Last Updated : 03 Feb, 2017 10:08 AM

 

Published : 03 Feb 2017 10:08 AM
Last Updated : 03 Feb 2017 10:08 AM

என்னருமை தோழி...! - 25: நடிகையின் கதை

தனக்கு உள்ள மக்கள் செல்வாக்கை சோதனை செய்து பார்க்க வெள்ளோட்டமாக எம்.ஜி.ஆர். அறிவித்த படம் ‘நம் நாடு’! எம்.ஜி.ஆரையும் உங்களையும் இணைத்தே ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கேற்ப அரசியல் வசனங்களுடன், பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட மாக தயாரிக்கப்பட்ட ‘நம் நாடு’ மிகப் பெரிய வெற்றி பெற்றது.

தியேட்டர்களுக்கு சென்று படத்துக்கு ரசிகர் களிடையே கிடைக்கும் ஆதரவை எம்.ஜி.ஆர். கவனித்து வந்தார். ‘வாங்கய்யா. வாத் தியாரய்யா...’ என்று தாங்கள் பாடி ஆடி எம்.ஜி.ஆரை வரவேற்கும் காட்சியை, குறிப் பாக சில தியேட்டர்களில் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையிடச்செய்து பண நோட்டுகளை அள்ளி வீச, எம்.ஜி.ஆருக்கு பரம திருப்தி!

1970-ல் முரசொலி மாறன் தயாரித்த ‘எங்கள் தங்கம்’ படத்தில் நீங்களும், எம்.ஜி.ஆரும் ஊதியம் ஏதும் பெறாமல் நடித்துக் கொடுத்தீர் கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான், உங்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. படத்தின் கதை நகராமல், துண்டு துண்டு காட்சிகளாக படம் எடுக்கப்படுவதாக உங்களுக் குத் தோன்றியது. உங்களின் இந்த சந் தேகத்தை எம்.ஜி.ஆரிடமும் கூற, அவருக்கும் அது உண்மையென்று பட்டிருக்க வேண்டும். அவர் விசாரித்து பார்த்ததில், படத் தயாரிப் பாளர்களுக்கு திடீரென்று ஆர்வம் குறைந்து விட்டதை உணர்ந்தார்!

அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்த போது, எம்.ஜி.ஆருக்கு பெருத்த அதிர்ச்சி. கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவை திரைப்படத்துறையில் ஹீரோவாக்க வேண் டும் என்பதற்காக ‘பிள்ளையோ பிள்ளை’ என்ற படத்திற்கான கதை விவாதத்தில் தயாரிப்பாளர்கள் ஆழ்ந்திருந்தது தெரிந்தது.விரைவில் ‘எங்கள் தங்கம்’ படத்தை முடித்துக்கொள்ளும்படி எம்.ஜி.ஆர் கூறிவிட, படமும் அவசரமாக முடிக்கப்பட்டது.

இந்தப் படம்தான் அரசியலில் வருங் காலத்தில் நிகழ இருந்த பூகம்பத்துக்கும், பிளவுக்கும் அஸ்திவாரம் போட்டது. 1971-ல், ‘என் அண்ணன்’, ‘நீரும் நெருப்பும்’ மற்றும் ‘குமரிக் கோட்டம்’ போன்ற படங்களில் எம்.ஜி.ஆருட னும், ‘சவாலே சமாளி’, ‘சுமதி என் சுந்தரி’ போன்ற படங்களில் சிவாஜி யுடனும், ‘அன்னை வேளாங்கண்ணி’ மற்றும் ‘ஆதிபராசக்தி’ போன்ற பக்தி படங்களிலும் நடித்தீர்கள்.

‘சுமதி என் சுந்தரி’ படக்கதையை கேட்ட துமே நீங்கள் உடனே ஓ.கே. சொல்லி விட்டீர்கள். காரணம் அமைதியான குடும்பப் பெண்ணாக வாழ விரும்பும் ஒரு சினிமா நடிகையின் கதை அது. உண்மை வாழ்க்கை யிலும் அப்படித்தானே நீங்கள் வாழ வேண்டும் என்று நினைத்தீர்கள். ‘சுமதி என் சுந்தரி’ படத்தின் ஆரம்பத்தில் ரசிகர்களை குழப்பும் ஒரு சுவையான காட்சி...

படத்தைப் பார்க்கும் பொதுமக்களுக்கு குறிப்பாக சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு முதல் காட்சி தூக்கிவாரிப்போடும். முதல் காட்சி ‘ஒரு ஆலயமாகும் மங்கை மனது...’ என்ற சுசீலாவின் இனிமையான குரலில் வரும் பாடலை நீங்கள் பாடியபடி வருவதில் இருந்து ஆரம்பிக்கும். படத்தில் நீங்கள் சிவாஜி கணேசனுக்கு ஜோடி. ஆனால், இந்தக் காட்சியில் ஒரு நடிகருக்கு நீங்கள் மனைவியாக வருவீர்கள். அப்படியானால், நீங்கள் அந்த நடிகரின் மனைவியா? சிவாஜி கணேசனுக்கு ஜோடி இல்லையா? என்றெல்லாம் தியேட் டரில் பரபரப்பு ஏற்படும்.

பாதிப் பாடலில்தான் அந்த மர்மம் விலகும். அந்த படத்தின் கதைப்படி நீங்கள் ஒரு நடிகை. பாடல் காட்சியில் நீங்கள் பாடிக் கொண்டிருக்கும்போதே, கேமரா லாங் ஷாட்டில் வரும்போதுதான், ஒரு படப்பிடிப்புக்காக அந்த நடிகருக்கு மனைவியாக நீங்கள் நடித்துக் கொண்டிருப்பது தெரியும். தியேட்டரில் மீண்டும் உற்சாகம்!

அந்தப் பாடல் காட்சியில் உங்களுக்கு கணவராக நடித்த அந்த நடிகர் சுதர்ஷன். தெலுங்கு நடிகரான அவரை உங்களுக்கு கணவர் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார், இயக்குநர். பின்னர், சுதர்ஷன் பல தமிழ் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். ‘சுமதி என் சுந்தரி’ படம் வந்தபோது புதுமுக நடிகரான சுதர்ஷன் உங்களுடன் நடிக்க பயந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்து வந்த, தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் பெற்று வந்த புகழ் பெற்ற நடிகையான தங்களுடன் நடிக்க வேண்டும் என்றதும் அவர் பயந்து விட்டார்!

நீங்கள்தான் அவருக்கு தைரியம் சொல்லி நடிக்க வைத்தீர்கள். புதுமுக நடிகரான சுதர்ஷனுடன் தாங்கள் நடித்த, ‘ஒரு ஆலயமாகும் மங்கை மனது...’ பாடல் காட்சி எப்படி வந்திருக் கிறது என்று பார்க்க விரும்பினீர்கள். உங்களுக்காக பிரிவியூ தியேட்டரில் அந்தப் பாடல் காட்சி மட்டும் திரையில் ஓடியது.இதற்கு என் தந்தை ‘சித்ராலயா’ கோபு ஏற்பாடு செய் திருந்தார். காட்சி உங்களுக்கு திருப்தியாக அமைந்திருந்ததாக இயக்குநர் சி.வி.ராஜேந் திரனிடமும் பின்னர் தெரிவித்தீர்கள்.

இந்த சம்பவத்தைப் பற்றி ஒரு சமயம் நமது சந்திப்புகளின்போது உங்களிடம் நினைவு படுத்தினேன். அப்போது நீங்கள் கூறிய பதில், ‘சிறிய நடிகர்களோடு நடிக்க மாட்டேன்’ என்று நீங்கள் பிடிவாதம் பிடிப்பதாக உங்களை பற்றி நிலவிய தவறான கருத்துகளை உடைக்கும் விதமாக அமைந்திருந்தது...

‘‘எனக்கு நினைவு இருக்கிறது. பாவம்..அந்த ஆர்ட்டிஸ்ட். ‘ஒரு ஆலயமாகும் மங்கை மனது...’ பாடல் காட்சியில் என்னுடன் நடிக்கும் போது அவரது உடல் நடுங்கியது. நான் தான் தைரியம் கூறினேன். நான் குறிப்பிட்ட ஹீரோக்களுடன் தான் நடிப்பேன். சிலருடன் நான் நடிக்க மறுத்துவிட்டேன்...என்றெல்லாம், பின்னாளில் என்னைப் பற்றி வதந்திகள் கிளம்பின. நான் அப்படிப்பட்டவள் இல்லை என் பதற்கு ‘சுமதி என் சுந்தரி’ படத்தில் இடம்பெறும் இந்தக் காட்சி ஒரு உதாரணம்’’ என்றீர்கள்!

தியாகராயநகர் சிவஞானம் தெருவில் நீங்கள் அப்போது வசித்து வந்த வீட்டருகே இருந்த வானதி பதிப்பகத்தில் தமிழ் புத்தகங் களை வாங்குவது உங்களுக்கு வழக்கம். ஆங்கில புத்தகங்கள் வாங்குவதற்கு மவுன்ட் ரோடு ஹிக்கின் போதம்ஸ் செல்வீர்கள். உங்கள் வீட்டருகேதான் உங்கள் தோழியும் நடிகையுமான ஷீலா குடியிருந்தார். ‘அடிமைப் பெண்’ படத்துக்குப் பிறகு, புகழேணியின் உச்சத்தில் இருந்த நீங்கள் எங்கு சென்றாலும் கூட்டம் கூடி விடுகின்ற காரணத்தால், பர்தா ஒன்றை வாங்கி வைத்திருந்தீர்கள். நீங்களும் ஷீலாவும் பர்தாவை அணிந்துகொண்டு தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதும், ஷாப்பிங் செல்வதும் வழக்கம். அவ்வாறு பார்த்த ஒரு படம்தான் ‘ரிக் ஷாக்காரன்’!

ஷீலாவும் நீங்களும் படம் பார்த்து விட்டு, புஹாரிஸ் ஹோட்டலுக்கு ஐஸ் கிரீம் சாப்பிடச் சென்றீர்கள். அப்போது நடிகை ஷீலா, தான் புதிய வீடு ஒன்று வாங்கும் உத்தேசத்தில் இருப்பதாகக் கூறினார். அப்போது திடீரென உங்கள் மனதில் ஒரு புதிய யோசனை...!

- தொடர்வேன்...

தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x