Last Updated : 16 Mar, 2017 10:42 AM

 

Published : 16 Mar 2017 10:42 AM
Last Updated : 16 Mar 2017 10:42 AM

இதுதான் நான் 67: அவர் ஒரு கூல் ஹீரோ!

ஒரு பாடலுக்கு நடனம் ஆடுறதைவிட ஸ்டேஜ் ஷோவுக்கு நடனம் ஆடுவது கொஞ்சம் கஷ்டம். ஸ்டேஜ்ல டான்ஸர்ஸ்கூட சேர்ந்து நான் ஆடுறப்ப, ‘‘எப்பவும் என்னை ஃபாலோ பண்ணாதீங்க. ஏன்னா, என் ஸ்டைல் வேறயா இருக்கும். நடு நடுவுல வேற ஏதாவது மூவ்மெண்ட் போட்டுட்டு நீங்க ஆடுற மூவ்மென்ட்டுக்குத் திரும்பவும் வருவேன்’’னு சொல்வேன். அதை அவங்களும் சரியா புரிஞ்சிப்பாங்க.

நான் எப்பவும் மனசுல நினைச்சிக்கிற இன்னொரு விஷயம், எப்பவாவது என் மூவ்மென்ட் தப்பானாலோ, மறந்துட்டாலோ… மூளையில இருக்கிற வேற ‘ஒரு போஸ்ல’ ஸ்டைலா நிக் கணும்னு நினைப்பேன். அது தப்புன்னு தெரியாம, அதுவும் டான்ஸ்ல ஒரு பங்கு போலிருக்குன்னு மக்கள் நினைக் கணும். கடவுள் புண்ணியத்துல நான் ஸ்டேஜ்ல இதுவரைக்கும் எந்த ஸ்டெப்பையும் மறக்கலை. மூளையில் இருக்கிற ‘அந்த போஸு’க்கும் வேலை இல்லை. போன வாரம் குட்டு வெளிப் பட்டுச்சுன்னு சொன்னேன்ல... அந்த ஒரு தடவையைத் தவிர.

அதேபோல, ஸ்டேஜ்ல ஆடும்போது பாட்டோட வரிகளைப் பாடிட்டே ஆடணும். தமிழ் பாட்டுன்னா வார்த் தைங்க ஈஸியா வந்துடும். மத்த மொழிப் பாட்டுன்னா பயிற்சி இருந்தாக்கூட ஸ்டேஜ்ல ஷார்ப்பா வார்த்தைங்க வந்து விழாது. ஆனா, பாட்டோட வரிகள் மாறினாலும் உதட்டசைவுக்கு ஏத்த மாதிரி போட்டு எப்படியோ மேனேஜ் பண்ணிடுவேன். இந்த மேஜிக்கான குட்டு விஷயத்தையும் இப்போதான் முதன்முதலா ஷேர் பண்ணிக்கிறேன்.

மேடையிலயோ, படத்துலயோ ஆடி முடிச்சதுக்குப் பிறகு வந்து கண்ணாடி முன்னாடி அதே ஸ்டெப்பை ஆடிப் பாடி பார்க்குறப்ப முன்பை விட இன்னும் ஃபெர்பெக்டா வரும். இது நடிப்புக்கும் பொருந்தும். இப்போ ஒரு ஹிந்திப் படத்தோட ஷூட்டிங்ல நடிச்சிட்டிருக்கேன். ஷாட் முடிஞ்சதும், கேரவான்குள்ளே கண்ணாடி முன்னாடி திரும்பவும் அதே ஷாட்டை நடிச்சுப் பார்த்தேன். கேமரா முன்னாடி பண் ணினதைவிட பெட்டரா இருந்துச்சு. உடனே, டைரக்டரிடம் போய், ‘‘இன்னும் ஒரு டேக் போகலாமா?’’ன்னு கேட்டு திரும் பவும் நடிச்சேன். ஆனா, அது வேலைக்கு ஆகலை. இப்படி நடிப்புல நிறைய தடவை ஆகியிருக்கு.

