Last Updated : 24 Sep, 2016 10:38 AM

 

Published : 24 Sep 2016 10:38 AM
Last Updated : 24 Sep 2016 10:38 AM

நாடக விமர்சனம்: ஒளரங்கசீப்

பள்ளிக்கூட நாட்களில் சரித்திரப் பாடம் என்றாலே எனக்கு உச்சபட்ச கசப்பு. ஒவ்வொரு தேர்விலும் பார்டரில் பாஸ் மார்க் வாங்குவதற்குள் நுரை ததும்பும். அப்படியான என் போன்ற பலரை 2 மணி நேரத்துக்கு நாற்காலியுடன் கட்டிப் போடுகிறது இந்த நாடகம். இதற்கு முக்கிய காரணம், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் புரியும்படியான இயல்பான வசனங்கள்!

கனவு காணும் ஷாஜஹான், ‘சூரியனுடைய அஸ்தமன ஒளியில் நன்றாகக் குளித்துவிட்டுத் தாஜ்மஹல் இப்போதுதான் பூத்த ஒரு புது மலர்போல் காட்சியளிக்கிறது. மும்தாஜ்! நீ இந்தக் கரையில், இந்த வெள்ளை மலரில் இருந்து கொண்டிரு. நான் அந்தப் பக்கம் அக்கரையில், ஒரு கரு மலருக்கு குடி வருகிறேன். ஆம்… ஒரு கருஞ்சலவைக் கல் மஹல். அதுதான் என் ஓய்விடமாக இருக்கப் போகிறது. இந்தக் கரையில் இருந்து நீ என்னைப் பார்.. அந்தக் கரையில் இருந்து நான் உன்னைப் பார்க்கிறேன். இப்படி இருவரும் ஒருவரையொருவர், காலம் காலமாகப் பார்த்துக்கொண்டிருப்போம்...’

மகன் தாராவும், மகள் ஜஹனாராவும், சக்கரவர்த்தியை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘தனிப்பட்டவர்களுடைய கனவுகள்தான், மனித நாகரிகத் தொடர்ச்சிக்கு காரணங்களா கின்றன. 300 ஆண்டுகள் கழித்து 2 மஹல்களை யும் பார்க்கப் போகிறவர்கள், பஞ்சத்தினால் இப்போது எவ்வளவு பேர் செத்தார்கள் என் பதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. கல்லிலே ஷாஜஹான் இரண்டு கவிதைகள் எழுதினான் என்பதுதான் அவர்கள் மனதில் நிற்கப் போகிற செய்தி. அதோ கூட்டம் கூட்டமாக எவ்வளவு பேர் இம்மஹல்களைப் பார்க்க வருகிறார்கள் என்பதை இப்போதே காண முடிகிறது..’ என்கிறார் ஷாஜஹான்.

இளவரசன் தாராவை சந்திக்க வருகிறார் மௌல்வி

‘நீங்கள்தான் கடவுள் என்று நான்கைந்து நாட்களுக்கு முன் முகம்மது ரஷித்திடம் சொன்னீர்களா’ - மௌல்வி

‘அஹம் பிரம்மாஸ்மி. தத்வமஸி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ - தாரா

‘கிஃபிர்கள் உங்களை மிகவும் கெடுத்துவிட்டார்கள் இளவரசே..’

‘யாரும் யாரையும் சுலபமாகக் கெடுத்துவிட முடியாது. ஒருவனுக்கு நன்மையும் தீமையும் பிறர் அளிக்க வருவதில்லை. கடவுளின் அடிமை நான் என்று சொல்வதைக் காட்டிலும் கடவுள் நானாக இருக்கிறார் என்று சொல்வதுதான் நேர்மையான தத்துவம்..’

‘நம் மதம் இப்படியா சொல்கிறது? எவ்வளவு செருக்கு இருந்தால் ஒரு மனிதன் தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்வான்?’

‘கடவுளின் அடிமை நான் என்று சொல்லும் போது, கடவுளுக்கு ஒரு தனி இருக்கையும், மனிதனுக்கு ஒரு தனி இருக்கையும் தனித்தனியாக தருவதுதான் செருக்கு. கடவுள் நான் என்று சொல்லும்போது, கடவுளின்றி மனிதனுக்கு இருக்கை கிடையாது என்பது தான் அர்த்தம். இதுதான் உண்மையான அடக்கம்.

இப்படி தொடங்கும் நாடகத்தில் சகோதரிகள் ஜஹனாரா - ரோஷனாராவின் வாதப்போர், தாராவின் வீழ்ச்சி, ஔரங்கசீப் எழுவது விழுவது, ஷாஜஹான் தன் கனவு நிறைவேறாமலேயே சிறைப்படுத்தப்படுவது… என்று ஔரங்கசீப் காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு சரித்திர சம்பவங்களை, அந்தந் தப் பாத்திரங்களின் துணை கொண்டு கூர்மையான வசனங்களால் கண் முன் நிறுத்துகிறார் இ.பா.

பல வருடங்களுக்குப் பிறகு நடக்கும் தாரா- ஒளரங்கசீப் இடையேயான உரையாடல் கள், நாடகத்தின் முக்கியமான கட்டங்களில் ஒன்று.

‘உன்னை நான் எத்தனை ஆண்டுகளாக வெறுத்து வருகிறேன் தெரியுமா? நம் தந்தையின் நன்னடத்தை ஜாமீனாக நாம் இருவரும் நம் பாட்டனார் அவையில் இருந்த போது உன் அறிவுக்காக, உன் அழகுக்காக, எல்லோரும் உன்னை சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஆனால், என்னை சீண்டுவார் யாருமில்லை. நம் தந்தை என்னை வேண்டாத செருப்பைப் போல வீசி எறிந்தாலும், எனக்குத் தந்தை மீது எவ்வளவு பாசம் தெரியுமா?’ என்கிறான் ஒளரங்கசீப்.

‘அவர் தன்னுடைய ரசனையின் நேர் எதிரியாகத்தான் உன்னைக் காண்கிறார். இதுவே அவர் வெறுப்புக்குக் காரணம்…’ என்கிறான் தாரா, பதிலுக்கு.

‘அழகுணர்ச்சி என்று சொல்லிக்கொண்டு, அரசாங்கத்தின் கருவூலத்தைக் காலியாக்கு வதுதான் நல்ல ரசனையா? நாட்டை ஆள்கிறவர்கள் மக்களைப் பற்றி கவலைப்படாமல் தங்களுடைய அகங்காரத் தைத் திருப்தி செய்வதற்காக, மக்களின் கஜானாவை இப்படிச் சூறையாடுவதுதான் நல்ல ரசனையா?’ என்று ஒளரங்கசீப் கேட்கும்போது, நாடகத்தின் தொடக்கத்தில் ‘பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தக் கதையை இப்போது மேடையேற்ற காரணம், இன்றைய நாட்டு நடப்புகளுக்கும் இது பொருத்தமானதாக இருப்பதால்தான்…’ என்று அறிவிப்பு செய்தது மனதில் நிழலாடியது.

தமிழ் நாடக மேடையை அடுத்த கட்டத் துக்கு எடுத்துச் செல்லும் விருப்பத்தோடு செயல்பட்டு வரும் ‘ஷ்ரத்தா’ அமைப்பு, ஒளரங்கசீப்பை மேடையேற்றும் பொறுப்பை நிஷா வி.பாலகிருஷ்ணனிடம் ‘அவுட்ஸோர்ஸ்’ செய்துவிட்டது.

கிட்டத்தட்ட ஓரங்க நாடகம் மாதிரியானது இது. படாடோபமான அரங்க மேடை கிடை யாது. பின்னால் நீலப் படுதா. முன்னால் சிறு பிளாட்ஃபார்ம். அதில் ஏறி நின்று அத்தனை பாத்திரங்களும் வசனம் பேசுகின்றன பட்டிமன்றம் மாதிரியாக. நடுநடுவே ஒலிக்கும் இசை நல்ல ரிலீஃப், காதுகளுக்கு.

எல்லா ஆண் பாத்திரங்களுக்கும் ஒரே மாதிரியான ஆடை வடிவமைப்பு. அவர்கள் பேசுவதும் ஒரே ரீதியில்தான். கண்கொத்திப் பாம்பு மாதிரியாக கவனித்தால் ஒழிய, ஷாஜஹான் தாரா ஒளரங்கசீப் யார் என்பதை வித்தியாசப்படுத்துவது கடினம். விதிவிலக்கு, கணீர்க் குரல் ரோஷனாரா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x