Published : 08 Jul 2016 02:22 PM
Last Updated : 08 Jul 2016 02:22 PM
அமெரிக்கத் தொழிலதிபரும், கொடைவள்ளலுமான ஜான் டி.ராக்ஃபெல்லர் (John D.Rockefeller) பிறந்த தினம் இன்று (ஜூலை 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* நியுயார்க் மாகாணம் ரிச்ஃபோர்ட்டில் பிறந்தார் (1839). தந்தை ஒரு விற்பனைப் பிரதிநிதி. பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் ஒரு கல்லூரியில் பிசினஸ் கோர்ஸ் பயின்றார்.
* தொழிலில் ஈடுபடும் ஆசையால் படிப்பை நிறுத்திவிட்டு 16-வது வயதில் ஒரு கமிஷன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பிறகு நண்பருடன் சேர்ந்து கமிஷன் வியாபாரம் தொடங்கினார். நல்ல லாபம் கிடைத்தது. ‘நூறாயிரம் டாலர் சம்பாதிக்க வேண்டும்; நூறு வயது வாழ வேண்டும்’ என்பது இவரின் ஆசை.
* அன்றைய காலகட்டத்தில்தான் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் எண்ணெய் வியாபாரம் பெருகும் என்பதைத் துல்லியமாக கணித்த இவர், 1863-ல் ஸ்டான்டர்ட் ஆயில் எண்ணெய் நிறுவனத்தைத் தொடங்கினார். மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தால் இவரது வியாபாரம் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்தது.
* வெற்றி மேல் வெற்றி பெற்றார். ‘பணம் சம்பாதிப்பதைவிடத் தொழிலில் முதல்வனாக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறுவார். 20-ம் நூற்றாண்டில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். 1916-ல் ஆண்டு உலகின் முதல் கோடீஸ்வரர் என அறிவிக்கப்பட்டார்.
* எப்போதும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தார். கோடீஸ்வரரான இவரிடம் ஒருமுறை தங்கள் கல்லூரியில் வகுப்பறைக் கட்டுவதற்காக நன்கொடைக் கேட்க மாணவர்கள் வந்திருந்தனர். சிறு விளக்கின் ஒளியில் எதையோ படித்துக்கொண்டிருந்த அவர் அந்த விளக்கை அணைத்துவிட்டு அவர்களிடம் பேச ஆரம்பித்தார். இவ்வளவு கஞ்சரான இவர் என்ன தரப்போகிறார் என்று மாணவர்கள் நினைத்தனர்.
* ஆனால் அவரோ பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்தார். வியப்படைந்த மாணவர்கள், விளக்கை ஏன் அணைத்தீர்கள்? என்று கேட்டதற்கு, படிப்பதற்குத்தானே விளக்கு தேவை. நான் சிக்கனமாக இருப்பதால்தான் நல்ல காரியங்களுக்கு என்னால் நன்கொடைகளை அளிக்க முடிகிறது என்றாராம்.
* 53-வது வயதில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரானார். அப்போது, அலோபீசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார். இன்னும் ஒரு வருடம்தான் உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் கெடு வைத்தனர். இவ்வளவு பணம் இருந்தும் தன்னோடு ஒரு பைசாவைக்கூட எடுத்துச் செல்ல முடியாது என்கிற ஞானம் பிறந்தது.
* அடுத்தநாள் முதல் தேவாலயம் கட்டுவதற்கும், ஏழைகளுக்கும், கல்விக்காகவும் வாரி வாரி வழங்கத் தொடங்கி விட்டார். மருத்துவ ஆராய்ச்சிக்காக ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம், மருத்துவ சேவைக்காக ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன் என பல்வேறு சேவை அமைப்புகளைத் தொடங்கினார்.
* ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன் மூலம் பென்சிலின் உட்பட பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு வருடம்தான் உயிர்வாழ்வார் என்று டாக்டர்கள் விதித்த கெடு பொய்யானது. 98 வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்.
* மிகச் சாதாரண நிலையில் இருந்து விடாமுயற்சியுடன், கடுமையாகப் பாடுபட்டு உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக உயர்ந்த சாதனையாளரும் கல்வி மற்றும் வறுமை ஒழிப்புக்காக வாரி வழங்கிய வள்ளலுமான ஜான் டி.ராக்ஃபெல்லர் 1937-ம் ஆண்டு, 98-ம் வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT