Published : 12 Jun 2017 10:14 AM
Last Updated : 12 Jun 2017 10:14 AM
நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் உடற்கூறு விஞ்ஞானி பெர்ட் சாக்மேன் (Bert Sakmann) பிறந்தநாள் இன்று (ஜூன் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஜெர்மனியின் ஸ்டுக்கர்ட் பகுதியில் (1942) பிறந்தவர். தந்தை நாடக இயக்குநர். குழந்தைப் பருவத்தில் லிண்டாவ் என்ற கிராமப் பகுதியில் வாழ்ந்தார். அங்கேயே ஆரம்பக்கல்வி பயின்றார். ஸ்டுக்கர்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
* இயற்பியல் பாடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மோட்டார் வாகனம், கப்பல், ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் விமானம் ஆகியவற்றின் மாதிரிகளை வடிவமைப்பதுதான் இவரது பொழுதுபோக்கு. அதனால், வருங்காலத்தில் இவர் ஒரு பொறியாளராக வருவார் என்று குடும்பத்தினர் கருதினர்.
* ஆனால், பள்ளி இறுதி வகுப்பின்போது, தகவல்தொடர்பு மற்றும் தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்புகளைக் குறிக்கும் சைபர்நெடிக்ஸ் (cybernetics) குறித்தும் உயிரியலில் இதைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்தும் அறிந்த பிறகு, அதில் நாட்டம் ஏற்பட்டது. இயற்பியலா, உயிரியலா? என்று தீர்மானிக்க முடியாமல் சற்று குழப்பத்துடன்தான் டுபிங்கன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.
முதல் 2 ஆண்டுகளில் உயிரிவேதியியல், உடலியல் குறித்து விரிவாக கற்ற பிறகு, பொறியியலுக்கு சற்றே நெருக்கமான மின் உடல்இயங்கலியல் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார். பல்வேறு இடங்களில் படிப்பைத் தொடர்ந்தார். கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் 1974-ல் மருத்துவப் பட்டம் பெற்றார்.
* மூனிச் பல்கலைக்கழகத்தில் மின் உடல்இயங்கலியல் துறையில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். மத்திய நரம்பு மண்டலம், செல் உடலியல் குறித்து அறிவதற்காக டைட்டர் டக்ஸ் ஆய்வகத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு உயிரி இயற்பியல், அசிடைல்கோலின் ஏற்பிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டார்.
* பிரபல மாக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் உயிரி இயற்பியல், வேதியியல் துறை ஆய்வகத்தை தனியாக நடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இயற்பியலாளர் எர்வின் நேயரும் அங்கு பணியாற்ற வந்தார். இருவரும் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். மின் உடல்இயங்கலியல் துறையில் ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் நுட்பமான இணைப்பு இறுக்கு (patch clamp) நுட்பத்தைக் கண்டறிந்தார்.
* இந்த நுட்பம் சிஸ்டிக் ஃபைப்ரோஸ், ஹார்மோன் கட்டுப்பாடு, நீரிழிவு இன்சுலின் உற்பத்தி குறித்த ஆய்வுகளில் பயன்படுகிறது. நரம்பு, தசை அமைப்புகளைப் பாதிக்கும் குறைபாடுகள், இதய நோய், பக்கவாதத்துக்கான மருந்துகளை மேம்படுத்துவதையும் சாத்தியமாக்கியுள்ளது.
* இந்தக் கண்டுபிடிப்புக்காக எர்வின் நேயருடன் இணைந்து 1991-ம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடல்இயங்கலியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஜெர்மனின் அறிவியலுக்கான மிக உயரிய காட்ஃபிரைட் வில்ஹெம் லெபினிஸ் பரிசு மற்றும் ஹார்வே பரிசு ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
* மாக்ஸ் பிளாங்க் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் செல் ஃபிஸியாலஜி துறை இயக்குநராக செயல்பட்டுள்ளார். ஹைடல்பர்கில் உள்ள மாக்ஸ் பிளாங்க் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓய்வுபெற்ற அறிவியல் உறுப்பினராகவும், அதே நிறுவனத்தின் நரம்பியல் ஆராய்ச்சி அமைப்பின் ஓய்வுபெற்ற ஆராய்ச்சியாளர்கள் குழுவின் தலைமை பொறுப்பிலும் செயல்பட்டு வருகிறார்.
* ஜெர்மனியின் ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் தற்போது பேராசிரியராகப் பணியாற்றி வரும் பெர்ட் சாக்மேன் இன்று 76-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். உயிரி இயற்பியல், மூலக்கூறு உயிரியியல் களங்களில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT