Last Updated : 25 Feb, 2017 01:11 PM

 

Published : 25 Feb 2017 01:11 PM
Last Updated : 25 Feb 2017 01:11 PM

புது எழுத்து | மனுஷி பாரதி - பெண் குரல்

எழுத்தின் மீதான ஒரு எழுத்தாளரின் காதலால் மட்டுமே வாசகர்கள் உலகத்தில் பட்டாம்பூச்சிகளை பறக்கவிட முடியும். அந்தப் பட்டாம்பூச்சிகள் நம்மை இந்த அவசர உலகத்திலிருந்து மீட்டு நாம் நாமாக இருந்த நாட்களையும், நாம் சொல்லாத ரகசியங்களையும், நம்மால் புதைக்கப்பட்ட கனவுகளையும் நம் முன் நிழற்படங்களாய் ஓடவிடும்.

இத்தகைய உணர்வை வாசகர்களிடத்தில் உணரச் செய்ய, எழுத்துக்கள் இயல்பை நோக்கி பயணம் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

இந்தப் பயணத்தை நிதானமாக நவீன எழுத்துலகில் எடுத்து வைத்திருக்கிறார் மனுஷி பாரதி.

நவீன இலக்கிய உலகில் பெண்களுக்கான கனவுகள், அவர்களின் உணர்வுகள் அவர்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளை தனது கவிதைகள் வாயிலாகவும், சிறுகதைகள் வாயிலாகவும் பிரதிப்பலித்து வரும் இளம் படைப்பாளியான மனுஷி பாரதியுடனான நேர்காணல்,

"என்னுடைய சொந்த ஊர் விழப்புரம் மாவட்டம் திருநாவலூர். அங்குதான் பள்ளி பருவத்தை முடிதேன். இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் என்னுடைய கல்லூரிப் பயணம் தொடர்ந்தது, இன்றும் தொடர்கிறது.

சிறுவயதிலிருந்தே எழுத்தின் மீது ஈடுபாடு இருந்தது. எங்க குடும்பத்தில் முதல் பட்டதாரி பெண் நான். அதேபோல எந்த இலக்கியப் பின்புலமும் கிடையாது. எந்த இயக்கப் பின்புலமும் கிடையாது. எனது அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனது வாழ்க்கையில் திடீரென வந்துவிட்ட தனிமையைப் புத்தகங்கள் தான் சரி செய்தன. நான் வாசித்த கதைகள் தான் இப்போது நான் எழுதுவதற்கு அடித்தளமாக அமைந்தன.

என்னுடைய எழுத்துப் பயணம் என்பது 2008-ம் ஆம் ஆண்டிலிருந்துதான் தொடங்கியது. உண்மையைக் கூற வேண்டும் என்றால் அப்போதிலிருந்துதான் நான் எழுதியதை சேகரித்து வைக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்னர் எழுதியதை எதையும் நான் சேகரித்து வைக்கவில்லை.

என்னுடைய எழுத்துக்கள் எல்லாம் புத்தகங்களாக வரும் என்ற எண்ணமோ, திட்டமோ எனக்கு இருந்தது இல்லை என்று கூறும் மனுஷியிடம் எழுத்தை களமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது என்று கேட்டேன்,

நான் புதுச்சேரி பல்கலைகழகத்தில் எம். ஏ படித்துக் கொண்டிருக்கும்போது தமிழ் இலக்கியப் பாடம் தவிரவும் விருப்பப் பாடமாக நாடகத்தைத் தேர்வு செய்தேன். இதனால் பல்வேறு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அப்போது டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திய மொழியியல் ஆய்வுப் பிரிவின் துறைத் தலைவர் ரவீந்திரன், என் நடிப்பை வெகுவாகப் பாரட்டினார்.

என்னுடைய வாசிப்பைப் பற்றியும், எழுத்தைப் பற்றியும் அவர் கேட்டார், அப்போதுதான் முதல் முதலாக என்னுடைய எழுத்துகள் பொதிந்திருந்த டைரியை அவரிடம் காட்டினேன்,

அவர் அனைத்தையும் படித்துவிட்டு இதனை புத்தகமாக பப்ளிஷ் செய்யலாமே என்று கூறினார். அப்போதுதான் எனது எழுத்துக்கான அங்கீகாரம் இருக்கிறது என தோன்றியது.

அதன் பிறகுதான், நான் ஒவ்வொரு பதிப்பகமாக அணுக ஆரம்பித்தேன் என்று எழுத்துப் பயணத்தை தனது கவிதைகள் போலவே ஆழமாக விவரித்துக் கொண்டிருக்கும் மனுஷி தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாரதியாரும் தாகூரும் என்னும் தலைப்பில் முனனவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவருகிறார்.

“பதிப்பகங்கள் தேடுதலில் இறுதியாக என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான 'குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்' 2013-ம் ஆண்டு மித்ரா பதிப்பகம் வெளியிட்டது. அதற்கு முன்னர் நான் எந்தப் பத்திரிகையிலும் எழுதியது கிடையாது. ஆன்லைன் இணைய தளங்களான கீற்று.காம், மலைகள்.காம் போன்றவற்றில் மட்டுமே எனது படைப்புகள் வரும். புத்தக வடிவில் எனது கவிதைகளை கண்டது மகிழ்ச்சியாக இருந்தது.

விமர்சகர் வெங்கட் சாமிநாதன் கணையாழியில் 'குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்' குறித்து மதிப்புரை ஒன்றை எழுதியிருந்தார். அந்த மதிப்புரையை வாசித்த பிறகு நிறைய பேர் அந்தப் புத்தகத்தைத் தேடிப் படிக்க ஆரம்பித்தார்கள்.

இதன் மூலம் வாசகர்களின் அங்கீகாரம் கிடைத்தது. வாசகர்கள் தந்த அதே உற்சாகத்தோடு எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'முத்தங்களின் கடவுள்' 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது.

2015 ஆம் ஆண்டு 'ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்' வெளிவந்துள்ளது" என்றவரிடம் மனுஷி பாரதி உங்களது இயற்பெயரா? அல்லது.. என முடிக்கும் முன்பே இல்லை என்று அவர் தொடர்ந்தார்.

"என்னுடைய இயற்பெயர் ஜெயபாரதி. மனுஷி என்று பெயர் வைக்கக் காரணம். நான் ஒரு பெண்ணாக இந்தச் சமூகத்தில் எல்லா உரிமைகளும் இருக்கும் என்பதை உணர்த்துவதற்குதான்.

ஏனெனில் பொதுவாக பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட கோட்பாட்டின்படி, சாதாரணமாக பேசும்போது கூட ஒருத்தன், அவன், மனிதன், கவிஞர் என்று ஆண்பாலை முன்னிருத்திதான் பேசுவோம் இல்லையா?

அந்த கோட்பாட்டை உடைப்பதற்காக பாரதியுடன் மனுஷியை முதலில் இணைந்துக் கொண்டேன்" என்ற தனது பெயருக்கான காரணம் மாஸ்டர் கிளாஸ் பதிலை முன்வைத்த மனுஷி பாரதியின் இரண்டாவது படைப்பான 'முத்தங்களின் கடவுள்' தொகுப்பாக சென்னை இலக்கியக் கழகம் இளம்படைபாளி விருதினை வழங்கி சிறப்பு செய்துள்ளது.

மனுஷியின் கவிதைகள் மனிதம், சாதி, சமூகப் பிரச்சினைகள் பேசுகிறது. காதலைப் பேசுகிறது, நட்பினையும் பேசுகிறது.

மனுஷியின் கவிதைத் தொகுப்பில் பெண்களுக்கு இச்சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களையும் சொல்லும்விதம் உணர்வுப்பூர்வமானது.

'ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகளில்' நிர்பயாக்களின் தேசம் என்ற தலைப்பில் மனுஷி எழுதிய கவிதை

நிர்பயாக்கள்

எப்போதும் பயமற்றவர்கள்

அவர்கள்

வாழ்தலுக்கான போராட்டத்தில்

மரணத்தைச் சுவைத்தவர்கள்

இது நிர்பயாக்கள் தேசம்

நிர்பயாக்கள் உருவாக்கப்படும் தேசம்…

பெண்கள் மீதான் அடக்குமுறைகள் குறித்து, அவமதிப்பல்ல! ஆசுவாசம்! என்ற தலைப்பில்

எனது இடது கால் மீது

வலது கால் போட்டு அமர்ந்தது

திமிரினாலோ

கர்வத்தினாலோ அல்ல

நீங்கள்

பதற்றப்பட வேண்டாம்.

இது நாகரிகம் இல்லை

என்று சொன்னால்

உங்கள் நாகரிகத்தை நான் வெறுக்கிறேன்.

இது ஒழுகீனம் எனச் சீறினால்

ஒழுங்கீனமானவளாகவே இருக்க விரும்புகிறேன்….

நான் சமைலறையை விட்டு

இப்போதுதான்

வெளியே வந்திருக்கிறேன்.

கோலம் போடுவதற்காகவோ

குப்பை கொட்டுவதற்காகவோ

தண்ணீர் எடுப்பதற்காகவோ அன்றி

வேறொரு காரணத்திற்காக

இப்போது தான் வெளியேவந்திருக்கிறேன்…. என்று தொடரும் மனுஷியின் கவிதை நிச்சயம் நமக்கான குரலாகவே ஒருமித்து கேட்கிறது.

கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து , பிடிவாதம், அம்மாவின் காதல், கா கா கா, டைகர், தீபாவளி டிரெஸ், இட்லிக்கடை, காதல் பிசாசு, மீன் தொட்டி போன்ற சிறுகதைப் படைப்புகளை வெளியீட்டுள்ள மனுஷி பாரதியிடம் உங்களுக்கு கிடைத்த மறக்கமுடியாத பாராட்டு என்று கேட்டபோது,

"என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு முதலில் கிடைத்தவுடன் புதுச்சேரியில் பிரபல கவிஞர் ரமேஷ் பிரேதனிடம் எடுத்துச் சென்று கட்டினேன். அவர் அப்போது ஏதும் என்னிடம் கூறவில்லை. ஒருமணி நேரம் கழித்து என்னை தொலைப்பேசியில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார். ஒரு கவிதை தொகுப்பு சிறப்பாக இருப்பதற்கு ஒரு கவிதை போதும்.

நிறைய தரமான கவிதைகள் உன் தொகுப்பில் உள்ளது. உனக்கென்று இலக்கிய உலகில் சிறந்த எதிர்காலம் உண்டு என்று கூறியது கிடைத்த பெரிய பாராட்டாக இருந்தது.

அடுத்த நாள் என்னை அவரது இல்லத்துக்கு அழைத்து மீன் குழம்பு சமைத்துக் கொடுத்து என்னை நெகிழச் செய்துவிட்டார்.

வாசகர்களின் பாராட்டு பற்றி கூற வேண்டும் என்றால், என்னுடைய கவிதைகளை நிறைய பேர் படித்து முகநூலில் எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.

மறக்க முடியாத பாராட்டு என்றால் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான 'குட்டி இளவரசியின் ஒளிச் சொற்களை' கடையில் பிரிண்ட் அவுட் எடுப்பதற்காக காத்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கடையில் வேலை செய்தவர் எனது கவிதையைப் படித்துவிட்டு பாராட்டியதுதான். தொகுப்பிலிருந்து வாழ்வதில் ஒன்றுமில்லை என்ற தலைப்பிலிருந்த கவிதையை எடுத்துக் கொள்ளவும் அனுமதியும் கேட்டார். அவரது அந்தப் பாராட்டு எல்லாவற்றையும் விட சிறந்தது"

இலக்கில் உலகில் உங்களைக் கவர்ந்த படைப்பாளிகள், பெண் படைப்பாளிகள் பற்றி, கேட்டபோது,

"எனக்குப் பிடித்த, என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் என்று கூறினால் மலையாளத்தில் கமலாதாஸ், பஷீர், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. பங்களாதேஷின் தஸ்லீமா நஸ்ரின் தான் என்னுடைய ஆதர்சக் கவிஞர்கள். இவர்கள் தவிர பாப்லோ நெருடா கவிதைகள், ரூமி கவிதைகள், மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள், சில்வியா ப்ளாத் கவிதைகள் எல்லாம் எப்போதும் பிடிக்கும். பெண் படைப்பாளிகளில் கவிஞர் இளம்பிறையின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். அதற்கடுத்து குட்டி ரேவதி, லீனா மணிமேகலை மிகவும் பிடித்தமானவர்கள்.

உங்களை புதுப்பித்துக் கொள்ள உதவும் வாசிப்புகள், பிடித்த நூல்கள் என்றால் எதைக் கூறுவீர்கள், "மொழிபெயர்ப்புக் கவிதைகளும் சிறுகதைகளும் அதிகம் வாசிப்பேன். நாவல் வாசிப்பு கொஞ்சம் குறைந்துவிட்டது என்னிடம்.

முன்பெல்லாம் நாவல்கள் அதிகம் வாசிப்பேன். பிடித்த புத்தகங்கள் என்றால் 'சிதம்பர நினைவுகள்' - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, பாவ்லோ கோலோவின் 'பதினோரு நிமிடங்கள்', டோட்டோசானின் 'ஜன்னலில் ஒரு சிறுமி', தமிழில் என்றால் பிரபஞ்சன் சிறுகதைகள், எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் அடிக்கடி வாசிப்பேன்.

எப்போதும் எனது வாசிப்பில் என்னைப் புதுப்பித்துக் கொள்வது, பாரதியின் எழுத்துகள் மற்றும் பெரியாரின் எழுத்துகளிலும் தான்.

பிடித்த நூல்கள் அடிக்கடி வாசிக்க விரும்பும் நூல்களை இப்போது எனது நினைவில் இருந்தவற்றைச் சொல்கிறேன். கோட்பாட்டைப் பொறுத்தவரை பிரெஞ்சு பெண்ணியவாதி சிமோன் தெ பவார் எழுதிய 'பெண் எனும் இரண்டாம் இனம்' எனும் நூல் எனக்குத் திருமறை போல" என்று நீண்ட மனுஷியின் பட்டியலில் அடிக்கடி வாசிக்கும் நூல்களாக 'ஆத்மாநாம் கவிதைகள்' மற்றும் அந்த்வான் து வசந்த் எக்சுபெரியின் 'குட்டி இளவரசனு'ம் உள்ளன.

நவீன இலக்கிய உலகில் பெண்களுக்கான களமும் எவ்வாறு எனக் கேட்க "நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை பெண்கள் எழுதுவதற்கான நிறைய களங்கள் உள்ளன. ஏனெனில் நமது வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. வாழ்க்கை குறித்தான மதிப்பீடுகள் மாறியிருக்கின்றன. எனவே இதுகுறித்து எழுத நிறைய இருக்கிறது.

தற்போது பெண்கள் அதிகம் வெளியேவர ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு புதிதாக உருவாகியுள்ள இரட்டைச் சுமை சார்ந்த உளவியல் சிக்கல்கள் எல்லாம் எழுதப்பட வேண்டிய களங்களாக உள்ளன. ஆனால் இதனை எத்தனை பேர் காத்திரமாக எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை.

அதுமட்டுமில்லாது அனைவரும் கவிதையை ஒரு களமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதில் தவறு இல்லை. ஆனால் கதை உலகத்தோடு பெண் எழுத்தாளர்களும், கவிஞர்களும் பயணித்தால் பல்வேறு களங்களை சென்று அடைய முடியும்" என்றும் கூறும் மனுஷி பாரதிக்கு எதிர்காலத்தில் நாவல்கள் எழுதும் எண்ணமும் உள்ளது.

எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு எழுதவரும் புதியவர்களுக்கு உங்களது அனுபவுரை..... " நானே இலக்கிய உலகுக்கு புதியவள்தான். இருப்பினும் எழுத்தை நேசிபவர்களுக்காக நான் கூறும் சிறயவுரை இதுதான், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள் அது அரசியல் சார்ந்ததாகவோ, சமூகப் பிரச்சினை சார்ந்ததாகவோ இருக்கலாம். அதற்கான சிறிய எதிர்வினையை உருவாக்குங்கள். வாசிப்பு அதற்கான பக்குவத்தை அளிக்கும் என்று நம்புகிறேன் தொடர்ந்து வாசியுங்கள்... இயங்குங்கள்"

தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்க உங்களது குடும்பத்தினரின் ஒத்துழைப்புப் பற்றி கூறுகளேன், "குடும்பத்தின் ஒத்துழைப்பு எனக்கு இருந்ததில்லை அதுதான் உண்மை. மனுஷி என்ற பெயரில் நான் எழுதுவது கூட அவர்களுக்கு தெரியாது. அவர்களை குற்றம் சொல்லவும் நான் விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை எனது நண்பர்கள் தரும் உற்சாகம்தான் என்னை அடுத்தக் கட்டத்தை நோக்கி அழைத்து செல்கிறது"

பெண்கள் மீதான குடும்பத்தின் பார்வையில் மாற்றம் வர வேண்டும் அதனை பற்றிய உங்கள் பார்வை, "நிச்சயமாக மாற்றம் வேண்டும். பெண்களுக்கு குடும்பம் சார்ந்த ஒத்துழைப்பு மிக அவசியம். குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லை என்ற காரணத்தினால் பலரை எழுதவிடாமல் தடுக்கிறது. இன்றைய எழுத்துலகில் இயங்கும் பல பெண் எழுத்தாளர்கள் அவர்களது குடும்பத் தேவையை நிறைவேற்றிவிட்டு, கிடைக்கும் நேரங்களில் தங்களது படைப்புகளை உருவாக்குகின்றனர். இந்தப் பிரச்சினை ஆண் எழுத்தாளர்களுக்கு கிடையாது என்றே நினைக்கிறேன். குடும்பத்தின் ஒத்துழைப்பு இருந்தால் மறைந்து கொண்டு இருக்கும் பல பெண்கள் வெளியே வருவார்கள்" என்று பல பெண்களின் நிலையை போட்டு உடைத்த மனுஷியின் அடுத்தக் கட்ட பயணமும் சமூக நோக்கம் கொண்டதாகவே உள்ளது.

இதோ தனது அடுத்தக் கட்ட பயணத்தை நம்மிடையே மனுஷியே விவரிக்கிறார், "நான் தற்போது குழந்தைகளுடன் கொஞ்சம் பயணம் மேற்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த கொஞ்ச நேரத்தை அதிக நேரமாக மாற்றுவதே என்னுடைய அடுத்தக் கட்ட பயணம்.

குழந்தை இலக்கியங்கள் அதிகம் கவனம் பெற வேண்டும். பெரியர்வர்களின் மன நிலையிலிருந்து எழுதப்படுகிற இலக்கியங்கள் இல்லாமல் குழந்தைகளின் உலகம் சார்ந்து, இன்று இருக்கக்கூடிய உலகத்தில் அவர்களுக்கான நெருக்கடிகள் பற்றி எழுத இருக்கிறேன்” என்று விடை பெற்றார்.

மனுஷி தனது மூன்றாவது கவிதைத் தொகுப்பான 'ஆதிக் காதலின் நினைவுக் குறிப்பில்', சிறகு விரிக்கும் கனவுகளோடு அடுப்படிக்குள் முடங்கிக் கிடக்கும் மாயாக்களுக்கு என்று குறிப்பிட்டிருப்பார்.

அதைப் போலவே தொடர்ந்து மாயாக்களுக்காக எழுதிக் கொண்டிருக்கும் மனுஷி பாரதியின் கனவுகள் நிறைவேற மாயாக்களில் ஒருத்தியாக எனது வாழ்த்துகள்.

மனுஷி பாரதியின் படைப்புகள்:

குட்டி இளவரசியின் ஒளிச் சொற்கள் - மித்ரா பதிப்பகம் | முத்தங்களின் கடவுள் - உயிர்மை பதிப்பகம் | ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்.

முந்தைய அத்தியாயம் > > புது எழுத்து: ஆர். அபிலாஷ் - வாசகனின் தோழன்

தொடர்புக்கு > indumathy.g@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x