Last Updated : 29 Jun, 2017 08:15 AM

 

Published : 29 Jun 2017 08:15 AM
Last Updated : 29 Jun 2017 08:15 AM

ஜூன் 30... நள்ளிரவில் சுதந்திர சீர்திருத்தம்!

ஒரு நாட்டில் இயல்பாக விவேகமான செயல்பாடு நிகழ்வது என்பது வரலாற்றில் மிகவும் அபூர்வமான விஷயமாகும். அத்தகைய அரிதான சம்பவம் வெள்ளிக்கிழமை, ஜூன் 30 நள்ளிர வில் நிகழ உள்ளது. அதுதான் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி அமலாக்கமாகும். இந்த வரி விதிப்பானது ஏற்கெனவே மாநில மற்றும் மத்திய அரசுகள் விதிக்கும் 17 வகையான வரி விதிப்புகளுக்கு மாற்றாக ஒற்றை வரி விதிப்பு முறையாக அமலுக்கு வர உள்ளது.

ஐரோப்பா, அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, ஜப்பான் ஆகிய அனைத்து நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகம் கொண்ட இந்தியாவில் ஒற்றை சந்தை, ஒரே வரி விதிப்பு முறை கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவின் வரி சீர்திருத்த வரலாற்றில் இது மிகவும் முக்கியமான மைல் கல்லாகும். அதிகாரிகளின் குறுக்கீடு மற்றும் பலமுனை வரி விதிப்பு முறைகளை செயல்படுத்தி பார்த்துள்ள இந்திய மாநிலங்களில் இப்போது புதிய வரி விதிப்பு முறை அமலாக உள்ளது.

பிராந்திய கட்சிகளால் ஆளப்படும் மாநில அரசுகள் மற்றும் சிதறுண்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட இந்தியாவில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு அதிவேகமாக வளரும் பொருளாதார நாட்டில் ஜிஎஸ்டி கொண்டு வரப்படுகிறது. இதன் பலன் இந்தியாவில் தொழில் புரிவதை எளிதாக்கும்.

எவரேனும் ஒருவர் இங்கு பொருளை விற்க வேண்டுமென் றால் அதற்கு மாநில விற்பனை வரி, மத்திய விற்பனை வரி, நுழைவு வரி, விற்றுமுதல் (டர்ன்ஓவர்) வரி, சேவை வரி, உற்பத்தி வரி, ஆக்ட்ராய், செஸ் எனப்படும் பல்வேறு விதமான வரி விதிப்பு களால் இந்தியாவை அதிக வரி விதிக்கப்படும் நாடாக உலக அரங் கில் சித்தரித்துள்ளது. ஆக்ட்ராய் எனப்படும் வரிதான் மிகவும் மோச மானது. உதாரணத்துக்கு டெல்லி யிலிருந்து லாரியில் சரக்குகளை மும்பைக்கு எடுத்துச் செல்ல ஆகும் நேரம் 35 மணியாகும். இதில் பயண நேரம் 20 மணிதான். எஞ்சிய 15 மணி நேரம் சோதனைச் சாவடிகளில் வரி தொடர்பான பிரச்சினைக்கு லஞ்சம் கொடுப்பது, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வதற்கான நேரமாக வீணாகிறது.

நாட்டிலுள்ள 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் தொலைநோக்கு பார்வையில் வரி விதிப்பில் தங்களுக்குள்ள இறையாண்மையை விட்டுக் கொடுத்து ஒருமுக வரி விதிப்புக்கு ஒப்புக் கொண்டிருப்பது இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும்.

தங்களது இறையாண்மையை நிலைநாட்ட ஐரோப்பாவிலிருந்து பிரிட்டன் விலகியிருக்கும் தருணத் தில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங் களும் ஒரு முகமாக தங்களது இறையாண்மையை குவித்திருப் பது நம்மிடையே ஒளிந்திருக்கும் ஒற்றுமையை வெளிக்காட்டுகிறது. பொதுவாக கடினமானதை ஏற்க மறுத்து விவாதத்தில் ஈடுபடும் மனப்போக்கை கொண்ட இந்தியர் கள் இதை ஏற்றுக் கொண்டது ஆச்சரியமளிக்கும் விஷயமாகும்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத் தில் குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள், மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள், முன்னாள் முதல்வர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளது உண்மையிலேயே வரலாற்றில் மிக முக்கியமான தருணம்தான். 70 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் பெற்றபோது நள்ளிரவில் நிகழ்ந்த பிரம்மாண்ட நிகழ்வைப் போன்றதுதான் இது.

இந்த வரிச் சீர்திருத்தமானது இந்தியாவின் வர்த்தக உலகில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். நிறுவனங்கள் ஒரே இடத்திலிருந்து பொருள்களை விநியோகிக்க முடியும். மாறாக தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் கிட்டங்கி ஏற்படுத்தி சப்ளை செய்யத் தேவையிருக்காது. இதேபோல உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருளை எங்கிருந்து வேண்டுமானாலும் பெற முடியும். ஒவ்வொரு மாநிலங்களிலும் விதிக்கப்படும் குழப்பமான வரி விதிப்பு இனி இருக்காது.

டிஜிட்டல் மூலமான வரி தாக்கல் மூலம் விவரங்களை தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் அதிகாரிகளின் குறுக்கீடு, கெடுபிடி குறையும். இதனால் போக்குவரத்து செலவு குறைவதோடு, சரக்குகள் விரைவாக உரிய இடங்களுக்குச் செல்லும். நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கும். ஏற்கெனவே வரி செலுத்தியபடியால் வர்த்தகர்கள் மேலும் கூடுதல் தொகை வைத்து பொருள்களை விற்க மாட்டார்கள். வரி செலுத்துவோரின் எண்ணிக் கையும் அதிகரிக்கும். இதன் விளைவாக வரி வருவாய் உயரும்.

மிகப் பெரிய சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் எளிமை யான வரி விதிப்பு முறை காரண மாக அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கும். இவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) கணிப்பின்படி ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி (ஜிடிபி) 8 சதவீத அளவுக்கு உயரும் என்று குறிப்பிட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில் வழக்கமான வளர்ச்சியை விட ஜிஎஸ்டி அமலாக்கத்தால் 2 சதவீத வளர்ச்சி அதிகரிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரி விதிப்பு முறைக்கு மாறுவதற்காக நிறுவனங்களும் மிக அதிக அளவிலான செலவை மேற்கொண்டுள்ளன. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் தங்களது தொழிலில் மிகப் பெரிய பாதிப்பு இருக்காது என்று நம்புகின்றன. சரக்குகளைக் கையாளும் நிறுவனங்களுக்குத்தான் இதில் மிகப் பெரிய பலன். இந்தியா முழுவதும் லாரிகளை எளிதாக இயக்க முடியும். இருந்தாலும் புதிய வரி விதிப்பு முறை பல்வேறு குழப்பங்களைக் கொண்டு வரும் என்பதும் உண்மை. நிறுவனங்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்வது அதிகரிக்கும். ஒற்றை வரி விதிப்பு முறை என்றாலும் பல்வேறு வரி பிரிவுகள் உள்ளன. 5, 12, 18, 28 சதவீதம் என்ற அளவில் உள்ளதால் பொருள்களை பகுத்தறிந்து எவற்றுக்கு எவ்வளவு வரி விதிப்பு என்பதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் ஏற்படும் வரி தாவா பிரச்சினை நீதிமன்றத்தில் பல வழக்குகளாக தேங்கக்கூடும்.

ஜிஎஸ்டி முறையில் அதிக வரி விதிப்பு உள்ள நாடாக இந்தியா கருதப்படுகிறது. ஏனெனில் 18 சதவீதம் மற்றும் 28 சதவீத வரி விதிப்பு முறைகள் உள்ளன. இதற்குப் பதிலாக 20 சதவீதமாக இருந்திருக்கலாம்.

இதில் மிகுந்த கவலையளிக்கும் விஷயமே வரித்துறை அதிகாரி களின் மெத்தனமான போக்குதான். கம்ப்யூட்டரைக் கையாள்வது மற்றும் டிஜிட்டல் ஆவணங்களைக் கையாள்வதில் அவர்களிடம் உள்ள மெத்தன போக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தை அவ்வளவு எளிய பயணமாக்காது.

நீண்ட நாள் கனவு இப்போது மெய்படச் செய்ததில் பலருக்கும் பங்கு உள்ளது. பல சமயங்களில் இந்த அரசு சர்வாதிகார போக்கில் நடப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் மாநில அரசு களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, நிதானமாக அரசியல் சாசன திருத்தம் கொண்டு வந்து, ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளித்து செயல்படுத்தப்பட உள்ளது. இறுதி யாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதற்கான உருவாக்கப் பணிகள் நடைபெற்று அதை சாதனை நிகழ்வாக உருமாற்றியுள்ளது.

குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடி ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் 2014-ம் ஆண்டு பிரதமரான பிறகு தனது கருத்தை அவர் மாற்றிக் கொண்டார். தனது அரசின் மிகப் பெரிய சாதனையாக அவர் இப்போது கூறி வருகிறார். சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - மோடி சந்திப்பின்போது, அமெரிக்காவில் வரி சீர்திருத்தம் கொண்டு வர மிகப் பெரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ள தாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மோடி அரசின் நிதானமான அணுகுமுறையை அவரும் கற்றுக் கொள்ளலாம். இந்த வரி சீர் திருத்தம் அமலுக்கு வரும்போது அது மோடிக்கு மிகுந்த தன்னம் பிக்கையை ஏற்படுத்தும். தொழிலா ளர் சீர்திருத்தம், நில சீர்திருத்தம் உள்ளிட்டவற்றைக் கொண்டு வருவதற்கு இது அடித்தளமாக இருக்கும். இதன் மூலம் இதுவரை செயல்படுத்தப்படாமலிருக்கும் தேர்தல் வாக்குறுதியான வேலை வாய்ப்புறுதியை செயல்படுத்தவும் இது தூண்டுகோலாக அமையும்.

gurcharandas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x