Published : 09 Aug 2016 12:08 PM
Last Updated : 09 Aug 2016 12:08 PM

சிலை சிலையாம் காரணமாம் - 24: பொன்னை விட கல்லுக்கே மதிப்பு!

நாகப்பட்டினம் புத்த விகாரைகளில் அற்புதமான புத்தர் சிலைகள் இருந்தன. அவை அனைத்தும் 1856-ல் இருந்து 1934 வரையிலான கால கட்டத்தில் அங்கிருந்து கடத்தப்பட்டுவிட்டன. அங்கிருந்த சுமார் 350 புத்தர் சிலைகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் சென்னை மியூசியத்தின் பொறுப்பில் உள்ளன. எஞ்சியவை இந்தியாவின் பல பகுதிக ளுக்கும் பாகிஸ்தான், இலங்கை, பர்மா உள்ளிட்ட நாடுகளுக்கும் நகர்த்தப்பட்டன. இந்தப் புத்தர் சிலைகளை ஜப்பானைச் சேர்ந்த ராக்பெல்லர் உள்ளிட்ட செல் வந்தர்கள் தங்களது காட்சிக் கூடங்களில் வைத்திருப்பதாக பிரபல கல்வெட்டு ஆய்வாளர் வை.சுப்பராயலு 1993-ல் பதிவு செய்திருக்கிறார்.

1992-ல் டோக்கியோவில் ராக்பெல்லர் கலைப் பொருள் கண்காட்சி ஒன்றை நடத்தினார். அதில் பார்வையாளராகக் கலந்துகொண்ட சுப்பராயலு, அங்கே தாமரை பீடத்தில் அமர்ந்த புத்தர் சிலை ஒன்றையும் பார்த்தார். தாமரை பீடத்தில் சோழர் காலத்து தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அது நாகை புத்த விகாரையில் இருந்த புத்தர் என்பதற்கு இந்த ஆதாரம் ஒன்றே போதும் என்கிறார் சுப்பராயலு.

பொன்னை விட கல்லுக்கே மதிப்பு

எப்போதாவது, எங்காவது கடத்தல் ஐம்பொன் சிலைகள் பிடிபடும்போது தங்களின் பராக்கிரமத்தைப் பதிவுசெய் வதற்காக ‘விலை மதிப்பெற்ற ஐம்பொன் சிலைகள் பிடிபட்டன’ என்று போலீஸ் விளம்பர வெளிச்சம் பாய்ச்சுகிறது. உண் மையில், ஐம்பொன் சிலைகளை விட கற்சிலைகள்தான் விலை மதிக்க முடி யாதவை. இன்றைக்கு நினைத்தால் ஐம்பொன் சிலைகளை அச்சுகள் மூலம் வார்த்தெடுத்துவிட முடியும்.

கற்சிலைகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலை அம்சத்துடன் செதுக்குவதற்கு சிற்பிகள் இருக்கிறார்களா என்பதே சந்தேகம் தான். ஆனால், ஐம்பொன் சிலைக ளுக்கு தரும் முக்கியத்துவத்தை கற்சிலை களுக்கு போலீஸ் உட்பட யாருமே தருவ தில்லை. ‘கற்சிலை தானே’ என்று உதாசீனப் படுத்துகிறார்கள். அதேசமயம், கடத்தல் சந்தையில் இருப்பவர்கள் கற்சிலை களின் மகத்துவத்தை தெரி ந்துவைத்திருக்கி றார்கள். அதனால்தான் உடைந்த சிலையாக இருந்தாலும் லட்சங்களைக் கொடுத்து கடத்துகிறார்கள்.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான செய்தியைச் சொல்லியாக வேண்டும். தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி) பிரிவுக்கு என தனியாக இணையதளம் உள்ளது. கடத்தப்பட்டு பிடிபட்ட சிலைகள் பற்றிய சில விவரங்கள் இந்த இணைய தளத்தில் உள்ளன. ஆனால், அந்தச் சிலைகளைக் கடத்திய கடத்தல் மன்னர் களின் படங்கள் எதுவும் அதில் இடம்பெற்று விடக்கூடாது என்பதில் அதிக சிரத்தை எடுத்திருக்கிறார்கள். தீனதயாள், சுபாஷ் கபூர், லெட்சுமிநரசிம்மன், சஞ்சீவி அசோகன் உள்ளிட்ட யாருடைய புகைப்படமும் அதில் இல்லை.

கடத்தல் புள்ளிகளின் அரசியல் பின்புலம் குறித்து சிலைக்கடத்தல் பிரிவில் பணியாற்றிய காவலர் ஒருவர் நம்மிடம் பேசினார். ‘‘சிலைக் கடத்தல் சந்தையில் இருப்பவர்களுக்கு பலமான அரசியல் பின்னணியும் இருக்கிறது. இது தெரியாமல் கீழ்மட்ட போலீஸ் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், ‘ஏம்பா.. நாங்க நிம்மதியா இருக்க றது பிடிக்கலையா?’ என்று உயரதிகாரிகள் போனைப் போட்டு வசவுவார்கள். எனது அனுபவத்தில் பல சம்பவங்கள் இப்படி நடந்திருக்கின்றன.

கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட பல அரிய சிலைகளை சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் தங்கள் வீட்டு வரவேற்பு அறையில் கலைப் பொருளாக வைத்திருக்கிறார்கள். அதைத் தொட்டால் எங்களுக்கு ’ஷாக்’ அடிக்கும். கலைப் பொருள் வியாபாரிகளான கேரளத்தின் லாரன்ஸ், பெங்களூரு நடேசன் உள்ளிட் டோரிடம் ஏராளமான கோயில் சிலைகள் உள்ளன. விஜய் மல்லையாவின் ஹைதரா பாத் பங்களாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சிலைகள் உள்ளன. சென்னையிலேயே பல பிரபலங்களின் வீடுகளில் திருட்டு சிலைகள் கலைப் பொருளாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் யாரும் தொடமுடியாது.

சஞ்சீவியை தப்ப வைத்த போலீஸ்

கபூரின் கூட்டாளி சஞ்சீவி அசோகனை கேரளத்தில் கைது செய்ததாக போலீஸ் பதிவுசெய்திருக்கிறது. ஆனால், உண்மை யில் என்ன நடந்தது தெரியுமா?

சிவபுரந்தான் சிலைகள் திருட்டு நடந்த சில நாட்களிலேயே, அந்தத் திருட்டில் சம்பந்தப்பட்ட ரத்தினம், சிவகுமார் இருவரை மட்டும் பிடித்துவிட்டது போலீஸ். அதற்குள்ளாக அந்தச் சிலைகள் சஞ்சீவி அசோகன் கைக்கு போய்விட்டன.

ஒரிஜினல் சிலைகளுக்கு பதிலாக போலியான சிலைகளைப் பிடிபட்ட இருவரும் தயார் செய்துவிட்டார்கள். அந்தச் சிலைகளையும் பிடிபட்ட நபர்களின் படத்தையும் பத்திரிகைகளில் வெளியிட்டது போலீஸ். இதைப் பார்த்துவிட்டு அந்தச் சிலைகளை செய்துகொடுத்த சுவாமிமலை ஸ்தபதி ஒருவர், ‘‘நான் செய்துகொடுத்த சிலையை கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலை என்கிறார்களே’’ என்று பதறிப் போய் போலீஸுக்கு ஓடினார். அவரை அப்படியே சமாதானப்படுத்திவிட்டது போலீஸ்.

அந்த சமயத்தில் சஞ்சீவி அசோகன் போலீஸ் பிடியில் இருந்தார். அவரை தனியார் விடுதியில் தங்கவைத்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த காவல் துறையினர், அங்கே அவருக்கு வசதிக் குறைவாக இருப்பதாகச் சொல்லி, கோயம்பேடில் உள்ள இன்னொரு சொகுசு விடுதிக்கு இடமாறுதல் செய்து கொடுத் தார்கள். கடைசிவரை, சஞ்சீவியை கைது செய்யாமல் வைத்திருந்த கண்ணியமிக்க காவல்துறை கனவான்கள் கடைசியாக, விசாரணையில் இருந்தபோது விடுதியில் இருந்து சஞ்சீவி அசோகன் தப்பிவிட்டதாக கணக்கை நேர்செய்தார்கள்.

இதற்காக மட்டுமே அப்போது உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 25 லட்ச ரூபாய் கைமாறியதாம். சஞ்சீவி அசோ கனை இப்படி வசதியாக தப்பிக்க வைத்து விட்டு, பிறகு கட்டாயம் ஏற்பட்டதால் ஒன்றரை ஆண்டுகள் கழித்து அவரை கைது செய்தார்கள். அதற்குள்ளாக கடத்தல் சிலைகள் அனைத்தையும் பத்திரமாக கபூர் கைக்குக்குக் கொண்டுபோய் காசு பார்த்துவிட்டார் அவர். எல்லா வேலை களையும் செய்து முடித்த பிறகு போன் போட்டு வரச்சொல்லித்தான் சஞ்சீவியை கைதுசெய்துவிட்டு, கேரளத்திற்கு துரத்திப் போய் கைதுசெய்ததாக வழக்கம்போல டைரி எழுதினார்கள்’’ என்று சொன்னார் அந்த காவலர்.

- சிலைகள் பேசும்…

முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 23: செப்பேடுகளின் நிலை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x