என்னதான் இருந்தாலும் கேமரா முன்னாடி இருக்கிறப்ப, நம்மைச் சுத்தி இருக்கிறவங்க நோட் பண்றாங்கன்னு நம்மை அறியாமலேயே ஒருவித உணர்வு வந்துடுது. தனியா இருக்கும்போது நாம வேற. நாம் நாமாக இருப்பது வேற. இதைப் பத்தி விளக்கமா நான் அப்புறமா சொல்றேன். என்னதான் சொல்லுங்க இதுவும் ஒரு குட்டுதான்!

நிறைய டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள்ல நடிச்ச ஹீரோவுல நானும் ஒருத்தனா இருப்பேன்னு நினைக்கிறேன். கமல் சார், விஜயகாந்த் சார், பிரபு சார், சரத்குமார் சார், பார்த்திபன் சார், முரளி சார், கார்த்திக் சார், அரவிந்த்சாமி, அப்பாஸ்னு இந்த லிஸ்ட் ரயில் பெட்டி மாதிரி ரொம்ப நீண்டுகிட்டே போகும்.

‘வானத்தைப் போல’, ‘எங்கள் அண்ணா’ன்னு விஜயகாந்த் சார்கூட நெருங்கிப் பழக நல்ல வாய்ப்பு அமைஞ்சது. டைரக்டரோட டிலைட் விஜயகாந்த் சார்னுதான் நான் சொல் வேன். ஒரு படத்துல நடிக்குறப்ப அந்த டைரக்டர் என்ன சொல்றாரோ, அதுக்கு எந்த மறுப்பும் சொல்லாம அப்படியே கேட்டு நடிப்பார். உதாரணத்துக்கு 9.00 டு 6.00 கால்ஷீட் இருக்கிறப்ப மாலை 5.45 மணிக்கு வந்து,‘ ‘ஒரே ஒரு ஷாட் இருக்கு. டிரெஸ் சேஞ்ச் பண்ணணும் சார்?’’ன்னு டைரக்டர் சொன்னா, ‘‘இந்த 15 நிமிஷத்துக்குள்ள இது முடியுமா? முடியாதா’ன்னு யோசிக்கவே மாட்டார். டிரெஸ் மாத்திட்டு வந்து நிப்பார். அப்போ கேமராமேனும், டைரக்டரும் திடீர்னு, ‘‘லைட் போயிடுச்சு. பேக் -அப் சொல்லிடுவோம்’’னு சொன்னா ‘‘அப்படியா ஓ.கேப்பா’’ன்னு கூலா எடுத்துப்பார். விஜயகாந்த் சார் சூப்பர் கூல் (cool) ஹீரோ.

இந்த இடத்தில் இன்னொரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன். என்னோட அப்பா நிறையப் பாட்டுங்க விஜயகாந்த் சாருக்கு கொரியோஃகிராப் பண்ணியிருக்காங்க.

அப்போ நான் படிச்சிட்டிருந்தேன். எங்க அப்பாக்கிட்ட அவர் நல்லா பழகுவார். நல்ல மரியாதை கொடுப்பார். நான் அதைப் பார்த்திருக்கேன். அப்பாக்கிட்ட இப்படி நல்லா பழகுறாரே, மரியாதை கொடுக்குறாரேன்னே அவரை எனக்கு இன்னும் ரொம்ப நல்லாப் பிடிக்கும். எங்களோட பரதநாட்டிய அரங்கேற்றத்துக்கும் அவர் வந்தார்.

விஜயகாந்த் சார் நடிச்ச ‘ஏழை ஜாதி’ படம். அதில் வர்ற ‘கொடுத்தாலும் கொடுப்பாண்டா’ பாட்டுக்கு அப்பாதான் கொரியோகிஃராப் பண்ணினார். அந்தப் பாட்டுல விஜயகாந்த் சார்கூட நான் சேர்ந்து ஆடிட்டிருக்குறப்ப திடீர்னு ஒருத்தர் என் முன்னாடி ஜம்ப் பண்ணி, என்னை மறைத்து கண்ணா பின்னான்னு ஆட ஆரம்பிச்சிட்டார். அப்போ எங்க அப்பா, ‘‘என்னடா என் பையன் இவ்ளோ கஷ்டப்பட்டு ஆடிட்டிருக்கான். யார்டா இவன்? புடிங்கடா இவனை’ன்னு ஒரு கொம்பை கையில எடுத்துக்கிட்டார். உடனே அவர் ஓடிப்போய் ஒளிஞ்சிட்டு ரெண்டு மணி நேரத்துக்கு ஆளையே காணும். அப்புறமா வந்து சொன்னார். ‘‘நான் சும்மாதாம்பா இருந்தேன்; விஜய காந்த் அண்ணேந்தான் போய் முன்னாடி ஆடச் சொன்னார்’’ன்னார். எங்க அப்பா, நான், விஜயகாந்த் சார், அங்கே இருந்த டான்ஸர்ஸ், டைரக்டர், கேமராமேன்னு எல்லாரும் சிரிச்சிட்டோம். அது வேற யாரும் இல்லைங்க நம்ம வடிவேலு சார்தான். இதை இப்போ நினைச்சாலும் நான் சிரிச்சிடுவேன்.

இதே மாதிரி ‘காதலன்’ படத்தில் வர்ற ‘ஊர்வசி ஊர்வசி’ பாட்டுக்கு நான் ரொம்ப க‌ஷ்டப்பட்டு ஆடுறப்ப, வடிவேலு சார் ஒரு என்ட்ரி கொடுத் துட்டு, ஒரு மாதிரி கலாட்டா பண்ணிட்டுப் போவார். அது எல்லார் மனதையும் கவர்ந்துச்சு. இது ‘ஏழை ஜாதி’ பாட்டுனால எனக்கு வந்த இன்ஸ்பிரேஷன்தான். நீங்க அந்தப் பாட்டை பார்த்தா தெரியும்.

விஜயகாந்த் சார் கூட நான் ரெண்டு, மூணு பாட்டுக்கு கொரியோகிராஃப் பண்ணிருக்கேன். ‘பரதன்’னு ஒரு படம். பாட்டை வொயிட் பேக்ரவுண்ட் செட்ல எடுத்தோம். எனக்குத் தெரிஞ்சு எந்த பாட்டுலயும் இல்லாத அளவுக்கு அந்தப் பாட்டுல நிறைய ஷார்ட்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன். ‘புன்னகையில் மின்சாரம்’னு அந்தப் பாட்டு ஆரம்பிக்கும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் ரொம்ப டைம் எடுத்துக்கிட்டு 11 நாள் எடுத்தோம். அந்தப் பாட்டுல விஜயகாந்த் சார் ஸ்டைல்கூட மாறியிருக்கும். கஷ்டம்னு சொல்லி முகத்தை சுளிச்சதே இல்லை. ஒவ்வொரு ஷாட் ஆடி முடிச்சதும், ‘‘ஓ.கேவா பிரபு’’ன்னு கேட்பார். ‘‘ஓ.கே’’ன்னு சொல்வேன். தப்பா ஆயிடுச்சின்னா, ‘‘இல்லை சார்... ஒன் மோர்’’னு சொல்வேன். ‘‘சரி பிரபு’’ன்னு உடனே போய் மறுபடியும் பண்ணுவார். அது ரெண்டு தடவையா இருக்கட்டும், 50 தடவையா இருக்கட்டுமே கொஞ்சம் கூட முகத்தை சுளிக்கவே மாட்டார்.

டெக்னிஷியனுக்குப் பிடிக்கிற வரைக்கும் பண்ணிட்டே இருப்பார். நான் சின்னப் பையன்னு கூட பார்க்காம என்னுடைய மாஸ்டர் போஸ்ட்டுக்கு மதிப்பு கொடுத்து பண்ணுவார். எனக் குன்னு இல்லை; எல்லா டெக்னீஷிய னுக்கும் பயங்கரமா அவர் மதிப்பு கொடுப்பார்.

அப்புறம் இன்னொரு பாட்டும் அவர் கூட பண்ணேன். ‘ராஜநடை’ படத்தில் ‘ராதா ஓ… ராதா’ன்னு அந்தப் பாட்டு ஆரம் பிக்கும். இதில் கொஞ்சம் டான்ஸ் அதிகம். நான் ஆடிக் காட்டுனேன். அதைப் பார்த்த விஜயகாந்த் சார், ‘‘முடியாது’’ன்னுட்டார். அப்புறம் என்ன நடந்தது?

- இன்னும் சொல்வேன்… | படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x