Published : 30 Apr 2017 03:31 PM
Last Updated : 30 Apr 2017 03:31 PM
அறுபதுகளில் கிராமத்து ஆரம்பப் பள்ளிக் கூடங்களில் நீதிபோதனை வகுப்புகள் என்றே தனியாக இருந்தன. பெரும்பாலும் கடைசி வகுப்பு நீதிபோதனை வகுப்பாகத்தான் இருக்கும். இந்த வகுப்புகளில் கேட்ட கதைகளை ஆயுளுக்கும் மறக்க முடியவில்லை. ஆசிரியர் மரியசூசைதான் கதை சொல்ல வருவார். அவர் மாதிரி கதை சொல்ல யாராலும் முடியாது.
ஏழைப் புலவரும் கோபக்கார ஜமீன்தாரும்
‘ஏழை சொல் அம்பலம் ஏறாது தெரியுமா?’ என்று ஆரம்பித்தார் மரிய சூசை சார். இப்படித்தான் கதைகள் ஆரம்பமாகும்.
ஒரு ஊரில் புலவர் ஒருவர் இருந்தார். அவர் பரம ஏழை. அவருக்குச் செய்யுள் இயற்றத்தான் தெரியும்.. வேறு ஒன்றும் தெரியாது. மற்ற புலவர்கள், அந்த ஊர் ஜமீன்தாரைப் புகழ்ந்து பாடிப் பரிசுகள் பெற்று வளமாக வாழ்ந்தனர். புலவர் வீட்டு அடுப்பில் பூனை தூங்கியது, மனைவி தினந்தோறும் ‘உங்களிடம் வாக்கு வன்மை கிடையாது’ என்று இடித்துரைப்பாள். ஜமீன்தாரைச் சந்திப்பது வேறு அத்தனை எளிதாக இருக்காது. சந்தித்தாலும், பாடல் பாடி அவரைச் சந்தோஷப்படுத்துவது கடினம். ஆனால், மனைவியின் தொல்லையும் வீட்டின் வறுமையும் அவரைத் துணிவுகொள்ளச் செய்தன. இரவெல்லாம் கண் விழித்து, ஜமீன்தாரைப் புகழ்ந்து சுவடியில் எழுதி எடுத்துக்கொண்டு அரண்மனை போய்ச் சேர்ந்தார்.
உயிர் பெற்ற சித்திரம்
புலவர் போன நேரம் ஜமீன்தார் குளிக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்.
‘‘ஓ... புலவரா? இதுவரை உம்மை நான் பார்த்ததே கிடையாதே. கொஞ்சம் இருங்கள். குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்’’ என்று சொல்லிவிட்டு, விரலிலிருந்து ரத்தினக் கல் பதித்த மோதிரத்தைக் கழற்றி, புலவர் முன் இருந்த இருக்கையில் வைத்துவிட்டுச் சென்றார்.
மோதிரத்தின் அழகு கண்ணைப் பறித்தது. புலவர் அமர்ந்திருந்த கூடமே வெகு நேர்த்தியாக இருந்தது. கூடத்தின் சுவர்களை அழகிய ஓவியங்கள் அலங்கரித்திருந்தன. அதில் ஓர் ஓவியம். மரங்கள் சூழ்ந்த ஒரு சிற்றோடை. அதன் கரையில் ஒரு கொக்கு அப்படியே தத்ரூபமாக இருக்கிறது. அப்போது ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது.
சித்திரத்தில் இருந்த கொக்கு உயிர்பெற்று, படபடவென்று சிறகுகளை அடித்தபடி பறந்து வந்தது. ஜமீன்தார் கழற்றி வைத்திருந்த மோதிரத்தை ‘லபக்’கென்று விழுங்கிவிட்டு, மறுபடி பறந்துபோய் ஓவியமாக உட்கார்ந்துகொண்டது!
குளித்துவிட்டு வந்த ஜமீன்தார், இருக்கையில் மோதிரத்தைத் தேடினார்.
“புலவரே! இங்கே நான் கழற்றிவைத்த மோதிரம் எங்கே?’’ என்று கேட்டார்.
“மகாராஜா.. அதோ அந்த சித்திரத்திலிருக்கும் கொக்கு மோதிரத்தை விழுங்கிவிட்டு மறுபடி சித்திரமாகிவிட்டது.”
ஜமீன்தார் ‘ஹா.. ஹா.. ஹா..வென்று சிரித்தார்.
“நீர் சொல்வதைக் கேட்டுச் சிரிப்பு வருகிறது. நீர் படித்தவர்தானே? பாடல்கள் புனையும் புலவர்தானே? கற்பனையில்கூட இப்படி நடக்காதே..”
“நான் சொல்வது சத்தியம்.. சித்திரத்தில் இருந்த கொக்குதான்...”
“நிறுத்தும்..” - ஜமீன்தார் உறுமினார்.
“ஏன் இப்படிப் பொய் சொல்கிறீர்.. உண்மையை வரவழைப்பது எப்படி என்று எமக்குத் தெரியும்.”
புலவருக்கும் தெரியும். கசையடிதான்! அடித்தாலும் என்ன பயன்? ஜமீன்தாரின் கண்கள் சிவந்தன.. மீசை துடித்தது.
“சரி.. அப்படியே இருக்கட்டும். நீர் உண்மையான கவியானால், அந்த சித்திரக் கொக்கை மோதிரத்தைத் தருமாறு கேட்டுக் கவி பாடும் பார்க்கலாம்!”
புலவர் பரிதாபமாக கொக்கைப் பார்த்துப் பாடினார்.
‘‘சித்திரத்துக் கொக்கே
ரத்தினத்தைக் கக்கேன்!”
என்ன ஆச்சரியம்! கொக்கு உயிர்பெற்றுப் ‘படபட’வென்று சிறகடித்துப் பறந்துவந்து ஜமீன்தார் முன் ரத்தினத்தைக் கக்கிவிட்டு மறுபடி சித்திரமாகிவிட்டது. ஜமீன்தார் வாய் பிளந்தார். இதைத்தான் ‘நமக்கு நேரம் நன்றாக இருந்தால், சித்திரத்துக்கும் உயிர் வரும்’ என்பார்கள்!
“அப்புறம் என்ன சார் ஆச்சு?’’ கோரஸாகக் கேட்டோம். “ஜமீன்தார் மகிழ்ந்து புலவருக்குப் பரிசுகள் கொடுத்து அனுப்பிவைத்தார். புலவர் நிம்மதியாக வீடுவந்து சேர்ந்தார். ஆனால், கொக்கு எப்படி உயிர்பெற்றது என்பது மட்டும் அவருக்குக் கடைசிவரை புரியவில்லை!’’
- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
ஓவியம்: வெங்கி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT