Last Updated : 01 Feb, 2017 08:31 AM

 

Published : 01 Feb 2017 08:31 AM
Last Updated : 01 Feb 2017 08:31 AM

என்னருமை தோழி..! - 23: மனதில் பட்டதை பேசும் குணம்!

தான் வளர்க்கும் விலங்கை எம்.ஜி.ஆர். உங்களிடம் காட்டினார். நீங்கள் கண்டதோ, ஒரு கூண்டினுள், உறுமியபடி நின்ற சிங்கம் ஒன்றை. அரண்டு போன நீங்கள் என்ன இது, என்று கேட்க, ‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு காட்சியில் இந்த சிங்கத்துடன்தான் மோதப் போகிறேன். இவர்தான், சிங்கத்தை பயில்விக்கும் ட்ரெயினர்…’’ என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார்.

‘‘எதற்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண் டும்…?’’ என்று நீங்கள் கேட்டதற்கு, ‘‘தமிழக கலைகளை பற்றி ‘தில்லானா மோகனாம் பாள்’ பேசுகிறது என்றால், தமிழரின் வீரத்தை பற்றி நம் படம் பேச வேண்டும்..’’ என்றதோடு, ‘‘அம்மு.! நீயும் ‘அடிமைப் பெண்’ படத்திற்காக வாள் பயிற்சி எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும்..” என்று உங்களிடம் கூறினார்.

திடீரென்று ஒரு நாள், ‘‘அம்மு! நீ இந்த படத்தில் ஒரு பாட்டு பாடுகிறாய். வேங்கையன் என்ற அறிவு முதிர்ச்சி இல்லாத வாலிபனுக்கு, ஆசானாக விளங்கி அவனை ஒரு போராளியாக மாற்றும் பாத்திரம் உனக்கு. அம்மா, அப்பா, ஆசான், தெய்வம் ஆகியவர்களை அந்த பாத்திரத் துக்கு உணர்த்தும் ஒரு அற்புதமான பாட்டை கே.வி.மகாதேவன் இயற்றியிருக்கிறார்’’ என்று கூற, தாங்கள் தயங்கினீர்கள்.

என்றாலும், பாடல் ஒத்திகைக்குப் பின் நீங்கள் பாடிய அற்புதமான அந்தப் பாடல்தான்…பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்த ‘அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு...’ என்ற பாடல். குழைந்த குரலில் தாங்கள் பாடிய அந்தப் பாடல் தானே பிற்காலத்தில் உங்களுக்கு அம்மா என்கிற அந்தஸ்து வரப்போவதை அன்றே எடுத்துரைத்தது!

இந்த சமயத்தில்தான், தாயில்லாமல் நானில்லை பாட்டை பாடுவதற்காக டி.எம்.சவுந்தரராஜனை அணுகியபோது அவர் கூறிய கருத்து ஒன்று எம்.ஜி.ஆரை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

ன்னருமை தோழி …!

நீங்கள் மனதில் பட்டதை பேசும் குணத் தைக் கொண்டவர். ஆனால் திரை உலகமோ, உள்ளொன்று வைத்து புற மொன்று கூறுவதை வாடிக்கையாக கொண்ட ஒரு துறை. ‘தாயில்லாமல் நானில்லை... ’ பாடல் ஒளிப்பதிவுக்காக, டி.எம்.சவுந்தரராஜனை அணுகியபோது, அவர் கூறியதாக உலா வந்த கருத்து ஒன்று எம்.ஜி.ஆரை பெரும் அதிருப்திக்கு உள்ளாகியது.

‘‘எம்.ஜி.ஆரின் பெரும்புகழுக்கு, எனது குரல் உதவுகிறது’’… என்று டி.எம்.எஸ். கூறியதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. (எம்.ஜி.ஆருக்கு என் குரல் மிகப் பொருத்த மாக உள்ளது என்று மட்டுமே தான் கூறியதாக பின்னர் டி.எம்.எஸ். தெளிவு படுத்தியிருந்தார்) அதோடு, அவர் பாடு வதற்கு ஊதியத்தை அதிகமாக்கி கூறியதா கவும் எம்.ஜி.ஆருக்கு தகவல் போக, அவர், உடனே, ‘ஆயிரம் நிலவே வா...’ பாட்டை பாடியிருந்த எஸ்.பி. பாலசுப்ரமணி யத்தை வைத்தே ‘தாயில்லாமல் நானில்லை’ பாடலையும் ஒளிப்பதிவு செய்துவிட்டார்.

ஒரு நாள்… நீங்கள் பாடிய ‘அம்மா என்றால் அன்பு, ஆயிரம் நிலவே வா, மற்றும் தாயில்லாமல் நானில்லை’ ஆகிய பாடல்களை கேட்பதற்காக, எம்.ஜி.ஆர், இயக்குனர் சங்கர், எம். ஜி. சக்ரபாணி ஆகியோருடன் நீங்களும் ரெகார்டிங் தியேட்டருக்கு செல்ல, அங்கே, இசையமைப் பாளர் கே. வி. மகாதேவன் பாடல்களை ஒலிக்கச் செய்தார்.

சக்ரபாணியும், சங்கரும் எஸ்.பி.பி. பாடியிருந்த ‘தாயில்லாமல் நானில்லை…’ பாட்டை அருமையாக இருந்ததாக சொல்ல, நீங்களோ ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தீர்கள். இதை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். உங்களை நோக்கி, ‘‘அம்மு!... நீ என்ன சொல்றே?’’ என்று கேட்க, தாங்கள் மனதில் பட்டதை உடனே கூறிவிட்டீர்கள்.

‘‘எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் இளமையாக உள்ளது. ஆனால், டி.எம்.எஸ். குரல் இந்த சிச்சுவேஷனுக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும். பிரிந்திருந்த தன் தாயை பார்த்துவிட்டோம் என்று உணர்ச்சி பெருக்கில் ஹீரோ பாடும்போது, பாடுபவரின் குரல், மலைப்பாறையில் அருவிநீர் மோதுவது போல் உணர்ச்சி பொங்க இருக்க வேண்டும்…’’ என்றீர்கள். எல்லாரும் ஒரு கருத்தை கூறினாலும் பெரும்பான்மையோர் என்ன கூறுகிறார் கள் என்று பார்க்காமல், உங்களுக்கு சரி என்று தோன்றுவதை மட்டுமே கூறுவீர்கள். பின்னாளில் அரசியலிலும் இதை பின்பற்றினீர்கள்!

எம்.ஜி.ஆரிடம் ஒரு சிறந்த குணம், காட்சி நேர்த்தியாக வரவேண்டும் என்பதற்காக தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விடுவார். தாங்கள் இவ்வாறு கூறியதும், கே.வி. மகாதேவனிடம், ‘‘அம்மு சொல்றதும் சரிதான். டி.எம்.எஸ்ஸையே பாட வைப்போம்…’’ என்று கூறி மீண்டும் இப் பாடலை ஒலிப்பதிவு செய்தார். படத்தில் அந்தப் பாடலும் அதற்காக ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்ட காட்சியும் பெரும் வரவேற்பை பெற்றது! எஸ்.பி.பி.பாடிய இதே பாட்டின் வடிவமும் வெகு நாட்களுக்கு ஒலித்துக்கொண்டுதான் இருந்தது!

மொத்தத்தில்-

‘அடிமைப் பெண்’ திரைப்படம் வரலாற்றை படைக்க வேண்டும் என்கிற உத்வேகத்துடன் தயாரிக்கப்பட்டு வந்தது. திடீரென்று பேரிடியாக தமிழகத்தை தாக்கியது, முதல்வர் அண்ணாவின் மரணம். அவரது மரணம் எம்.ஜி.ஆரை பெரிதாக பாதிக்க, ‘அடிமைப் பெண்’ தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டது.

அரசியல் பரபரப்புகளுக்கு பிறகு, மீண்டும் ‘அடிமைப் பெண்’ படத் தயாரிப்பு விறுவிறுப்பு அடைந்தது. நீங்கள், எம்.ஜி.ஆர், ஜோதிலட்சுமி, இயக்குனர் சங்கர், மனோகர், அசோகன், சந்திர பாபு, சோ மற்றும் புஷ்பமாலா ஆகியோருடன், ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் ராஜஸ்தான் தார் பாலைவன பகுதிகளில் படப்பிடிப்புக்காக அப்போது முகாமிட்டிருந்தீர்கள். அங்கே உங்களுக்கு பல்வேறு அனுபவங்கள்!

கதாநாயகி ஜீவா பாத்திரத்தை ஏற்ற தாங்கள், இந்த படத்திற்காக பல சிரமங் களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. தார் பாலைவன மண்வெளியில் வெறுங்கா லுடன் தாங்கள் நடந்து போகும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனால், தங்கள் கால்களில் கொப்புளங்கள் வெடித்து, நடக்க முடியாமல் சிரமப்பட்டதாக கூறினீர்கள்.

பாலைவன இரவில், கடுங்குளிரில், நீங்கள் ‘ஏமாற்றாதே, ஏமாற்றாதே’ பாடலுக்கு ஆடிய முரசு நடனக்காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது. படத்தில் இந்த காட்சிக்கு பெரும் வரவேற்பு. எம்.ஜி.ஆரே இந்த பாடல் காட்சியில் உங்கள் கடின உழைப்பை நெகிழ்ந்து பாராட்டினார். இந்த பாடல் காட்சியின்போதுதான், படப் பிடிப்பில் சில நெருடல்களும் ஏற்பட்டன.

இந்தப் பாடலில் தாளத்துக்கேற்ப உடலில் சிறு சிறு முரசுகளை கட்டிக் கொண்டு அதை அடித்தபடி ஆடுவீர்கள். கதாநாயகன் வேங்கையனுக்கு ஆதரவாக, வைத்தியராக சந்திரபாபு, மணல்வெளியில் புதைந்து கொண்டு, ஒரு சிறு மூங்கில் குழாய் மூலமாக மூச்சு விட்டபடி பதுங்கியிருப்பார். நீங்கள் நடனமாடிக் கொண்டே சந்திரபாபு மூச்சு விடுவதற்காக மணல்வெளியில் வெளியே நீட்டிக்கொண்டி ருக்கும் மூங்கில் குழாயை மிதித்து விடுவது போல காட்சி அமைந்திருந்தது.

மணலினுள் புதைக்கப்படும்போது சந்திர பாபு, ஜோக் அடித்தார். ‘‘இன்னாங்கப்பா! நடிக்க ராஜஸ்தான் இட்டாந்துட்டு. பாலைவனத்துல சமாதி கட்டறீங்க!...’’என்று கூறிவிட்டார். அவர் ஜோக்காக சொன்னது, எம்.ஜி.ஆரிடம் தவறாக திரித்து சொல்லப் பட்டது. ‘மாடி வீட்டு ஏழை’ படம் தொடர்பாக ஏற்பட்ட மனக்கசப்புகள் இருந்தாலும், நீங்கள் கூறியதற்காகவே சந்திரபாபுவுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இந்நிலையில், சந்திரபாபுவின் ஜோக் அவரை புண்படுத்தி விட்டது. என்றாலும் அதை பெரிதுபடுத்தாமல் விட்டார்.

ஆனால்… ஒரு காட்சியில் பாலைவன மணல்வெளியில் எம்.ஜி.ஆரை தேடியபடி வைத்தியராக சந்திரபாபு வர வேண்டிய காட்சி படமாக்கப்பட்டது. அப்போது சந்திர பாபு செய்த ஒரு செயல் தங்களை பதட்டப் பட செய்ததோடு, எம்.ஜி.ஆரின் பொறுமை யையும் மிகவும் சோதித்துவிட்டது.

- தொடர்வேன்...
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x