Published : 02 Oct 2014 10:30 AM
Last Updated : 02 Oct 2014 10:30 AM
இன்று எனது பிறந்த நாள். எனது பிறந்த நாளை வழக்கமான வழியில் நான் கொண்டாடுவதில்லை. இந்த நாளில் நாம் விரதம் இருந்து, ராட்டை சுற்றி, பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என்று சொல்வேன். எனது பார்வையில், ஒருவரது பிறந்தநாளைக் கொண்டாட சரியான வழி அதுதான். என்னைப் பொறுத்தவரை இன்றைய நாள், துக்கம் அனுசரிக்கும் நாள். நான் இன்னும் உயிருடன் இருப்பதுகுறித்து எனக்கு ஆச்சரியத்தையும் வெட்கத்தையும் தருகிறது.
லட்சக் கணக்கான மக்களின் மரியாதையைப் பெற்ற வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன்தான் நான். ஆனால், இன்று ஒருவரும் நான் சொல்வதைக் கேட்பதில்லை. இந்தியாவில் இந்துக்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றும் வேறு யாரும் இங்கு இருந்துவிடக் கூடாது என்றும் நீங்கள் விரும்புகிறீர்கள்.
இன்று முஸ்லிம்களை நீங்கள் கொன்றுவிடலாம். ஆனால், நாளை என்ன செய்வீர்கள்? பார்சிகள், கிறிஸ்தவர்களின் கதி என்ன ஆகும்? இந்தியாவுக்குத் திரும்பி வந்ததில் இருந்தே, சமூக நல்லிணக்கத்துக்காக உழைப்பதை எனது தொழிலாகக் கொண்டிருக்கிறேன். நமது மதங்கள் வெவ்வேறாக இருப்பினும் சகோதரர்கள்போல் நல்லிணக்கத்துடன் நாம் வாழலாம் என்பதுதான் எனது விருப்பம்.
ஆனால், இப்போதோ நாம் எதிரிகளாகிவிட்டதுபோல் தோன்றுகிறது. முஸ்லிம்களில் நேர்மையாளர் யாரும் இல்லை என்று நாம் கருதிக்கொள்கிறோம். நம்மைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிமுக்கு எந்த மதிப்பும் இல்லை. இப்படியான சூழலில், இந்தியாவில் எனக்கென்று என்ன இடம் இருக்கிறது? நான் ஏன் உயிர்வாழ வேண்டும்?
100 வயது, 90 வயது வரை இருக்க வேண்டும் என்று நினைப்பதை நிறுத்திவிட்டேன். இன்று எனது 79 ஆண்டில் நுழைகிறேன். ஆனால், அதுகூட எனக்கு வலியைத்தான் தருகிறது. என்னைப் புரிந்துகொண்டிருப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன் (புரிந்துகொள்பவர்கள் சிலர்தான்). நாம் இப்படிப்பட்ட மிருகத்தனத்தைக் கைவிட வேண்டும். பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லிம்கள் செய்வதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்துக்களைக் கொல்வதால் முஸ்லிம்கள் பெரிய இடத்தை அடைந்துவிடுவதில்லை; அவர்கள் கொடூரர்களாகத்தான் ஆகிறார்கள். ஆனால், நானும் கொடூர மிருகமாக, காட்டுமிராண்டியாக, உணர்வற்றவனாக ஆக வேண்டும் என்பதா அதன் அர்த்தம்? அப்படிச் செய்வதை நான் உறுதியாக மறுத்துவிடுவேன்; நீங்களும் அப்படிச் செய்யாதீர்கள் என்று உங்களைக் கேட்கிறேன்.
நீங்கள் உண்மையிலேயே எனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்புகிறீர்கள் என்றால், உங்களது கடமை இதுதான். இந்த வெறித்தனத்தால் யாரும் பீடிக்கப்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது. உங்கள் மனதில் கோபம் இருந்தால் அதைக் களைந்தெறிய வேண்டும்.
சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கும் விஷயத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். இதை நீங்கள் நினைவில் கொண்டால், அதுவே நீங்கள் செய்யும் நல்ல காரியம் என்று நான் நினைப்பேன். உங்களிடம் நான் சொல்ல விரும்புவது இவ்வளவுதான்!
- தமிழில்: வெ. சந்திரமோகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT