Published : 07 Oct 2014 11:20 AM
Last Updated : 07 Oct 2014 11:20 AM
அன்பு வழியில் தென்ஆப்ரிக்காவில் நிறவெறியை எதிர்த்த பாதிரியார் டெஸ்மாண்ட் டுடுவின் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• தென் ஆப்ரிக்காவின் கிளர்க்ஸ்டார்ப் நகரில் ஆசிரியர் ஜகாரியா – சமையல் பணியாளர் அலேட்டா தம்பதியின் மகனாக 1931-ல் பிறந்தார். மருத்துவர் ஆகவேண்டும் என்பதே டுடுவின் ஆசை. பணம் இல்லாததால், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார்.
• சோபியா டவுனில் கறுப்பின குடியிருப்புப் பகுதியில் பணியாற்றிய வெள்ளையினப் பாதிரியார் ட்ரெவர் ஹடில்ஸ்டன் தனது தொப்பியைக் கழற்றி டுடுவின் அம்மாவுக்கு வணக்கம் செலுத்துவார். இதைப் பார்த்த டுடுவிடம், வெள்ளையர் மீதான வெறுப்பு தணிந்தது.
• பள்ளிகளில் கறுப்பின பிள்ளைகளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டதால், கல்வித் துறையை விட்டுவிட்டு, இறையியல் படிக்க இங்கிலாந்து போனார்.
• ஆப்ரிக்காவில் பாதிரியாராக வாழ்க்கையை மீண்டும் தொடங்கியவர் சர்ச்களின் தலைமைப் பாதிரியார் ஆனார்.
• நிறவெறிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தார்.
• சொவேடோ எனும் இடத்தில் 10 ஆயிரம் கறுப்பின இளைஞர்கள் போராடினர். 500 பேரை போலீஸார் சுட்டுத் தள்ளினர். ரத்தம் கொதித்த டுடு சொன்னார்: ‘‘கண்டிப்பாக வெல்வோம். உண்மையை பொய்யோ, வெளிச்சத்தை இருளோ, வாழ்வை மரணமோ வெல்லமுடியாது. அன்போடு காத்திருப்போம்.’’
• நோமலிஸோ லீ ஷென்சேன் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 பிள்ளைகள்.
• இஸ்ரேலால் காஸாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள் பற்றி விசாரிக்க ஐ.நா.வால் அனுப்பட்ட குழுவுக்கு தலைமை ஏற்றார். வெளிநாடுகளுக்கு ஒரு யோசனை சொன்னார். ‘‘நிறத்தால் பாகுபடுத்தும் இந்நாட்டில் இருக்கும் உங்களது முதலீடுகளை திரும்பப்பெறுங்கள். இதனால், இழப்பு எங்களுக்குத்தான். அது ஒரு அற்புதமான நோக்கத்துக்கான இழப்பு’’ என்றார். அவர் சொன்னதை அப்படியே ஏற்று, பல நாடுகள் செயல்பட, தென் ஆப்ரிக்கா ஸ்தம்பித்தது. அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
• அதிபரான மண்டேலாவை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் வரலாற்றுத் தருணம் டுடுவுக்கு வாய்த்தது. ‘‘இப்போது நான் இறந்தால்கூட பொருத்தமாக இருக்கும். இந்த அற்புதமான நேரத்துக்காகத்தானே போராடினோம்!’’ என்று உணர்ச்சிபொங்கக் கூறினார்.
• தலாய் லாமாவுக்கு தென் ஆப்ரிக்கா விசா மறுத்தபோது, கடுமையாக விமர்சித்தார்.
• எய்ட்ஸ் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, பாலின சமத்துவம், மாற்றுப் பாலினத்தவருக்கு ஆதரவு என 82 வயதிலும் சளைக்காமல் பாடுபடுகிறார் டுடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT