Published : 03 May 2017 09:59 AM
Last Updated : 03 May 2017 09:59 AM
நோபல் பெற்ற இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து அறிவியலாளர் சர் ஜார்ஜ் பேஜட் தாம்சன் (Sir George Paget Thomson) பிறந்த தினம் இன்று (மே 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் நகரில் (1892) பிறந்தார். இவரது தந்தையும் இயற்பியலாளர். இயற்பியலுக்கான நோபல் பரிசையும் வென்றவர். அவரைப் போலவே மகனுக்கும் சிறு வயது முதலே அறிவியலில் ஆர்வம் பிறந்தது.
* பெர்ஸ் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். சிறுவனாக இருக்கும்போது படகுகள், நீர்மூழ்கிக் கப்பல்களின் மாதிரிகளைத் தயாரித்து, குளத்தில் ஓடவிடுவார். பீரங்கிகள், தோட்டாக்கள்கூட தயாரித்தார். இயந்திரங்கள் இயங்கும் விதம் குறித்து நிறைய கேள்விகள் கேட்பார்.
* இலக்கியம், மொழியில் சிறந்து விளங்கினார். கேம்ப்ரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதம், இயற்பியல் பயின்றார். பட்டப்படிப்பு முடிந்ததும், அப்பாவுடன் சேர்ந்து இயற்பியல் கேவிண்டிஷ் ஆய்வுக்கூடத்தில் இணைந்தார். அங்கு முதுகலைப் பட்டம் பெற்றார். தந்தையின் வழிகாட்டுதலுடன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
* மூலக்கூறுகள், காற்று இயக்கவியல் குறித்து ஆராய்ந்தார். முதல் உலகப் போரில் ஃபான்பரோ என்ற இடத்தில் இங்கிலாந்து ராணுவத்தில் இயற்பியலாளராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. அங்கு காற்று இயக்கவியலில் இவரது பங்களிப்பைப் பாராட்டி, 1916-ல் கவுரவமிக்க ஸ்மித் பரிசு வழங்கப்பட்டது. விமானம் ஓட்டவும் கற்றுக்கொண்டார்.
* ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, கேம்ப்ரிட்ஜில் ஃபெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு ஆய்வு மேற்கொண்டார். உலகப் போருக்குப் பிறகு, விமான உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது, பயன்பாடு காற்று இயக்கவியல் குறித்த தனது முதல் நூலை எழுதினார்.
* லித்தியத்தின் 2 ஐசோடோப்களான பாசிட்டிவ், அனோட் இருப்பைக் கண்டறிந்தார். பின்னர், அணு உமிழ்வு, அணுக்கரு இணைவு குறித்த ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தினார். இங்கிலாந்தில் இதுகுறித்த விரிவான ஆய்வுகளைத் தொடங்கச் செய்தார். பின்னர் அபெர்தீன் பல்கலைக்கழகத்தில் இணைந்து, எலெக்ட்ரான் மற்றும் அதன் அலைப் பண்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
* எலெக்ட்ரான் சிதறல் மூலம் அதன் அலைப் பண்புகளைக் கண்டறிந்தார். இதற்காக இவருக்கும், அதே நேரத்தில் இதேபோன்ற ஆய்வுகளில் ஈடுபட்டு, இதே கண்டுபிடிப்பை நிகழ்த்திய அமெரிக்க விஞ்ஞானி கிளின்டன் ஜோசப் டாவிஷனுக்கும் 1937-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* இம்பீரியல் லண்டன் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக 1930-ல் இணைந்தவர், 22 ஆண்டுகாலம் அங்கு பணியாற்றினார். பின்னர், கார்ப்பஸ் கிறிஸ்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், நிர்வாகியாகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பிறகு, அணு ஆற்றல் தொடர்பான பிரிட்டிஷ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
* அப்போது அமெரிக்கா சென்று, அணுகுண்டு தயாரிப்பின் சாத்தியக் கூறுகள் குறித்த தனது அறிக்கையை விஞ்ஞானிகளிடையே வாசித்தார். போருக்குப் பிறகு, கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப ஆற்றல் எதிர்வினைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். பிரிட்டிஷ் அணுசக்தி ஆணைய ஆலோசகராகவும் செயல்பட்டார். ராயல் சொசைட்டியின் ஃபெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* பல பதக்கங்கள், பரிசுகளை வென்றார். ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். இறுதிவரை ஆராய்ச்சிகளை மேற்கொண்டவரும், சோதனை இயற்பியல் களத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியவருமான சர் ஜார்ஜ் பேஜட் தாம்சன் 83-வது வயதில் (1975) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT