Published : 21 Jun 2016 04:55 PM
Last Updated : 21 Jun 2016 04:55 PM
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு தனித்திறமை இருக்கும். அந்த திறமையை கண்டறிந்து பெற்றோர்கள் நெறிப்படுத்தும்போது அவர்கள் குழந்தை நட்சத்திரங்களாக உருவாகின்றனர்.
ஆனால், அன்றாடம் பிழைப்புக்கே வழி தெரியாமல் தவிக்கும் பெற்றோருக்கு, குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுகூட மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளின் தனித்திறமைகளை அங்கீகரிக்க முடியாது. பல நேரங்களில் தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது.
இயலாமையால் பல குழந்தைகளின் திறமைகள் சாவிகள் தொலைக்கப்பட்ட பெட்டகம் போல் ஆகிவிடுகிறது. அப்படிப்பட்ட சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வேலையைச் செய்து வருகிறது நாலந்தாவே ஃபவுண்டேஷன்.
அதன் அங்கமாக கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே சென்னை சில்ட்ரன்ஸ் கோயர். சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு, மாநகராட்சிப் பள்ளிகள், பார்வை சவால் கொண்டவர்கள், ஆட்டிஸம் பாதித்தவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளில் நல்ல குரல் வளம் மிக்க குழந்தைகள் 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது குரல் வளத்தை மேம்படுத்த முறையான பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது அவர்கள் பிரபலமான குழந்தைகள் சினிமாவில் உள்ள பிரபல பாடல்களை கோத்து பாமாலையாக படைத்துள்ளனர். தமிழ் மட்டுமல்ல இந்தி, வங்காளம், உருது, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் உச்சரிப்பு சற்றும் பிசகாமல் பாடும் திறன் கொண்டிருக்கிறார்கள் இக்குழந்தைகள்.
இந்த பாடும் வானம்பாடிகளின் இன்னிசையை ரசிக்க...
இது குறித்து நாலந்தாவே ஃபவுண்டேஷன் நிறுவனர் ஸ்ரீராம் ஐயர் நம்மிடம் கூறும்போது, "திறமைசாலி குழந்தைகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஊக்கவிக்கவும், ஆதரிக்கவும் சரியான கருவி தேவை. அந்த கருவியாக நாலந்தாவே ஃபவுண்டேஷன் செயல்படுகிறது. எந்தச் சூழலிலும் ஒரு குழந்தையின் திறமை தடைபட்டுவிடக்கூடாது. அதன் காரணமாகவே வாய்ப்பற்றவர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறோம்.
குடிசைவாழ் பகுதியில் இருக்கும் ஒரு குழந்தையின் அடையாளத்தை கண்டுகொண்டு சரியான பாதையில் ஊக்குவித்தால்போதும் அந்தக் குழந்தை அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தூண்டுகோலாக இருப்பார். இதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
சென்னை சில்ட்ரன்ஸ் கோயரில் பார்வைத்திறன் பாதிப்பு கொண்ட 6 குழந்தைகள் உள்ளனர். ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், அவர்களது சேர்ந்திசை இதுபோன்ற வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வாய்ப்புகள் அற்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு சிறந்து உந்துசக்தியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
ஃபைன் ஆர்ட்ஸ் இனி எட்டாக் கனி அல்ல:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு நடனம், நாட்டியம், பாட்டு, ஓவியம் போன்ற நுண்கலைகளை கற்றுக் கொள்வது அவ்வளவு எளிதானதாக இல்லை.
இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் இத்தகைய கலைகளை கற்றுத் தருகிறது நாலந்தாவே பவுண்டேஷன்.
சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பள்ளிகளில் நாலந்தாவே பவுண்டேஷன் தனது சொந்த செலவில் ஆர்ட் லேப் (கலைக்கூடம்) அமைத்துள்ளது. அங்கு கற்றலுக்கு தேவையான உபகரணங்கள், பயிற்றுநர்கள் என அனைத்தையும் இந்த அமைப்பே ஏற்பாடு செய்து தருகிறது.
அரசுப் பள்ளிகள் மத்தியில் தங்களது இந்த சேவைக்கு அதிக வரவேற்பு இருப்பதாக கூறுகிறார் ஸ்ரீராம்.
தொடர்புக்கு:
NalandaWay Foundation
AH-206, 1st Floor,
3rd Street, Anna Nagar,
Chennai 600040. India
Phone: 91-44-43500127
Email: contact@nalandaway.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT