Published : 12 Jan 2017 11:47 AM
Last Updated : 12 Jan 2017 11:47 AM
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சில படங்களுக்கு மட்டும் வரவேற்பும் அங்கீகாரமும் குறையவே குறையாது. அதற்கு இன்றும் சரியான உதாரணம் ‘பாட்ஷா’. 1990-களில் வந்த ரஜினியின் ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்று. ரஜினியின் படம் என்றாலே தியேட்டர்கள் திருவிழாக் கோலம் காண்பதும், ரசிகர்களின் எல்லையில்லா ஆரவாரமும் புதிதல்ல. ஆனால், 22 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தக் காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் பதிப்பில் வெளியாகியுள்ள ‘பாட்ஷா’வுக்கும் அதே வரவேற்பு கிடைக்கிறது என்றால் அதுதான் ‘பாட்ஷா’வின் சிறப்பு.
குறையாத உற்சாகம்
சத்யா மூவிஸின் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணாவின் விறுவிறு திரைக்கதை, ஸ்டைல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என மிரட்டிய ரஜினியின் நடிப்பு, ரகுவரனுக்கே உரிய வில்லத்தனம், உள்ளத்தை ஊடுருவிச் செல்லும் தேவாவின் சூப்பர் இசை என ரசிகர்களின் மனங்களில் எப்போதும் சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும் ‘பாட்ஷா’ பொங்கல் திருநாளையொட்டி 1995 ஜனவரி 12 அன்று வெளியானது. சத்யா மூவிஸ் தொடங்கி 50 ஆண்டுகள் ஆனதன் ஒரு பகுதியாக, அந்த நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றிப் படமான ‘பாட்ஷா’ இன்று 5.1 டிஜிட்டல் ஒலி அமைப்பில் மாறியிருக்கிறது. மீண்டும் அந்தப் படம் பொங்கல் திருநாளையொட்டி ரசிகர்களைத் தெறிக்கவிட வருகிறது. ‘பாட்ஷா’வின் டிஜிட்டல் பதிப்புக்கு ரசிகர்களிடம் கிடைத்த பெரிய வரவேற்பைச் சென்னை சத்யம் சினிமாஸில் பார்க்க முடிந்தது.
அதிரும் ஆரவாரம், ரசிகர்களின் உற்காச ஆட்டம் பாட்டத்துடன் மாணவப் பருவத்தில் முதல் நாளில் ‘பாட்ஷா’படம் பார்த்து பரவசம் அடைந்த நான், டிஜிட்டல் வடிவில் முதல் காட்சியைப் பார்க்க நேர்ந்ததும் இனிய அனுபவம்தான். 22 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் படத்தை முதல் நாள் பார்த்தபோது கிடைத்த அனுபவத்தை இன்றும் தியேட்டரில் பார்த்தபோது உணர முடிந்தது. அதுதான் ‘பாட்ஷா’வின் மாயாஜாலம்.
படம் பார்க்க வந்திருந்தவர்களில் பெரும்பாலோனர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். இந்தப் படம் வந்தபோது குழந்தைகளாகவோ, சிறுவர்களாகவோ அவர்கள் இருந்திருப்பார்கள். பாடல் காட்சி, ரஜினி அறிமுகக் காட்சி, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ என்று ரஜினி சொல்லும் காட்சி, பூட்ஸ் ஓசையுடன் ரஜினி நடந்து வரும் காட்சி, மாணிக்கம் பாட்ஷாவாக மாறும் காட்சி, ரஜினி - ரகுவரன் சந்திக்கும் காட்சிகள் வருவதற்கு முன்பே ரசிகர்களின் ஆரவாரம் காதுகளைக் கிழித்தது. ரஜினி என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் முத்திரை வசனமான ‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என்ற வசனத்துக்குக் கை தட்டல்களும் ஆரவாரமும் உண்மையிலேயே அரங்கை அதிரவைத்தன. அந்த அளவுக்குத் தலைமுறையைத் தாண்டி ரசிகர்களின் மனங்களில் ‘பாட்ஷா’வின் ஒவ்வொரு காட்சியும் ஆழப் பதிந்திருக்கிறது. பாட்ஷாவைப் பலமுறை பார்த்த ரசிகர்கள், இன்றும் அந்தத் திரைப்படத்தின் வசனங்களையும் பாடல்களையும் கேட்டு அதீத உற்சாகம் அடைகிறார்கள் என்றால் அது ‘பாட்ஷா’வுக்கே உரிய தனிச் சிறப்பு.
டிஜிட்டல் இசை
ரஜினியைத் தாண்டிப் படத்தின் மிகப் பெரிய பலம் தேவாவின் இசை. ஒவ்வொரு காட்சியிலும் தேவாவின் பின்னணி இசை, காட்சியின் தன்மையையும் சில காட்சிகளின் உச்சக்கட்டத் தீவிரத்தையும் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. படத்தையோ, காட்சியையோ பார்க்காமல் ‘பாட்ஷா’படத்தை நினைத்தாலே நம் மூளையில் அந்தப் படத்தின் பின்னணி இசை கோவையாக ஒலிப்பதைப் பலரும் உணர்ந்திருப்பார்கள். அப்படிப் பதிந்துவிட்ட தேவாவின் இசை, டிஜிட்டல் வடிவத்துக்கு ஏற்பப் புதிதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக தேவா மீண்டும் டிஜிட்டல் இசையை அமைத்திருக்கிறார். டிஜிட்டல் வடிவில் கேட்கும்போது அந்த வித்தியாசத்தை இன்னும் கூடுதலாக உணர முடிகிறது.
தொடக்கங்கள் பல
சத்யா மூவிஸுக்குப் பெயர் பெற்றுத் தந்த படம். 1996-ல் அரசியல் மாற்றத்துக்குப் பிள்ளையார் சுழிப் போட்ட படம். ‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி’ என்று ரஜினி சொல்வதைப் போல நூறு முறை இந்தப் படத்தைப் பார்த்தாலும் முதல் தடவை பார்ப்பதுபோல அலுக்காது என்பதை இந்த டிஜிட்டல் அவதாரத்தின் முதல் காட்சி நிரூபித்தது. இந்தப் படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பு, காலத்தால் மறக்கடிக்க முடியாத பல படங்கள் டிஜிட்டல் வடிவில் வெளி வருவதற்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT