Published : 20 Oct 2014 09:50 AM
Last Updated : 20 Oct 2014 09:50 AM
இந்திய எல்லைப் பகுதிக்குள் சீனா அவ்வப்போது உள்ளே வருவதும், பிறகு பின்வாங்குவதும் தொடர்ந்து நடந்துவருகிறது.
இரு நாடுகளுக்கும் இடை யிலான எல்லைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. 52 ஆண்டுகளுக்கு முன், இந்த விவகாரம் முற்றிய நிலையில் தான், இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டது. 1962-ல் இதே நாளில் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள அக்சாய் சின் மற்றும் வட கிழக்குப் பகுதி எல்லையில் இந்தியப் படைகள் மீது சீனா போர் தொடுத்தது.
இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள அக்சாய் சின் எல்லைப் பகுதிக்குக் குறுக்கே நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது. இதைத் தடுக்கும் வண்ணம் காவல் சாவடிகளை அமைக்க இந்தியா நடவடிக்கைகள் எடுத்தது. இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக எல்லைப் பிரச்சினை தவிரவும் வேறு சில விஷயங்கள் இந்தப் போருக்கான காரணங்களாக இருந்ததாகக் கருதப்படுகிறது. திபெத்தில் 1959-ல் ஏற்பட்ட கிளர்ச்சியைத் தொடர்ந்து, சீனாவில் இருந்து வெளியேறிய தலாய் லாமா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இது சீனாவை ஆத்திரப்படுத்தியது. இதை யடுத்து, இந்தியா மீது போர் தொடுத்தது. போர் தொடங்குவதற்கு முன்னர் இருநாட்டு வீரர்களிடையே அவ்வப்போது சண்டைகளும் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.
கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் நடந்த இந்தப் போரில், இரு நாடுகளின் தரைப் படைகள்தான் பங் கேற்றன. கப்பல் படை, விமானப் படை பங்கேற்கவில்லை. இந்தியத் தரப்பில் 1,383 பேரும், சீனத் தரப்பில் 722 பேரும் கொல்லப்பட்டனர். இந்தப் போரில் இந்தியா தோல்வியடைந்தது.
ஒரு புறம் பஞ்சசீலக் கொள்கைகளை ஒப்புக்கொண்டு, மறுபுறம் சீனா தன்னுடைய முதுகில் குத்திவிட்டதாக நேரு நினைத்தார். கடைசிவரை ஆறாத வடுவாகவே நேருவுக்கு சீனப் போர் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT