Published : 10 Oct 2014 12:00 PM
Last Updated : 10 Oct 2014 12:00 PM
‘நவீன இந்தியாவின் ரவீந்திரநாத் தாகூர்’ என்று போற்றப்படும் கன்னட எழுத்தாளர் சிவராம் கரந்த்தின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
• கர்நாடகத்தின் உடுப்பி அருகே உள்ள சாலிகிராமாவில் பிறந்தவர். கர்நாடகத்தின் பண்டைய கலை வடிவமான யட்சகானத்தைக் கற்றார். தாகூரின் சாந்தி நிகேதனில் படிக்க ஆசைப்பட்டார். தந்தை அனுமதிக்கவில்லை.
• காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்துக்காக கல்லூரிப் படிப்பை பாதியில் துறந்தார். கதர் ஆடைகளை நெய்து விற்றார். காசி, பிரயாக் போன்ற இடங்களில் ஆன்மிகம் என்கிற பெயரில் சாமியார்கள் செய்யும் செயல்களைப் பார்த்து வெறுத்தவருக்கு சமூக சீர்திருத்தம் மீது நாட்டம் திரும்பியது.
• அவரது முதல் நாவல் ‘சோமாவின் மேளம்’ தலித்தின் துயர்களைப் பேசியது. அவர் எழுதிய நாவல்களின் எண்ணிக்கை 45.
• கன்னடத்தில் குழந்தைகளுக்காக ‘பால பிரபஞ்சா’ என்ற கலைக் களஞ்சியத்தை வெளியிட்டார். ஜெர்மனி வரை நூலை அனுப்பி செம்மைப்படுத்தி குழந்தைகளின் வாசிப்பு அனுபவத்தை மாற்றினார்.
• அரசின் கட்டிடக் கலை பற்றிய புத்தகம் அவருக்கு திருப்தி தரவில்லை. சொந்தமாக ஆய்வுகள் செய்து நூல் எழுதினார். மூத்தோருக்கான அறிவியல் கலைக் களஞ்சியத்தை 4 பாகங்களில் எழுதி பிரமிக்கவைத்தார். சட்டக் கலை நூல்களை கன்னடத்தில் மொழிபெயர்த்தார்.
• ‘யட்சகானா’ கலை வடிவத்தை அழிவில் இருந்து மீட்டு அதன் நாட்டார் மரபை நிலைநாட்டினார். பாலே முதலிய நடன முறைகளை அதில் புகுத்தி சோதனை செய்தார். தொலைந்துபோன ராகங்கள், இசைக் கருவிகளை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
• அவரது சுயசரிதை ‘வேடிக்கை மனதின் பத்து முகங்கள்’ என்கிற தலைப்பில் வெளியானது. ‘‘பேனாவால் மற்றவர்கள் என்னைக் கொல்வதற்கு பதிலாக நானே என்னைக் கொன்றுகொள்கிறேன்’’ என்றார்.
• தீவிரமான சூழலியல் போராளியான அவர், காடுகள், மலைத் தோட்டங்களை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு எதிராகப் போராடினார். ராணி பென்னூர் பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க போராடினார்.
• பெட்தி நீர்மின் திட்ட எதிர்ப்பு இயக்கத்துக்கு தலைமை தாங்கினார். அணுசக்திக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார்.
• ஞானபீட விருது, சாகித்ய அகாடமி, ஸ்வீடன் அகாடமி, துளசி சம்மான், தேசிய திரைப்பட விருது பெற்றுள்ளார். பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டபோது இந்திராவின் நெருக்கடி நிலையைக் கண்டித்து விருதை திருப்பிக் கொடுத்தார். தனது 95-வது வயதிலும் பறவைகள் பற்றி ஒரு நூலை எழுதி வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT