Published : 01 Apr 2017 03:32 PM
Last Updated : 01 Apr 2017 03:32 PM
பழைய 100 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் இருக்கும் விவசாயம் மறைந்து (!) புதிதாய் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டில் இஸ்ரோவின் மங்கள்யான் அமர்ந்திருப்பதாகத் தொடங்குகிறது குறும்படம். பார்த்துக் கொண்டிருக்கும் நம்மையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
ஒரு விவசாயி. அவரின் மகனும், மருமகளும் விவசாயக் கடனை அடைக்க முடியாமல் இறந்துபோக, தனியாய்ப் பேரனுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் அழுக்குகளைத் தன் பேரனிடம் பகிர்ந்து ஆறுதல் அடைவது அவரின் வழக்கமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்குப் பின்னால் இருந்த நுண்ணரசியலும் இதில் அடக்கம். அப்போது ''நல்லது பண்ணா போலீஸ் அடிப்பாங்களா தாத்தா?'' என்னும் சிறுவனின் கேள்வி சமூகத்தை நோக்கிச் சொடுக்கும் சாட்டையடி.
'அடுத்த நாட்டை நம்பிப் பிழைப்பவனை நம்பற பொண்ணுக நம்ம நாட்டுல நாத்து நடறவங்களை நம்பறதில்லை', ,மொதல்ல கீழே என்ன நடக்குதுன்னு பாருங்க; அப்புறமா ராக்கெட்ல போயிக்கலாம்', 'பசிக்கு எவனும் பணத்த திங்கமுடியாது கண்ணு!', 'விவசாயம் பண்றது தப்பாய்யா?' என்ற வசனங்களின் கூர்மை நம் மனதைக் கிழித்தெறிகிறது.
வங்கி அதிகாரியே நிலத்தை விற்றுக் கடனை அடைக்கச் சொல்லும் அவலம் இங்குதான் நடக்கிறதா? கசப்பான உண்மை நெஞ்சில் அறைகிறது.
'கடனைக் கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை' என்பதைச் செய்தியாகக் கடந்துவிடும் நாம், என்றாவது அவர்களின் குடும்பத்தின் நிலையை எண்ணிப் பார்த்திருக்கிறோமா? மூன்று வேளை சோறு போடும் அவர்களைப் பற்றி ஒரு வேளையாவது யோசித்திருக்கிறோமா? இனியாவது யோசிப்போமா?
'ஜல்லிக்கட்டுக்குக் குரல் கொடுத்த இளைஞர்கள், இல்லையில்லை ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டிய இளைஞர்கள் விவசாயிகளுக்கும் ஏதாவது செய்வீர்களா?'- கைகூப்பிக் கேட்கும் சிறுவனின் குரலில் ஒளிந்திருக்கும் ஏக்கமும், வழியும் கண்ணீரும் உரியவர்களைச் சென்று சேருமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT