Published : 03 Jun 2017 10:04 AM
Last Updated : 03 Jun 2017 10:04 AM
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் தரப்படுத்தப்பட்டிருப்பது ஹார்வர்டு பல்கலைக்கழகம். ஆராய்ச்சிக் கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்டு 380 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் மிக்க இப்பல்கலைக்கழகத்தின் வழியான ஆய்வு முடிவுகளை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது.
இங்கே உலக மொழிகள் பலவற்றுக்கு ‘இருக்கை’ எனப்படும் ஆராய்ச்சித் துறை அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் நம் தமிழுக்கும் இங்கே ‘இருக்கை’ அமைவதற்கான முன்னெடுப்புகளை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழு (Harvard Tamil chair Inc) செய்துவருகிறது. இச்செயற்கரிய செயலில் ‘தி இந்து’ தமிழும் இணைந்து பணியாற்றிவருகிறது.
செம்மொழி ஒன்றுக்கு ஹார்வர்டில் இருக்கை அமைப்பது அத்தனை எளிதான செயல் அல்ல. ஹார்வர்டில் ‘இருக்கை’ அமைக்க வேண்டுமானால் அதற்காக அப்பல்கலைக்கழகம் வகுத்து வைத்திருக்கும் 11 அடிப்படைத் தகுதிகளை ஒரு செம்மொழி பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட தகுதி தமிழுக்கு இருக்கிறதா? புலம்பெயர்ந்து வாழும் குடும்பத்தைச் சேர்ந்த இந்தத் தமிழ் சிறுமியின் காணொளியைக் காணுங்கள்; நம் தமிழ் மொழியின் உலகத் தகுதியை அறிந்து ஒரு கணம் உறைந்துபோவீர்கள்..!
'ஹார்வர்டில்‘ இருக்கை’ அமைக்க அனுமதி கோரும் தகுதி செம்மொழிகளுக்கு மட்டுமே உண்டு. தற்போது உலகம் முழுவதும் 7,102 மொழிகள் பேசப்பட்டுவருகின்றன. இத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரு மொழி செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால் அம்மொழி 11 அடிப்படைத் தகுதிகளைக் கடந்துவர வேண்டும்.
அவை:
1. பல்லாயிரமாண்டு தொன்மை (antiquity)
2. வேறு எந்த மொழியிலும் காணப்படாத தனித் தன்மை (individuality)
3. பொதுவான எழுத்துகள் (common characters)
4. நடுநிலைத் தன்மை(Neutrality)
5. பிறமொழிகளுக்கு மூல மொழியாக இருக்கும் தாய்மைப் பண்பு (Parental kinship)
6.பண்பாட்டு வெளிப்பாடு (finding expression in the culture art and life experiences of civilized society)
7. பிற மொழிகள், இலக்கியங்கள் சாராமல் தனித்து இயங்கும் பண்பு ( The ability to function independently without any impact or influence of any other language and literature)
8. இலக்கிய வளமை (Literary prowess)
9. மேன்மையான கருத்துகள், குறிக்கோள்கள் (Nobel ideas and ideals)
10. கலை, இலக்கிய வெளிப்பாடுகளில் தனித்துவம் (Originally in artistic and literary expressions)
11. மொழியியல் கோட்பாடுகள்(Linguistics principles) ஆகியன.
சரி, இந்தத் தகுதிகள் அனைத்தையும் கொண்ட உலகச் செம்மொழிகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஒன்று… இரண்டு… மூன்று… நான்கு… அல்லது ஐந்து மொழிகள்…?
அதுதான் இல்லை… இந்த 11 தகுதிகளையும் கொண்ட மொழி… ஒன்றே ஒன்றுதான்!
அது நம் தமிழ் மொழி!
தமிழின் இந்தத் தகுதி ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்குப் பெரும் வியப்பைத் தந்துவிட்டது. தமிழின் பெருமையைப் பரப்பவும் அதைக் காக்கவும் அதற்கு ஹார்வர்டு பல்கலையில் இருக்கை அமைய வேண்டியது அவசியம். தமிழர்களாகிய நாம் அனைவரும் இணைவோம். ஹார்வர்டு தமிழ் இருக்கை குழுவுக்குக் கைகொடுப்போம் வாருங்கள்!
தொடர்புக்கு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT