தீர்மானித்தார். சென்னைக்கு வந்து சேர்ந்த பிறகு, முதலில் ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். பின்னர் புதுக்கவிதை, நாவல், சிறுகதை, விமர்சன நூல், மொழிபெயர்ப்பு என்று இவரது இலக்கியக் களம் விரிந்தாலும் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிவந்தார்.
* தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி நன்கு அறிந்திருந்தார். உலக இலக்கியத்துக்கு இணையாகத் தமிழ் இலக்கியம் பேசப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். தமிழின் சிறந்த படைப்புகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கியத்துக்கு வளம்சேர்க்கும் விதமாக, உலகப் புகழ்பெற்ற சிறந்த படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
* மயன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகள் எழுதினார். ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’, ‘எழுத்து’ உள்ளிட்ட இதழ்கள், ‘ராமபாணம்’, ‘இலக்கிய வட்டம்’, ‘முன்றில்’ உள்ளிட்ட சிற்றிதழ்களை நடத்தினார். தினமும் 7 பக்கங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் சுமார் 15,000 கட்டுரைகள் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.
* அன்றைய காலகட்டத்தின் முக்கியத் தேவையான இலக்கிய விமர்சனத்தில் கவனம் செலுத்தினார். ‘சுதேசமித்திரன்’ இதழில் 1955-ல் சிறுகதை வளர்ச்சி குறித்த கட்டுரை எழுதினார். அதன் பிறகு, ஒரு விமர்சகராகவும் தீவிரமாக இயங்கினார்.
* தமிழில் அதிக எண்ணிக்கையில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர் என குறிப்பிடப்பட்டார். தமிழின் சிறந்த இலக்கியப் படைப்புகளை மீண்டும் மீண்டும் தன் இதழ்களில் குறிப்பிட்டு, வாசகர்களிடையே அவற்றைக் கொண்டுசேர்த்த பெருமைக்கு உரியவர்.
* நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், விமர்சனக் கலை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைகள் என இவரது படைப்புலகம் விரிகிறது. இவரது ‘பொய்த்தேவு’ நாவல் இலக்கிய உலகில் இவருக்குத் தனி இடத்தைப் பெற்றுத் தந்தது.
* தான் வாழ்ந்துவந்த காலத்தின் போக்கு, எழுத்தின் வகைகள், நண்பர்கள், சங்ககால, தற்கால படைப்பாளிகள் முதலானவை குறித்து எழுதினார். சமரசம் செய்துகொள்ளாத விமர்சகரான இவர், உள்ளுணர்வின் உந்துதல்கள் அடிப்படையிலேயே செயல்பட்டார். இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்கக்கூடியவர். சலிக்காத செயல்வேகம் கொண்டவர்.
* பல பிரபல இதழ்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. 1986-ல் இவர் எழுதிய ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவரைப் பற்றி ‘க.நா.சு.வின் இலக்கிய வட்டம்’ உள்ளிட்ட நூல்கள் வெளிவந்தன. இவரது நூல்களை தமிழக அரசு 2006-ம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது.
* இறுதி மூச்சுவரை முழு நேர எழுத்தாளராகவே செயல்பட்டவர். தற்காலத் தமிழ் இலக்கியத்தின் வளமான பரப்பை வடிவமைத்தவர்களில் முதன்மையானவராக விளங்கினார். வாசகர்களாலும் இலக்கிய வட்டாரத்திலும் ‘க.நா.சு’ என அன்போடு அழைக்கப்பட்ட க.நா.சுப்ரமணியம் 76-வது வயதில் (1988) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT