Published : 20 Mar 2017 10:09 AM
Last Updated : 20 Mar 2017 10:09 AM

வால்டர் மாரீஸ் எல்சஸர் 10

ஜெர்மனி ஆராய்ச்சியாளர்

அறிவியலின் பல்வேறு களங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய ஜெர்மனி ஆராய்ச்சியாளர் வால்டர் மாரீஸ் எல்சஸர் (Walter Maurice Elsasser) பிறந்த தினம் இன்று (மார்ச் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் மேன்ஹைம் நகரில் யூதக் குடும்பத்தில் (1904) பிறந்தார். தந்தை வழக்கறிஞர். அவர் வாங்கித் தந்த அறிவியல் இதழ்கள், ஆராய்ச்சி நூல்களை ஆர்வத்தோடு படித்தார். 13 வயதிலேயே அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* தந்தையின் நூலகத்தில் இருந்த தத்துவம், வரலாறு, பிரபஞ்சம், கோள்கள், உயிரியல் என அனைத்து நூல்களையும் படித்தார். கணிதத்திலும் சிறந்த மாணவராக விளங்கினார். கணித ஆசிரியர் மற்றும் தாத்தாவின் வழிகாட்டுதலால் அறிவியலில் கவனம் செலுத்தினார். அணுக்களும் மூலக்கூறுகளும் இவரை அதிகம் வசீகரித்தன.

* கல்லூரியில் பயின்றபோது, பாறைகளில் காணப்படும் தாதுக்களின் காந்த திசை குறித்து ஆராய்ந்து, பூமியின் காந்தப்புலம் குறித்த வரலாற்றை வெளியிட்டார். 1927-ல் வானியல், கணிதம் பயின்று கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். எலெக்ட்ரான்களின் அலை அம்சம் குறித்து ஆராய்ந்து, ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார்.

* இதையடுத்து, அக்கல்லூரியின் பழைய மாணவரும் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளருமான மாக்ஸ் போர்ன் இவரை இங்கிலாந்துக்கு அழைத்தார். சிலகாலம் அவருடன் இணைந்து பணிபுரிந்தார். பாரீஸில் ஆசிரியராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததால், 1935-ல் அங்கு சென்றார். பின்னர், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார்.

* கல்லூரியில் படித்த காலத்தில், பல இடங்களில் யூத எதிர்ப்பை எதிர்கொண்டார். யூத எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டிருந்த பேராசிரியர்கள், விஞ்ஞானிகளிடம் இணைந்து பணியாற்ற முடியாமல் தனது களங்களை மாற்றிக்கொண்டார்.

* கனரக கதிரியக்க உட்கரு பிளவுகளில் புரோட்டான், நியூட்ரான்களின் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கணக்கிட்டுக் கூறினார். 1940-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். அசாதாரண அறிவாற்றல் கொண்டிருந்த இவர், இயற்பியல், கடலியல், புவியியல், திரவ இயக்கவியல், நடைமுறை கணிதம் எனஅனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.

* அமெரிக்க ராணுவத்துக்கு அறிவியல் தொடர்பான சேவைகளை வழங்கி வந்தார். புவியின் காந்தப்புலத்தை விளக்கி கட்டுரை வெளியிட்டார். இவரது ஆராய்ச்சிகளின் அடிப்படையில், புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பலரும் நோபல் பரிசு பெற்றனர்.

* பூமியின் காந்த சக்தியை விளக்கிய இயக்கவியல் கொள்கையின் தந்தை என இவர் போற்றப்படுகிறார். இயற்பியலில் உள்ளடங்காத இயற்கையின் விதி குறித்த விஷயங்களுக்காக ‘பயோடோனிக் லா’ என்ற புதிய சொல்லைப் பயன்படுத்தினார்.

* பல்வேறு துறைகளில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். ‘சிஸ்டம் பயாலஜி’ தொடர்பாக பல கட்டுரைகளை எழுதினார். அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வில்லியம் போவி பதக்கம், ஜான் ஆடம் ஃபிளெமிங் பதக்கம், தேசிய அறிவியல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.

* குவான்டம் மெக்கானிக்ஸ், வளிமண்டல கதிரியக்கப் பரிமாற்றம், கிரகங்களின் காந்த சக்தி, புவித் தட்டுகள் உள்ளிட்ட துறைகளில் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார். புவியின் காந்த சக்தி, இயற்பியல், வானியல், புவியீர்ப்பு விசை உள்ளிட்ட களங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல அடிப்படைக் கோட்பாடுகளை வகுத்துத் தந்த வால்டர் மாரீஸ் எல்சஸர் 87-வது வயதில் (1991) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x