Published : 19 Sep 2016 02:15 PM
Last Updated : 19 Sep 2016 02:15 PM
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை அறிவித்துள்ளது. "என் மகனை கொலை செய்துவிட்டனர்" என, ராம்குமாரின் தந்தை பரமசிவன் கதறி அழுதபடி தெரிவித்துள்ளார். ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார். இவை குறித்த இணையவாசிகளின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்பது நிரூபிக்கப்பட்டது.
சுவாதி கொலையின்போது ராம்குமார் மீது ஆத்திரப்பட்ட பெரும்பான்மையினரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமே, நம்மை ஆளும் அரசுக்கும் மக்களுக்கும் இடைப்பட்ட தொலைவினைக் காட்டுகிறது.
ராம்குமார் சிறையில் மர்ம மரணம், ஏன்?
இரண்டே காரணம்தான் இருக்க முடியும்.
1) சுவாதி கொலையை இத்தோடு இழுத்து மூடுவது
2) காவிரிப் பிரச்சனையைப் பேச விடாமல், ராம்குமார் மரணம் பற்றி விவாதத்தைத் திருப்புவது.
ராம்குமார் செத்துடுவான்னு தெரியும், எப்போ எப்படி சாவான்னு தெரியாம யோசிச்சிட்டு இருந்தவங்க எவ்ளோ பேர்?? அவ்ளோ பேர் இந்த நீதிமன்றத்துமேலயும், காவல்துறை மேலயும், அரசாங்கத்தின் மேலயும் நம்பிக்கை இழந்திருக்கோம். அவ்ளோதான்.
சற்று முன் அரசின் உணவு தானியக் கிட்டங்கி மேல் நூற்றுக் கணக்கான புறாக்கள் பறந்துகொண்டு இருந்தன.
நேற்றிரவு ராம்குமார் பற்றிய செய்தி அறிந்ததும் ஆயிரம் ஆயிரம் கழுகுகள் பறப்பதாக நான் உருவகித்துக்கொண்ட அதே வானம் தான் இது. என் காலடித் தரையை சதா யாராவது உருவிக்கொண்டே இருக்கிறார்கள்.
கரண்ட் கம்பியைக் கைதிகள் கடிக்கும் அளவுக்கோ அல்லது உடலில் செலுத்திக்கொள்ளும் அளவுக்கா சிறைச்சாலைகள் இருக்கின்றன!? லாக் அப் மரணங்களின் பரிணாம வளர்ச்சி புல்லரிக்க வைக்கிறது...!
"ஸ்வாதி கொலை வழக்கு - மர்மங்கள் விலகும் நேரம்" என்று இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிடுவார். ஒரு இயக்குனர் அந்த புத்தகத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குவார். படம் தேசிய விருதுகூட பெறலாம். இப்பொழுது இருக்கும் சிலர் அப்பொழுது இல்லாமல் போகலாம்.
மீதம் இருக்கும் பலர் புத்தகத்தை படித்துவிட்டோ படத்தை பார்த்துவிட்டோ - "அட பாவமே. இதான் உண்மையா நடந்ததா?. இப்படி எல்லாம் நம்பள ஏமாத்திட்டாங்களே. பாவம் ராம்குமார்" என்று அடுத்த புத்தகத்தை படிக்கவோ படத்தை பார்க்கவோ சென்றுவிடுவோம். ஆனால் ராம்குமாரின் தாய் தந்தை மற்றும் சகோதரிகளுக்கு ஏற்பட்ட இழப்பு?. யார் சரி செய்வார். அவர்களுக்காக குரல் கொடுப்போம். இப்பொழுது. இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு அல்ல.
சுவாதியை கொன்றதாகக் கைது செய்யப்பட்டபோது ராம்குமார் மீது எவருக்கும் குறிப்பாக அவர் சார்ந்த சமூகத்திற்கு கூட துளியும் கருணை இருந்திருக்க வாய்ப்பில்லை.. ஆனால் இப்போது சிறையில் நிகழ்ந்த ராம்குமாரின் மர்ம மரணம் யாரையோ காப்பாற்ற ஒருவனை பிடித்துவந்து பலி கொடுத்துவிட்டார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது.
நிரபராதி என நிரூபித்து விடுதலை ஆனவர்கள் உண்டு. கொல்லப்படுவதன் வாயிலாகவும் நிரபராதியாக முடியும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
எப்படியும் சிறைத்துறை தனது ஆதாரத்திற்காக பல்வேறு கோணங்களில் படமெடுத்திருக்கும். அப்படம் ஆயிரம் தகவல் தரும்.
ராம்குமார் உடன் சில உண்மைகளும் செத்துவிட்டது.
கரண்டு கம்பிய தொட்டாலே ஷாக் அடிக்கும். ராம்குமார் எதுக்கு போய் கடிக்கணும். #Note this point
பாதுகாப்பான சிறைக்குள் ஒருத்தனால் தற்கொலை செய்ய முடியுமாம். அதிகாரத்தின் கோரக்கரங்களை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. நாளை யாருக்கு வேண்டுமானாலும் இது நிகழலாம். அவர்தான் கொலையாளியா என்கிறதெல்லாம் இரண்டாம் பட்சம். சிறை பாதுகாப்பானது என்கிற பொய்யை எத்தனை நாள் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்?
சுவாதியை கொலையில் கைது செய்தபோது கொடூரனாக தெரிந்த ராம்குமார் இன்று இறந்த பிறகு நல்லவனாக தெரிகிறார். அவர் அப்படியேதான் இருக்கிறார். ஆனால் நாம் பார்க்கும் கண்ணோட்டம்தான் காலத்திற்கு தகுந்தாற்போல் மாறிவிடுகிறது.
இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், ராம்குமார் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இனி ராம்குமார்தான் குற்றவாளியா, ராம்குமார் மட்டும்தான் குற்றவாளியா, அல்லது நிஜமாகவே காதல் தோல்விதான் பின்னணியா, விசாரணை சரியாகத்தான் நடந்ததா என்ற பல கேள்விகளுக்கு பதில் தெரியாமலே போய்விடும். அந்த பதில்களை முழுதாகத் தேடும்படி அரசை நிர்ப்பந்திக்காத நாம், சுவாதிக்கோ இனிமேல் உயிர் விடப்போகும் பெண்களுக்கோ எந்த நியாயத்தையும் செய்யவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT