Published : 21 Mar 2017 09:57 AM
Last Updated : 21 Mar 2017 09:57 AM
தமிழ் வளர்த்த வள்ளல்
நான்காம் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்த, சிறந்த தமிழறிஞரும் மன்னர் வம்ச வாரிசுமான பாண்டித்துரைத் தேவர் (Pandithurai Thevar) பிறந்த தினம் இன்று (மார்ச் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தார் (1867). ராமநாதபுரம் மன்னர் வழித்தோன்றலான தந்தை இசைமேதை. பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சிறுவனை வளர்க்கும் பொறுப்பை அவரது ஏஜன்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார். புலவர் அழகர் ராஜா தமிழும் வக்கீல் வெங்கடேஸ்வர சாஸ்திரி ஆங்கிலமும் கற்றுத் தந்தனர்.
* சிவர்டிஸ் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். தமிழ்மொழியில் ஆழ்ந்த பற்றும் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டிருந்தார். திருக்குறளில் பல இடங்களில் எதுகை, மோனை சரியாக அமையவில்லை என்றும் அதையெல்லாம் திருத்தி எழுதி சரியான திருக்குறளை அச்சிட்டிருப்பதாக ஒரு ஆங்கிலேய பாதிரியார் இவரிடம் கூறினார்.
* திருக்குறளைப் புரிந்துகொள்ளாத அவரது அறிவீனத்தை உணர்ந்து, உடனே அவரிடமிருந்து அச்சிடப்பட்ட நூல்கள், கையெழுத்துப் பிரதி அனைத்தையும் விலைகொடுத்து வாங்கி அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டாராம்!
* தமிழுக்குப் புத்துயிரூட்டவும், தமிழை வளர்க்கவும் தமிழ்ச்சங்கம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தார். தமிழ்க் கல்லூரிகள் தொடங்குதல், சுவடிகள், நூல்களைத் தொகுத்து வெளியிடுதல், பிறமொழி நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுதல், தமிழாராய்ச்சிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு, பாஸ்கர சேதுபதியின் முன்னிலையில், இவரது தலைமையில் மதுரையில் 1901-ல் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது.
* தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான தமிழறிஞர்கள் இதன் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இது ‘நான்காம் தமிழ்ச் சங்கம்’ என வரலாற்றில் முத்திரை பதித்தது. இவர் இதன் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். சங்கம் சார்பில் ‘செந்தமிழ்க் கலாசாலை’ என்ற தமிழ்க் கல்லூரி, பாண்டியன் நூலகம், தமிழ் ஆய்வு மையம் ஆகியவற்றையும் தொடங்கினார்.
* தந்தையின் மாளிகைக்கு அருகே இவர் கட்டிய ‘சோமசுந்தர விலாச மாளிகை’, தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் நிறைந்திருக்கும் கலை, இலக்கியக்கூடமாகத் திகழ்ந்தது.
* ஆறுமுக நாவலரின் உதவியோடு பல அரிய நூல்களை ஏட்டுச்சுவடிகளிலிருந்து அச்சில் பதிப்பித்தார். சிங்காரவேலு முதலியார் சேர்த்து வைத்திருந்த கலைக்களஞ்சிய அகராதிக்கான தகவல்களைத் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலாக வெளியிட பொருளுதவி செய்தார்.
* தேவாரத் திருமுறைப் பதிப்புகள், சிவஞான ஸ்வாமி பிரபந்தத் திரட்டு, சிச்சமவாதவுரை மறுப்பு உள்ளிட்ட நூல்களை வெளியிடச் செய்தார். பன்னூற்றிரட்டு, சைவ மஞ்சரி உள்ளிட்ட ஏராளமான நூல்களைத் தாமே தொகுத்து வெளியிட்டார். இவர் இயற்றிய காவடிச் சிந்து மிகவும் புகழ் வாய்ந்தது.
* தமிழ்ச்சங்கம் சார்பில் வெளிவந்த செந்தமிழ் இதழில், உ.வே.சா., ராகவையங்கார், அரசன் சண்முகனார், ராமசாமிப் புலவர், சபாபதி நாவலர், சுப்பிரமணியக் கவிராயர் உள்ளிட்ட தமிழறிஞர்களின் படைப்புகள் வெளிவந்தன. வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் திட்டத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியை அள்ளிக்கொடுத்த தேசபக்தர்.
* மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர், தலைமைப் புலவர், செந்தமிழ் கலாவிநோதர், தமிழ் வளர்த்த வள்ளல், செந்தமிழ்ச் செம்மல் என்றெல்லாம் போற்றப்பட்ட தமிழ்க்காவலர். குறுகிய கால வாழ்நாளுக்குள் பைந்தமிழ் வளர்ச்சிக்கு அசாத்தியமான பங்களிப்பை வழங்கிய பாண்டித்துரை தேவர் 1911-ம் ஆண்டு 44-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT