Published : 18 Oct 2014 11:22 AM
Last Updated : 18 Oct 2014 11:22 AM
உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவாவின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
# இவரது பாட்டி, செக்கோஸ்லோவேகியா கூட்டமைப்பின் மகளிர் டென்னிஸ் களத்தின் 2-ம் தரவரிசை வீராங்கனை. அம்மாவும் டென்னிஸ் வீராங்கனை.
# மூன்று வயதில் டென்னிஸ் பழகியவர், 15-வது வயதில் செக்கோஸ்லோவேகியா தேசிய டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார். 1975-ம் ஆண்டில் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையானார்.
# 9 விம்பிள்டன் ஒற்றையர் சாம்பியன் பட்டங்கள், 167 ஒற்றையர், 177 இரட்டையர் சாம்பியன் பட்டங்கள் உட்பட 59 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 7 ஆண்டுகளாக ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் முதல் தரவரிசை வீராங்கனை, 15 ஆண்டுகளாக டாப்-3, 19 ஆண்டுகளாக டாப்-5 என தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் டாப்-10 பட்டியலை அலங்கரித்த சாதனையாளர்.
# ஒற்றையர், இரட்டையர் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து 200 வாரங்களுக்கும் மேல் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்ட ஒரே வீராங்கனை. வேகம், போர்க்குணம், கட்டுக்கோப்பான உடல் என மகளிர் டென்னிஸ் ஆட்டத்தை புதிய பரிணாமத்துக்கு இட்டுச் சென்றவர்.
# பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே 1981-ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். 2008-ல் செக் குடியரசின் குடியுரிமை கிடைத்தாலும், அமெரிக்க குடியுரிமையை இழக்க விரும்பவில்லை.
# ஆண் - பெண் வித்தியாசமின்றி யாரும் யாருடனும் இணைந்து வாழலாம் என்ற தனது கருத்தை பகிரங்கமாக அறிவித்தவர். தன்பாலினச் சேர்க்கையாளர்கள், பாலினம் மாறியவர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரின் உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
# ஒற்றையர் ஆட்டத்தில் இருந்து 1994-ல் ஓய்வு பெற்றார். 2003-ல் விம்பிள்டன் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில், லியாண்டர் பயஸுடன் இணைந்து களமிறங்கி சாம்பியன் பட்டம் வென்றார். 46-வது வயதில் விம்பிள்டனில் வெற்றி பெற்ற ஒரே வீராங்கனை இவர்தான். 2006-ல் அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றதுடன் ஓய்வு பெற்றார்.
# மார்பகப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற சில மாதங்களிலேயே கிளிமாஞ்சாரோ மலை ஏற முயற்சித்தார். நுரையீரல் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
# இவர் சைவ உணவு விரும்பி. விலங்குகள் வதை தடுப்பு பிரச்சாரமும் மேற்கொண்டார். நடுவில் ஒருமுறை புரோட்டீன் பற்றாக்குறை காரணமாக மீன் சாப்பிட நேர்ந்தது. பின்பு அதையும் விட்டு முழு சைவமாக மாறிவிட்டார்.
# அமெரிக்க ஓபன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கான வர்ணனையாளராக தொடர்கிறார். சுய சரிதை, 3 மர்ம நாவல்கள் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT