Published : 07 Sep 2016 10:15 AM
Last Updated : 07 Sep 2016 10:15 AM
பிரபல மலையாள நடிகர்
தேசிய விருதை மூன்றுமுறை வென்ற பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி (Mammootty) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் அருகே நடுத்தரக் குடும்பத்தில் (1951) பிறந்தவர். இயற்பெயர் முகமது குட்டி. தந்தை விவசாயி. பள்ளிப் பருவத்திலேயே குடும்பம் எர்ணாகுளத்தில் குடியேறியது. எர்ணாகுளம் புனித ஆல்பர்ட்ஸ் பள்ளி, அரசுப் பள்ளியில் பயின்றார்.
*கொச்சி மஹாராஜாஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, சட்டப் பயிற்சியும் பெற்றார். 1971-ல் கல்லூரியில் படித்தபோது, ‘அனுபவங்கள் பாலிச்சகள்’ என்ற படத்தில் நடித்தார். 1973-ல் ‘காலச்சக்கரம்’ படத்தில் நடித்தார். இவை பெரிதாக பேசப்படவில்லை. 1979-ல் முன்னணி வேடத்தில் நடித்த ‘தேவலோகம்’ திரைப்படம் திரையிடப்படவே இல்லை.
*எம்.ஆசாத் 1980-ல் இயக்கிய ‘வீல்கனுண்டு ஸ்வப்னங்கள்’தான் இவரது முதல் குறிப்பிடத்தக்க திரைப்படம். தொடர்ந்து கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய ‘மேலா’ திரைப்படத்தில் நடித்தார். ‘த்ருஷ்ணா’ இவருக்கு கதாநாயக அந்தஸ்தை வழங்கியது. 1982-ல் நடித்த ‘யவனிகா’ என்ற த்ரில்லர் படம் இவருக்கு பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.
*தொடர்ந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றிகளை ஈட்டி, மலையாளத் திரையுலகின் வெற்றி நாயகனாக இவரை உயர்த்தின. தமிழ், இந்தி, தெலுங்கிலும் முத்திரை பதித்தார். 1989-ல் ‘மவுனம் சம்மதம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
*‘தளபதி’, ‘கிளிப்பேச்சு கேட்கவா’, ‘மக்களாட்சி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ஆனந்தம்’ ஆகியவை தமிழில் குறிப்பிடத்தக்கவை. 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘மதிலுகள்’ என்ற இவரது திரைப்படம் சுமார் 40 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. ‘டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர்’ படத்தில் நடித்த இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
*தொடர்ந்து சினிமா, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சித் தயாரிப்பு, விநியோக நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கேரள அரசின் அட்சயா தகவல் தொழில்நுட்ப விரிவாக்கத் திட்டத்தின் நல்லெண்ணத் தூதராகவும் செயல்படுகிறார்.
*மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர். குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் பிச்சை தொழில் ஒழிப்பு, ஏழைகள் மறுவாழ்வு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும் பல்வேறு அமைப்புகளில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
*இவரது ரசிகர் மன்றம் சார்பில் இலவச கண் பாதுகாப்பு மற்றும் சிசிச்சை முகாம்கள் நடத்தப்படுகின்றன. பல ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘காழ்ச்சப்பாடு’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.
*பத்மஸ்ரீ விருது, 3 முறை தேசிய விருது, 5 முறை மாநில அரசின் விருது, 10-க்கும் மேற்பட்ட ஃபிலிம்ஃபேர் விருதுகள், 10-க்கும் மேற்பட்ட கேரள ஃபிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகள், 5 முறை ஏஷியாநெட் திரைப்பட விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். கோழிக்கோடு மற்றும் கேரள பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன.
*இன்று 65 வயதை நிறைவு செய்யும் மம்மூட்டி, வெள்ளித்திரையில் மட்டுமின்றி, பல்வேறு நலப்பணிகளைச் செய்துவருவதன் மூலம் நிஜ வாழ்விலும் கேரளாவின் சூப்பர் ஸ்டாராக போற்றப்படுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT