Published : 09 Apr 2017 10:59 AM
Last Updated : 09 Apr 2017 10:59 AM

காலத்தின் வாசனை: சக்கரவர்த்தியின் ஆவி!

நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்.. நம்புவது கடினம். ஆனாலும் நடந்ததற்குச் சாட்சியாக நான் இருக்கிறேன்.

தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் போகிற வழியில் ஆற்றுப் பாலத்துக்கு முன்னதாக ஒரு சின்னஞ்சிறு கடை. வெளியே வெயில் மறைப்புக்கு ஒரு படுதா தொங்கும். அதுதான் இலக்கிய உலகம் நன்கறிந்த தஞ்சைப் ப்ரகாஷின் ரப்பர் ஸ்டாம்பு கடை. இந்தக் கடை பிற்பாடு கீழவீதிக்கு இடம்பெயர்ந்தது.

கடையில் எப்போதும் கூட்டம் இருக்கும். அவர்கள் ரப்பர் ஸ்டாம்புக்கு ஆர்டர் கொடுக்க வந்தவர்களோ வாங்கிப்போக வந்தவர்களோ அல்ல. அவர்களை உற்றுப் பார்த்தால், எழுத்துலகின் ஓரிரண்டு பிரபலங்களும் உங்கள் கண்ணில் படக்கூடும்.

வியாபார ஸ்தலமான அந்தக் கடையில் உட்கார்ந்து, வியாபார விரோதமான விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தவர்கள் பலர் அங்கே இருந்தார்கள். இத்தகைய கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர், அங்கிருந்த புராதனமான மேசையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கும் தஞ்சை ப்ரகாஷ்!

பெரிய வழுக்கை, பெரிய கண்கள், கன்னங்கரேல் தாடி.

அந்தக் கடையைத் தாண்டித்தான் என் அலுவலகம் போக வேண்டும். என்னுடைய மதிய இடைவேளைகளும், மாலைப் பொழுதுகளும் அங்கேதான் கழிந்தன.

ப்ரகாஷின் இலக்கியப் பேச்சை ரசிப்பதற்கும் இலக்கியவாதிகளைச் சந்திப்பதற்குமான கூடுதுறையாக அந்தக் கடை விளங்கியது. நான் விவரிக்கப்போகிற சம்பவம் இலக்கியம் சம்பந்தப்பட்டதல்ல. ப்ரகாஷின் அத்யந்த நண்பர் சக்கரவர்த்தியைப் பற்றியது.

ஒல்லியாக.. கருப்பாக இருப்பார். டெரிகாட்டன் வேட்டி, வெள்ளை அரைக் கைச் சட்டை அணிந்திருப்பார். அவரது மெளனம், அங்கே இலக்கியம் பேசுபவர்களின் உரையாடலைவிடக் கனமானது. அசப்பில் முகம் வள்ளலார் மாதிரி இருக்கும்.

அமானுஷ்ய விஷயங்களை அவர் பேசிக் கேட்க வேண்டும்.

“சாமியார்கள், மாயமந்திரங்கள் பற்றி யெல்லாம் அவரிடம் ரொம்பப் பேசாதே. தான் மாட்டிக்கொண்டது போதாது என்று உன்னையும் மாட்டி வைத்துவிடப் போகிறார்...” என்பார் ப்ரகாஷ்.

அவர் சொன்னது சரி. ஒருநாள் சக்கரவர்த்தி எங்களிடம் உற்சாகமாகச் சொன்னார்.

“கும்பகோணத்தில் ஒரு சாது இருக்கிறார். பெரிய மகான். தொழில், பந்தல் போடுவதுதான். ஆனால் ஜீவன் முக்தர். அவரிடம் தீட்சை வாங்கிக் கொள்ளப்போகிறேன். விரும்புகிறவர்கள் என்னோடு வரலாம்.”

ப்ரகாஷ், தேனுகா, சுந்தர்ஜி, அனந்து என்று நாலைந்து பேர் கிளம்பினோம்.

கும்பகோணம் கர்ணகொல்லை கீழத் தெருவில், சாது பொன் நடேசன் என்ற அந்த சித்தர் வசித்தார்.

எங்களை அழைத்துச் சென்ற சக்கரவர்த் தியைத் தவிர, எல்லோருக்கும் தீட்சை கொடுத்தார். கேட்டதற்கு இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டார். ப்ரகாஷைப் பார்த்து உங்களுக்கு எதற்கு தீட்சை என்றார் சிரித்தபடி.

தீட்சை மறைபொருள். வெளிப்படுத்த அனுமதி இல்லை. ஆயினும் சாது என் பிடரியைத்தொட்டு பிருஷ்டம் வரை நீவி, நூல்போன்ற ஏதோ ஒன்றை உருவி எடுத்ததை இப்போது நினைத்தாலும் சில்லிடுகிறது.

சத்தியம் சொல்கிறேன்.. உடல் லேசாகி விட்டது. கொஞ்சம் முயற்சி பண்ணினால் பறக்கலாம்போல் இருந்தது. தாங்க முடியாத சிரிப்பு வந்தது.

திடீரென்று என்னை சென்னைக்கு மாற்றிவிட்டார்கள். கடுமையான வேலைச் சுமை.

நிமிர்ந்தேன்.. ஓராண்டு உதிர்ந்திருந்தது.

உறவினர் திருமணத்துக்குத் தஞ்சைப் பயணம். பேருந்து, நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஊருக்குள் சென்றது. அதோ.. கர்ணகொல்லை கீழத்தெரு! தெரு முனையில் ஒரு பெட்டிக் கடை. கடையில் தொங்கிய கயிற்று நெருப்பில் சிகரெட் பற்றவைத்தபடி நிற்பது சக்கரவர்த்தியேதான். நெற்றியில் பழைய காலணா அளவுக்குத் தோல் பிரிந்து என்னவோ காயம். அழைப்பதற்குள் பேருந்து வேகம் எடுத்துவிட்டது.

தஞ்சாவூர் போனதும் முதல்வேலையாக ப்ரகாஷைச் சந்தித்தேன். பேருந்தில் வரும்போது சக்கரவர்த்தியைப் பார்த்த விஷயத்தைச் சொன்னேன்.

“நீ பார்த்திருக்கவே முடியாது. இனி, பார்க்கவும் முடியாது. ஏனென்றால், மாடிப்படியில் தவறி விழுந்து, நெற்றியில் அடிபட்டு, போன மாதம் செத்துப்போனார் சக்கரவர்த்தி’’ என்றார் ப்ரகாஷ் வருத்தத்துடன்.

“எங்கே அடிபட்டது?” என்றேன் படபடப்புடன்.

“நெற்றியில்... ஏன் கேட்கிறாய்?”

நான் பார்த்த சக்கரவர்த்தியின் நெற்றிக் காயத்தைச் சொன்னேன்.

என்னை உற்றுப் பார்த்துவிட்டு ப்ரகாஷ் சொன்னார்: “எல்லாம் உன் பிரமை - ஹாலுசினேஷன். ஆனால், ஒன்றை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சக்கரவர்த்தி ஆவியான பிறகும் அங்கேதான் சுற்றிக்கொண்டிருப்பார். ஏனென்றால், சாது கடைசிவரைக்கும் சக்கரவர்த்திக்குத் தீட்சை கொடுக்கவே இல்லை.”

- தஞ்சாவூர்க் கவிராயர். தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x